”தற்குறிகள் அல்ல… அம்புக்குறிகள்..” தவெகவில் ராகவா லாரன்ஸ்..?  – Kumudam

Spread the love

ரஜினியின் தீவிர ரசிகர்… நடிகர்.. இயக்குநர்.. டான்ஸ் மாஸ்டர்.. என பன்முகத்தன்மை கொண்டவர் ராகவா லாரன்ஸ். ரஜினியின் ஆன்மீக அரசியலில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவர், ரஜினி அரசியல் கட்சி தொடங்கியிருந்தால் அதில் முக்கிய பொறுப்பை வகித்திருப்பார் என்று சொல்லப்பட்டது. ஆனால், ரஜினியும் கட்சி தொடங்கவில்லை, ராகவாவும் அரசியலுக்கு வரவில்லை. 

இத்தகையச் சூழலில், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் ராகவா லாரன்ஸ் போட்டியிடுவார் என்று தகவல்கள் பரவின. இந்த தகவல் தொடர்பாக நடிகர் ராகவா லாரன்ஸ் தனது எக்ஸ் பக்கத்தில் கடந்த 7ஆம் தேதி விளக்கம் ஒன்றை கொடுத்திருந்தார்.

அதில், “திருச்சி கிழக்கு தொகுதியில் நான் தேர்தலில் போட்டியிடப் போகிறேன் என்ற செய்தி பல ஊடகங்களில் பரவி வருகிறது. பென்ஸ் படப்பிடிப்பு ஜூன் 10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அதனால் ஜூன் 11 ஆம் தேதி என் தாயாரின் ஆசிர்வாதத்துடன் என் முடிவை அறிவிக்க உள்ளேன்” என்று ராகவா லாரன்ஸ் பதிவிட்டிருந்தார்.

இந்த நிலையில், இயக்குநர் இமயம் பாரதிராஜா மறைவையொட்டி தனது முடிவை ஜூன் 12 ஆம் தேதி காலை 10 மணிக்கு அறிவிக்க உள்ளதாக தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

இதனைத் தொடர்ந்து, ஜூன் 12-ல் வீடியோ ஒன்றை வெளியிட்ட ராகவா லாரன்ஸ், விஜய்யின் வெற்றியால் சாதி,மதம், பேதம் கடந்து மக்கள் வாக்களிப்பார்கள் என்ற நம்பிக்கை உருவாகியுள்ளதாகவும், தன்னுடைய தாயும் தான் அரசியலுக்கு வரவேண்டும் என்றும் விரும்புவதாகவும் ராகவா லாரன்ஸ் தெரிவித்திருந்தார். 

மேலும், ” “நண்பர் விஜய் எனக்கு மிகவும் நெருக்கமானவர்; விஜயுடன் இணைந்து அரசியலில் களம் இறங்கலாம் என யோசித்தேன். பிறகு அந்த முடிவை கைவிட்டுவிட்டேன். திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் நான் போட்டியிட வேண்டுமென்றால், முதலில் நான் அரசியலுக்கு வரவேண்டும். எனவே, நான் அரசியலுக்கு வர வேண்டுமா? வேண்டாமா? என்பதை மக்களாகிய நீங்கள் தான் சொல்ல வேண்டும். எந்தப் பலனையும் எதிர்பாராமல் பல ஆண்டுகளாக மக்களுக்குச் சேவை செய்து வருகிறேன். எனக்கு அரசியல் வேண்டாம் என்றால் சமூகத்திற்கான எனது தன்னலமற்ற சேவைகளை எப்போதும் போலத் தொடர்ந்து செய்வேன்” என்று கூறினார். இதனால் இவர் அரசியலுக்கு வருகிறாரா இல்லையா? என்ற குழப்பம் ஏற்பட்டது. 

இந்த நிலையில், நேற்று (ஜூன்14) இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய ராகவா லாரன்ஸ், தான் அரசியல் வருவது குறித்து விளக்கம் அளித்திருந்தார். 

அப்போது, ஒரு நல்ல முடிவை எடுத்துள்ளதாகவும், அதை விரைவில் அறிவிக்க உள்ளதாகவும், தன்னுடைய ரசிகர்கள் மற்றும் தாய் முன்னிலை தன் முடிவை அறிவிக்க உள்ளதாகவும் தெரிவித்தார். 

தொடர்ந்து பேசிய ராகவா, “விஜய் அரசுக்கு அவகாசம் கொடுக்க வேண்டும். தவெக-வின் ஒரு மாத ஆட்சி சிறப்பாக உள்ளது. அமைச்சர்கள் நன்றாக செயல்படுகிறார்கள். மாற்றம் தேவை என்று தான் வாக்களித்து உள்ளீர்கள். சிறிது அவகாசம் கொடுக்க வேண்டும். விஜய் மீது உள்ள பொறாமை காரணமாகவே எதிர்க்கட்சிகள் தொடர்ந்து விமர்சனம் அவர்மீது செய்கின்றன. வளர்ந்து வரும் தவெக-வை பிடிக்காததால் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றனர். கல்வி நிலையங்கள் மற்றும் கோவில்களுக்கு அருகே இருந்த டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது. முதல்-அமைச்சர் விஜய்க்கு ஆதரவாக பேசியதால் என்னையும் விமர்சிப்பார்கள்” என்று தெரிவித்தார்.

மேலும், ” “தவெக தொண்டர்களை சிலர் ‘தற்குறிகள்’ என்று விமர்சிக்கின்றனர். ஆனால் அவர்கள் தற்குறிகள் அல்ல; கண்ணிமைக்கும் நேரத்திற்குள் தவெகவை ஆட்சிக் கட்டிலில் அமர வைத்த ‘அம்புக்குறிகள்’. விமர்சனம் செய்பவர்கள் முதலில் மக்களுக்கு என்ன செய்தோம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். திருச்சி கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் நான் போட்டியிடுவது தொடர்பான முடிவை விரைவில் ரசிகர்கள் முன்னிலையிலேயே அறிவிப்பேன்,” என்று ராகவா லாரன்ஸ் தெரிவித்தார்.

இந்த நிலையில், ராகவா லாரன்ஸ் தன்னுடைய அரசியல் பயணம் வெறுமனவே அமைந்துவிடக் கூடாது, மாறாக பெரும் பேசுபொருளாக இருக்க வேண்டும் என்று நினைப்பதால், திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை வைத்து காய்களை நகர்த்துகிறார் என்று அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். மேலும் இவரது பேச்சு அரசியல் கட்சி தொடங்குவதுபோல் அல்ல, தவெகவில் இணைவது போல் உள்ளதும் என்றும் கூறுகின்றனர். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *