அனைத்து பேருந்துகளும் பழைய பேருந்து நிலையத்துக்கு வந்து செல்ல வேண்டுமென்று வியாபாரிகளும், பொதுமக்களும் அரசிடம் கோரிக்கை வைத்தும், போராட்டம் நடத்தியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதனால் தருமபுரிக்கு வரும் வெளியூர் மக்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வந்தார்கள். அதிலும் இரவு நேரத்தில் புதிய பேருந்து நிலையத்திலிருந்து நகருக்குள் வர போதிய இணைப்பு பேருந்து வசதி இல்லாமல், ஆட்டோவிற்கு அதிக தொகை செலவழிக்க வேண்டியிருந்தது.

நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலிலும் இந்த பிரச்னை பெரிதாக எதிரொலித்தது. “நாங்கள் வெற்றி பெற்றால் அனைத்து புறநகர் பேருந்துகளும் பழைய பேருந்து நிலையத்திற்கு வந்து செல்ல ஏற்பாடு செய்வோம்’ என்று பெரும்பாலான கட்சிகள் வாக்குறுதி அளித்தன.
இந்த நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளதாலும், தருமபுரி சட்டமன்றத் தொகுதியில் பாமக வெற்றி பெற்றுள்ளதாலும் இந்த பேருந்து நிலையப் பிரச்னைக்கு ஒரு தீர்வு கிடைக்கும் என்று தருமபுரி மக்கள் எதிர்பார்த்திருந்தனர்.
அதன் தொடக்கமாக தருமபுரி கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சேலம் மார்க்கத்தில் இருந்து தருமபுரி வரும் பேருந்துகள், நகருக்குள் வராமல் அவ்வை வழியில் திரும்பி புதிய பேருந்து நிலையத்திற்கு செல்வதால் இரவு நேரத்தில் பயணிகள் தருமபுரி நகரத்தின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதில் சிரமம் உள்ளது. அதனால் 13 ஆம் தேதி முதல் (நேற்று) இரவு 9 மணி முதல் காலை 7 மணி வரை பழைய வழித்தடமான ஒட்டப்பட்டி, கலெக்டர் அலுவலகம், அரசு மருத்துவமனை, நான்கு ரோடு வழியாக வந்து புதிய பேருந்து நிலையத்திற்கு சென்று மீண்டும் அதே மார்க்கத்தில் சேலம் நோக்கி செல்லும். அதேபோல் அரூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கடத்தூர், பொம்மிடி, பாப்பிரெட்டிப்பட்டி போன்ற பகுதிகளுக்கு இயக்கப்படும் பேருந்துகள், புதிய பேருந்து நிலையத்திலிருந்து புறப்பட்டு பழைய பேருந்து நிலையத்திற்கு சென்று பின்னர் வழக்கமான வழித்தடத்தில் இயக்கப்பட வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளார்.
இவ்வளவு நாட்களாக மக்களின் கோரிக்கையை கண்டுகொள்ளாத மாவட்ட நிர்வாகம், ஆட்சி மாற்றத்திற்கு பின்புதான் ஓரளவுக்கு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.