ஒரு பல்கலைக்கழகம்… ஒரு பிராந்தியத்தின் கல்வி மையம்!
சென்னைப் பல்கலைக்கழகத்தின் தாக்கம் சென்னை நகரத்துக்குள் மட்டும் நின்றுவிடவில்லை. பல ஆண்டுகளாக அதன் கல்வி எல்லை மிகப் பரந்ததாக இருந்தது. 1923-ஆம் ஆண்டில் அதன் எல்லைகள் ஆந்திரா, ஹைதராபாத், மங்களூர், மைசூர், கேரளா, திருவனந்தபுரம் உள்ளிட்ட பல பகுதிகளை உள்ளடக்கியிருந்தன.
அந்த காலகட்டத்தில் தமிழகத்தில் மட்டுமல்லாமல் தென்னிந்தியாவின் பல பகுதிகளிலும் உயர்கல்வி வளர்ச்சிக்கான முக்கிய ஆதாரமாக சென்னைப் பல்கலைக்கழகம் செயல்பட்டது. பின்னர் பிராந்தியங்களுக்கென தனித்தனி பல்கலைக்கழகங்கள் உருவாகத் தொடங்கியபோது, அதன் பரந்த கல்விப் பரப்பு படிப்படியாகப் பிரிக்கப்பட்டது.

விதையாகி வளர்ந்த பல்கலைக்கழகங்கள்!
சென்னைப் பல்கலைக்கழகத்தின் வரலாற்றில் குறிப்பிடத்தக்க அம்சங்களில் ஒன்று அதன் கல்வி மரபிலிருந்து பல்வேறு பல்கலைக்கழகங்கள் உருவாகியிருப்பதாகும்.
1916-ல் மைசூர் பல்கலைக்கழகம், 1918-ல் உசுமானியா பல்கலைக்கழகம், 1926-ல் ஆந்திரப் பல்கலைக்கழகம், 1929-ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் ஆகியவை உருவாகின. தொடர்ந்து 1937-ல் திருவாங்கூர் பல்கலைக்கழகம், 1943-ல் உத்கல் பல்கலைக்கழகம், 1954-ல் திருவேங்கடவன் பல்கலைக்கழகம் ஆகியவை உருவாகின.
தமிழகத்திலும் இதன் கல்வி மரபின் தொடர்ச்சியாக மதுரை காமராசர் பல்கலைக்கழகம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், அண்ணா பல்கலைக்கழகம், பாரதிதாசன் பல்கலைக்கழகம், பாரதியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல உயர்கல்வி நிறுவனங்கள் உருவாகின.
இதனால் சென்னைப் பல்கலைக்கழகத்தை ஒரு தனி கல்வி நிறுவனமாக மட்டுமே பார்க்க முடியாது. பல தலைமுறைகளின் உயர்கல்வி வளர்ச்சிக்கான ஒரு முக்கியமான கல்வி மரபின் தொடக்கப்புள்ளியாகவும் பார்க்க முடிகிறது.
தன்னாட்சிக் கல்விக்கு வழிகாட்டிய முயற்சி!
கல்வி வளர்ச்சியுடன் கல்வி நிறுவனங்களின் தன்னாட்சிக்கும் முக்கியத்துவம் அளித்த நிறுவனமாக சென்னைப் பல்கலைக்கழகம் விளங்கியது. தன்னாட்சிக் கல்லூரிகளை முதன்முறையாக அறிமுகப்படுத்திய பல்கலைக்கழகமாகவும் இது குறிப்பிடப்படுகிறது. கல்லூரிகளுக்கு கல்விசார் சுதந்திரம் வழங்கும் இந்த அணுகுமுறை, உயர்கல்வியில் புதிய மாற்றங்களுக்கு வழிவகுத்தது. காலப்போக்கில் மருத்துவம், பொறியியல், சட்டம் போன்ற துறைகள் தனித்தனி பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களுடன் இணைக்கப்பட்டன. இதன் மூலம் தமிழ்நாட்டின் உயர்கல்வி அமைப்பு மேலும் விரிவடைந்தது.