கடந்த செவ்வாய்க்கிழமை அதிகாலை கங்குலியின் பெஹாலா இல்லத்தில் படப்பிடிப்பு தொடங்கியது.
இதில் நடிகர் ராஜ்குமார் ராவ் சிவப்பு நிற ட்ராக்சூட் அணிந்து இளம் வயது ‘தாதா’வாக நடித்த காட்சிகள் இணையத்தில் கசிந்து வைரலாகி வருகின்றன.
ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் இந்த ஐபிஎல் சீசனின் போட்டிகள் கடந்த ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, படக்குழுவினர் மைதானத்திற்குள் படப்பிடிப்பை நடத்தியிருக்கிறார்கள்.

கங்குலியின் கிரிக்கெட் வாழ்க்கையின் மிக முக்கியமான திருப்புமுனைகள் மற்றும் லார்ட்ஸ் மைதானத்தில் ஜெர்சியைக் கழற்றி அவர் கொண்டாடிய வரலாற்றுத் தருணம் உள்ளிட்ட பல முக்கியக் காட்சிகள் இங்குப் படமாக்கப்படவுள்ளன.
பெஹாலாவில் உள்ள தனது இல்லத்திலும், ஈடன் கார்டன்ஸ் மைதானத்திலும் படப்பிடிப்பு நடந்தபோது சௌரவ் கங்குலி நேரில் வந்து படக்குழுவினரைச் சந்தித்துள்ளார்.
விக்ரமாதித்யா மோத்வானே இயக்கும் இத்திரைப்படத்திற்குப் பிரபல இசையமைப்பாளர் ப்ரிதம் இசையமைக்கிறார்.
கங்குலியின் மனைவி டோனா கங்குலியின் இளம் வயது கதாபாத்திரத்தில் சோனார்பூரைச் சேர்ந்த 7-ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீஜாவும், அவரது முதிர்ந்த கதாபாத்திரத்தில் தான்யா மணிக்தலாவும் நடிக்கிறார்கள். மேலும், கங்குலியின் தாயாராக அபராஜிதா அத்யாவும், தந்தையாக சாஸ்வதா சாட்டர்ஜியும் நடிக்கிறார்கள்.