கடந்த மே 3-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட்-யூஜி (NEET-UG 2026) தேர்வு நடைபெற்றது. இந்தத் தேர்வின் வினாத்தாள் கசிந்தது பின்புதான் தெரியவந்தது. அதைத் தொடர்ந்து, மே 3-ம் தேதி நடந்த நீட் தேர்வை ரத்து செய்வதாக தேசிய தேர்வு முகமை (NTA) (மே 12) அதிரடியாக அறிவித்தது. இந்த வினாத்தாள் கசிவு விவகாரம், தற்போது சிபிஐ (CBI) வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மாதக்கணக்கில் இரவு பகல் பாராமல் கனவுகளைத் தூக்கிச் சுமந்து, வெயிலிலும் வியர்வையிலும் தேர்வு மையத்தை நோக்கி ஓடிய 22.8 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களின் எதிர்காலத்தை ஒரு குற்றவாளிக் கும்பல் சில மணி நேரங்களில் நாசம் செய்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவ நுழைவுத் தேர்வின் நம்பகத்தன்மையை மீண்டும் ஒருமுறை கேள்விக்குறியாக்கியுள்ள மோசமான சம்பவம் இது. தேர்வுக்கு முன்பே ஊக வினாத்தாள் வடிவில் கசிந்த வினாக்கள், குறிப்பாக வேதியியல் பிரிவில் பெருமளவு பொருந்தியிருந்த சூழலில், தேசிய தேர்வு முகமை (NTA) இறுதியில் தேர்வை ரத்து செய்யும் முடிவுக்கு வர வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
இது வெறும் தேர்வுக் கசிவு அல்ல. இது லட்சக்கணக்கான இளம் மனங்களின் நம்பிக்கையை, பெற்றோர்களின் உழைப்பை, மற்றும் நாட்டின் மருத்துவக் கல்வித் தரத்தையே கேலி செய்யும் ஒரு பெரும் தோல்வி.
ராஜஸ்தான் காவல்துறையின் சிறப்பு நடவடிக்கைக் குழு (SOG) நடத்திய முதற்கட்ட விசாரணையில் அதிர வைக்கும் தகவல்கள் வெளியானது. தேர்வுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே ‘ஊக வினாத்தாள்’ என்ற பெயரில் ஒரு கேள்வித் தொகுப்பு மாணவர்களிடையே பரப்பப்பட்டுள்ளது. அந்தத் தொகுப்பில் இருந்த 410 வினாக்களில், வேதியியல் (Chemistry) பாடத்தில் மட்டும் சுமார் 120 வினாக்கள் அசல் வினாத்தாளுடன் அப்படியே ஒத்துப்போயுள்ளன. இது தற்செயலான நிகழ்வு அல்ல, திட்டமிட்ட கசிவு என்பதை இது உறுதிப்படுத்தியுள்ளது.

விசாரணையின்படி, இந்தச் சதித்திட்டம் மகாராஷ்டிராவின் நாசிக் பகுதியில் தொடங்கி, இந்தியாவின் கோச்சிங் மையங்களின் மையமான ராஜஸ்தானின் சிகார் (Sikar) வழியாகச் செயல்படுத்தப்பட்டுள்ளது. வினாத்தாள்கள் டெலிகிராம், வாட்ஸ்அப் மற்றும் கண்டறிய முடியாத ‘ஷேடோ சர்வர்கள்’ (Shadow Servers) மூலம் பகிரப்பட்டுள்ளன. ஒரு வினாத்தாளின் விலை மாணவர்களின் வசதிக்கு ஏற்ப ரூ.30,000 முதல் ரூ.28 லட்சம் வரை கள்ளச்சந்தையில் விற்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக நாசிக்கைச் சேர்ந்த சுபம் கைர்னார் என்பவர் உட்பட முக்கிய புள்ளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2024-ம் ஆண்டு ஜார்கண்டில் வினாத்தாள் கசிவு சர்ச்சைகள் எழுந்தபோதிலும், தேர்வு முழுமையாக ரத்து செய்யப்படவில்லை. ஆனால், இம்முறை முறைகேட்டின் வீச்சு அதிகமாக இருந்ததால், நீட் வரலாற்றிலேயே முதல் முறையாக நாடு தழுவிய அளவில் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்தியாவில் ஏற்பட்டிருக்கும் வெப்ப அலைகளுக்கு மத்தியிலும், பல ஆண்டுகள் பயிற்சியின் பலனாகவும் தேர்வு எழுதிய 23 லட்சம் மாணவர்களுக்கு ‘தேர்வு ரத்து’ அறிவிப்பு பேரிடியாக இறங்கியுள்ளது. மாணவர்கள் மீண்டும் தேர்வுக்கு தயாராக வேண்டியது ஒரு பக்கம் என்றால், பெற்றோர்களுக்கு மீண்டும் ஒருமுறை பயணச் செலவு, பயிற்சி மையக் கட்டணச் சுமையைச் சுமக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.

இந்த விவகாரம் தொடர்பாக இந்தியா டுடே செய்தி நிறுவனம் நாட்டின் வெவ்வேறு நகரங்களில் தேர்வு எழுதிய மாணவர்களிடம் உரையாடிருக்கிறது. அந்த உரையாடலில் மாணவர்களின் வலியும், வேதனையும் பதிவு செய்திருக்கிறது. டெல்லியைச் சேர்ந்தவரும், தற்போது டெல்லியில் MBBS படித்து வருபவருமான அக்சித் குரானா (28) வினாத்தாள் தொடர்பாக தேர்வு சமயத்தில் தான் எதிர்க்கொண்ட சூழலை விவரிக்கிறார். அவரின் குரலில், `நீட் தேர்வுக்கான தயாரிப்பு என்பது பல மாதங்களுக்கு முன்பே தொடங்கிவிடும். அதேபோலத்தான் இந்த வினாத்தாள் தொடர்பான வதந்திகளும் மிக முன்கூட்டியே வேர்விடத் தொடங்குகின்றன.
தொடக்கத்தில் இது மிகவும் இயல்பான ஒரு கல்வி உதவி போலத் தோன்றும். பயிற்சி மையங்களில் படிக்கும் நண்பர்கள் அல்லது சீனியர்கள் மூலம் டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் குழுக்களில் மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இந்தக் குழுக்கள் “இலவசக் குறிப்புகள்”, “முக்கிய வினாக்கள்” என்ற பெயரில் செயல்படுவதால், மாணவர்கள் எவ்வித அச்சமுமின்றி அதில் இணைகிறார்கள். ஆரம்பத்தில் பாடப்புத்தகக் குறிப்புகள் மற்றும் மாதிரித் தாள்கள் மட்டுமே பகிரப்படுவதால், ஆசிரியர்கள் கூட இக்குழுக்களில் அங்கமாக இருப்பதுண்டு.

தேர்வு நெருங்க நெருங்க, அதாவது இரண்டு மாதங்களுக்கு முன்பிலிருந்து இந்தக் குழுக்களின் முகம் மாறத் தொடங்குகிறது. அதுவரை வெளிப்படையாக இருந்த குழுக்கள் திடீரென கலைக்கப்பட்டு, “விஐபி குரூப்” என்ற பெயரில் ரகசியமான சிறிய குழுக்களாக மாற்றப்படுகின்றன. அங்கு பகிரப்படும் தகவல்கள் மிகவும் பாதுகாப்பானதாகக் கருதப்படும். ஸ்கிரீன்ஷாட் எடுக்க முடியாது, செய்திகள் குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு தானாகவே மறைந்துவிடும் (Disappearing messages) போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்படுகின்றன. நிர்வாகிகளைத் தனியாகத் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுவதன் மூலம், ஒரு சாதாரணக் குழு ரகசியமான ஒரு வியாபாரத் தளம் போல உருமாறுகிறது.
இந்த நிழல் உலகத்தில் “வினாத்தாள் கசிவு” என்ற நேரடி வார்த்தை ஒருபோதும் பயன்படுத்தப்படுவதில்லை. சட்ட ரீதியான சிக்கல்களைத் தவிர்க்கவும், ரகசியத்தைக் காக்கவும் குறியீட்டுச் சொற்களே ஆளுகின்றன. “உள்முறைத் தகவல்கள்”, “அதிக வாய்ப்புள்ள வினாக்கள்”, “நிச்சயம் வரக்கூடிய கடைசி நிமிடக் கேள்விகள்” போன்ற சொற்கள் மூலம் மாணவர்களுக்குத் தூண்டில் போடப்படுகிறது. வினாத்தாள் கசிந்திருப்பதை வெளிப்படையாகச் சொல்லாமல், அதன் முக்கியத்துவத்தை மட்டும் உணர்த்தும் வகையில் இந்தப் பேச்சுகள் அமைகின்றன. இதனால் மாணவர்கள் எவ்வித குற்ற உணர்ச்சியும் இன்றி, ஆர்வத்தினால் இந்த வலையில் விழுகிறார்கள்.

இறுதிக்கட்டத்தில் மாணவர்கள் மத்தியில் ஒருவிதமான “பீதி” செயற்கையாக உருவாக்கப்படுகிறது. “நமக்குத் தெரியாத ஏதோ ஒரு ரகசியம் மற்றவர்களுக்குத் தெரிந்திருக்கிறது, அவர்கள் நம்மை விட அதிக மதிப்பெண் எடுத்துவிடுவார்களோ” என்ற தொடர்ச்சியான பயமே மாணவர்களை இக்குழுக்களில் பிணைத்து வைத்திருக்கிறது. உண்மையில் வினாத்தாளை யாரும் நேரில் பார்த்திருக்காவிட்டாலும், அத்தகைய ஒரு சூழல் நிலவுவதே நேர்மையாகப் படிக்கும் மாணவர்களையும் நிலைகுலையச் செய்கிறது. மற்றவர்களுக்குக் கிடைப்பது நமக்கும் கிடைக்க வேண்டும் என்ற போட்டி மனப்பான்மை, இந்த விசித்திரமான இணை உலகத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.” என்கிறார்.
NEET தேர்வு பயிற்சிக்காக கடந்த நான்கு ஆண்டுகளாக கோட்டாவில் தங்கி படித்து வரும் ரியா பிள்ளை (26) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) நீட் தேர்வுக்கு முந்தைய இறுதி நாட்களில் மாணவர்கள் எதிர்கொள்ளும் கடுமையான மன அழுத்தம் குறித்து பேசியிருக்கிறார்.
நீட் தேர்வுக்கு முந்தைய இரவு பைத்தியக்காரத்தனமான சூழலாக இருக்கும். மாணவர்களின் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் திடீரென ஏராளமான PDF கோப்புகள் பகிரப்படுகின்றன. இவை எங்கிருந்து வருகின்றன என்று கேட்டால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு விதமான காரணத்தைக் கூறுகிறார்கள். ஒருவர் இது ஒரு மூத்த பேராசிரியர் அனுப்பியது என்பார், மற்றொருவர் டெல்லியில் உள்ள ஒரு அதிகாரப்பூர்வ நபர் உறுதிப்படுத்தியதாகக் கூறுவார், இன்னும் சிலரோ இது எய்ம்ஸ் (AIIMS) பேராசிரியரால் தயாரிக்கப்பட்டது எனப் பீதியைக் கிளப்புவார்கள். இந்தத் தகவல்களில் எது உண்மை, எது பொய் என்று தெரியாமலேயே மாணவர்கள் ஒரு மாய வலைக்குள் தள்ளப்படுகிறார்கள்.

நீண்ட காலத் தயாரிப்பு மற்றும் விடுதி வாழ்க்கை காரணமாக மாணவர்கள் ஏற்கனவே மனதளவில் சோர்வடைந்திருப்பார்கள். அந்தச் சூழலில், இதுபோன்ற ரகசியக் குழுக்களில் இருந்து விலகி இருப்பது தங்களைத் தாங்களே முட்டாளாக்கிக் கொள்வது போன்ற உணர்வை மாணவர்களுக்கு ஏற்படுத்துகிறது. “ஒருவேளை மற்றவர்களுக்கு உண்மையான வினாத்தாள் கிடைத்து, நமக்குக் கிடைக்காமல் போய்விட்டால் என்ன செய்வது?” என்ற பயமே மாணவர்களை இக்குழுக்களில் கட்டிப்போடுகிறது. இந்த பயம் அவர்களின் தூக்கத்தையும், வழக்கமான படிப்பு முறையையும் முற்றிலுமாகச் சிதைத்து விடுகிறது.
தேர்வுக்கு முந்தைய நாள் இரவு, பெரும்பாலான மாணவர்கள் நிதானமாகப் படிப்பதைக் கைவிட்டு விடுகிறார்கள். அதற்குப் பதிலாக, அவர்கள் தங்கள் கையில் இருக்கும் ஸ்கிரீன்ஷாட்களை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பது, வேதியியல் மற்றும் உயிரியல் கேள்விகளைச் சரிபார்ப்பது போன்ற வேலைகளில் இறங்குகிறார்கள். புதிய கோப்புகள் ஏதேனும் வெளியாகியுள்ளதா என்று பார்க்க ஒவ்வொரு சில நிமிடங்களுக்கும் டெலிகிராம் சேனல்களை Refresh செய்துகொண்டே இருக்கிறார்கள். படிப்பு என்பதைத் தாண்டி, ஒரு “புதையல் தேடல்” போன்ற பதற்றமான சூழல் அங்கு நிலவுகிறது.

இந்தத் தீவிரமான பதற்றத்தைப் பயன்படுத்திக் கொண்டு, அடையாளம் தெரியாத நபர்கள் மாணவர்களிடம் பணம் பறிக்கிறார்கள். சில நூறு ரூபாய்கள் முதல் சில ஆயிரம் ரூபாய்கள் வரை ஒரு PDF கோப்பிற்காக மாணவர்கள் செலவிடுகிறார்கள். இந்தப் பணப்பரிமாற்றங்கள் அனைத்தும் தனிப்பட்ட UPI முகவரிகள் மூலம் ரகசியமாக நடப்பதால், இந்தக் கோப்புகளை விற்பது யார், அதன் பின்னணியில் இருப்பவர்கள் யார் என்பது கடைசி வரை யாருக்கும் தெரிவதில்லை. மாணவர்கள் தாங்கள் வாங்கும் பொருட்கள் போலியானவை என்று ஒருபுறம் நினைத்தாலும், சிறு நம்பிக்கையில் தங்கள் பணத்தையும் நேரத்தையும் இதில் இழக்கிறார்கள்.” என்றார்.
கடந்த 3-ம் தேதி ஹைதராபாத்திலிருந்து நீட் தேர்வு எழுதிய பைசல் இக்பால் என்ற மாணவர், “இந்த டிஜிட்டல் முறைகேடுகள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு மட்டும் தோன்றி மறையும் “கள்ளச்சந்தை” (Black Market) போலச் செயல்படுகின்றன. தேர்வு நெருங்கும் போது மட்டும் உயிர்பெறும் இந்தக் குழுக்கள், தேர்வு முடிந்தவுடன் தடயமே இல்லாமல் மறைந்துவிடுகின்றன. இதில் ஒரு நுணுக்கமான படிநிலை உள்ளது. பெரிய பொதுக்குழுக்களில் மேலோட்டமான தகவல்கள் பகிரப்படும். ஆனால், பரிந்துரையின் பேரில் மட்டுமே நுழையக்கூடிய ரகசியக் குழுக்களில் “இறுதிப் பட்டியல்” என்ற பெயரில் வினாக்கள் கைமாறுகின்றன. வியாபாரம் முடிந்ததும் இந்தக் குழுக்கள் கலைக்கப்பட்டு, அடுத்த ஆண்டு வேறு பெயரில் மீண்டும் உருவெடுக்கின்றன.” என்றார்.

இந்த வினாத்தாள் கசிவு வதந்திகளால் ஏற்படும் மிகப்பெரிய பாதிப்பு உளவியல் ரீதியானது. கடின உழைப்பை விட, சரியான “தகவல்களும்” ரகசிய அணுகலுமே வெற்றியைத் தீர்மானிக்கும் என்ற தவறான எண்ணம் ஒரு தலைமுறை மாணவர்கள் மத்தியில் ஆழமாகப் பதிந்து வருகிறது. இதனால் நன்றாகப் படித்து அதிக மதிப்பெண் பெறும் மாணவர்கள் கூட கிசுகிசுக்களுக்கு ஆளாகிறார்கள். ஒவ்வொரு பயிற்சி நிறுவனமும், ஒவ்வொரு PDF கோப்பும் சந்தேகக் கண்ணுடனேயே பார்க்கப்படுகிறது. இது ஒட்டுமொத்த தேர்வு முறையின் மீதான நம்பிக்கையைச் சிதைக்கிறது.
ஃபைசல் இக்பாலின் கூற்றுப்படி, இன்றைய நீட் தேர்வில் இரண்டு வகையான பாடத்திட்டங்கள் நிலவுகின்றன. ஒன்று, தேசியத் தேர்வு முகமை (NTA) அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் பாடத்திட்டம். மற்றொன்று, இந்த ரகசியக் குழுக்களுக்குள் உலாவரும் இரகசியப் பாடத்திட்டம். மாணவர்கள் எதைப் படிப்பது என்பதைத் தாண்டி, எதைக் கையில் வைத்திருந்தால் வெற்றி பெற முடியும் என்ற குழப்பமான மனநிலையில் தேர்வை எதிர்கொள்கிறார்கள். இத்தகைய சூழல் இந்தியாவின் நுழைவுத்தேர்வு கலாச்சாரத்தையே பெரும் பதற்றத்திற்கு உள்ளாக்கியிருக்கிறது.” எனக் கட்டுரை முடிகிறது.

2024 பொதுத் தேர்வுகள் சட்டம் (Public Examinations Act 2024) அமலில் இருந்தும், இவ்வளவு பெரிய முறைகேடு நடந்தது NTA-வின் பாதுகாப்பு குறைபாடுகளை மீண்டும் அம்பலப்படுத்தியுள்ளது. வினாத்தாள்களை முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்பட்ட டிஜிட்டல் முறையில் விநியோகிப்பதும், கோச்சிங் மையங்களின் ஆதிக்கத்தைக் குறைப்பதும் மட்டுமே இதற்குத் தீர்வாகும் என நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஆனால் சட்டம் மட்டுமே போதாது. வினாத்தாள் விநியோகத்தின் ஒவ்வொரு கட்டத்திலும், அச்சிடுவதிலிருந்து தேர்வு மையம் சேருவது வரை பல அடுக்கு கண்காணிப்பு முறை கட்டாயமாக்கப்பட வேண்டும். தேர்வு நடத்துவதற்கு தனியார் நிறுவனங்களை நம்பும் தற்போதைய மாதிரியே இந்த ஊழலுக்கு வாயில் திறந்து கொடுக்கிறது என்ற சந்தேகத்தையும் இனி தவிர்க்க முடியாது.
குற்றவாளிகளுக்கு ஜாமீன் இல்லாத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ள நிலையில், CBI விசாரணை வெறும் கைதுகளோடு நின்றுவிடாமல், இந்த சங்கிலியின் உச்சத்தில் இருக்கும் நபர்கள் வரை நீளும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் இருக்கிறது. ஏனென்றால், சிகார் கோச்சிங் சென்டர்களிலிருந்து நாசிக் வரை பரவிய இந்த வலை, ஒரு சாதாரண தனிநபரால் நெய்யப்பட்டிருக்க வாய்ப்பில்லை.
இறுதியில், இது வெறும் நிர்வாகத் தோல்வி மட்டுமல்ல. நேர்மையாக உழைத்த லட்சக்கணக்கான மாணவர்களுக்கு நாடு செய்த துரோகம். அந்த நம்பிக்கையை மீட்டெடுக்க ஒரே நேரத்தில் தண்டனையும் வேண்டும், சீர்திருத்தமும் வேண்டும்.