அக்டோபர் 15 முதல் 21-க்குள் தொடங்க வாய்ப்பு:
அக்டோபர் மாதம் தொடங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை எப்போது தொடங்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக இந்திய வானிலை ஆய்வு மையம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதத்தின் இரண்டாம் பாதியில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக அக்டோபர் 15 முதல் 21ஆம் தேதிக்குள் பருவமழை தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
பருவமழை தொடங்கிய பின்னர், அக்டோபர் முதல் டிசம்பர் வரை சுமார் 3 மாதங்களுக்கு தென்னிந்திய தீபகற்ப பகுதிகளில் இயல்பை விட அதிகமான மழைப்பொழிவு பதிவாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மத்திய, மாநில அரசுகள் அடுத்த 15 நாட்களில் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் அதிக மழைக்கு வாய்ப்பு:
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் பொது இயக்குநர் மிருதுஞ்சய் மோகபத்ரா கூறுகையில், நடப்பு வடகிழக்கு பருவமழைக் காலத்தில் தென்னிந்திய தீபகற்ப பகுதிகளில் இயல்பை விட அதிக மழை பெய்யக்கூடும் என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு மற்றும் கேரளாவின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், குறிப்பாக அக்டோபர் மாதத்தில் தமிழ்நாடு மத்திய மற்றும் வடக்கு மாவட்டங்களில் இயல்பை விட அதிக மழைப்பொழிவு இருக்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எல் நினோ தாக்கம் தொடரும்:
இதற்கிடையே, எல் நினோ தாக்கம் குறித்தும் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வரும் நவம்பர் மாதத்தில் எல் நினோவின் தாக்கம் உச்சத்தை அடையக்கூடும் என்றும், அதன் தாக்கம் 2027 மார்ச் மாதம் வரை தொடர வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த கால தரவுகளை பார்க்கும்போது, 2001ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு எல் நினோ ஆண்டுகளில் வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். கடந்த 20 ஆண்டுகளாக இந்த நிலை கவனிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.
ஜூன் முதல் செப்டம்பர் வரை குறைவான மழை:
தமிழ்நாடு நடப்பு ஆண்டு ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான காலகட்டத்தில் சுமார் 26 செ.மீ மழை பதிவாகியுள்ளது. இது இயல்பான அளவை விட 20 சதவீதம் குறைவாகும்.
சென்னையில் 38 செ.மீ மழை பதிவாகியுள்ள நிலையில், இது இயல்பை விட 15 சதவீதம் குறைவு. திருவள்ளூரில் 32 செ.மீ மழை பதிவாகி 32 சதவீதமும், செங்கல்பட்டில் 18 செ.மீ பதிவாகி 54 சதவீதமும், காஞ்சிபுரத்தில் 29 செ.மீ பதிவாகி 38 சதவீதமும் இயல்பை விட குறைவாக உள்ளது.
எனவே, கடந்த மாதங்களில் குறைவான மழைப்பொழிவை சந்தித்த வடதமிழ்நாடு மாவட்டங்களில், வரவிருக்கும் வடகிழக்கு பருவமழை காலத்தில் நல்ல மழை கிடைக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

