
தவெக ஆட்சி கவிழ்ப்பு சதி வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமாரைக் கைது செய்யத் தனிப்படை போலீசார் தங்களது தேடுதல் வேட்டையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். தமிழகம் மற்றும் அண்டை மாநிலங்களில் முகாமிட்டுள்ள போலீசார், அசோக் குமாரின் நெருங்கிய வட்டாரங்களை வளையத்திற்குள் கொண்டு வந்துள்ளனர்.
முதலமைச்சர் விஜய்யின் ஆட்சியை கவிழ்ப்பதற்காகத் தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் ரூ.35 கோடி பேரம் பேசிய வழக்கில், கைது செய்யப்பட்ட நபர்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக் குமார் முக்கியக் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டுள்ளார். தலைமறைவாக இருக்கும் இவரைக் கைது செய்ய தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்தத் தனிப்படை போலீசார் தற்போது கரூர், திருச்சி, கோவை மற்றும் கர்நாடக மாநிலம் பெங்களூரு ஆகிய நான்கு முக்கியப் பகுதிகளில் முகாமிட்டு அசோக் குமாரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
அசோக் குமார் போலீசாரின் பிடியில் சிக்காமல் இருக்க அவரது இருப்பிடங்களை மாற்றி வருவதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அவரது தற்போதைய நகர்வுகளைக் கண்காணிக்கும் பொருட்டு, அசோக் குமாருக்கு நெருக்கமான நண்பர்கள், தொழில் கூட்டாளிகள் மற்றும் உறவினர்களின் முழுப் பட்டியலைத் தனிப்படை போலீசார் சேகரித்துள்ளனர். இந்தப் பட்டியலின் அடிப்படையில், அவரது நெருங்கிய உறவினர்களிடம் போலீசார் தங்களது விசாரணையை அதிரடியாக முடுக்கிவிட்டுள்ளனர்.
இந்த நிலையில், கரூர் கம்பெனியே தற்போது விசாரணை வளையத்திற்குள் இருக்கும் நிலையில், இவ்விவகாரத்தில் தலைமறைவாகி இருப்பதாக கூறப்படும் செந்தில்பாலாஜி மற்றும் அவரது சகோதரர் அசோக்குமாருக்கு லுக் அவுட் நோட்டீஸ் வழங்கியுள்ளது திருவல்லிக்கேணி போலீஸ்.
இப்படி, செந்தில்பாலாஜியின் கரூர் கம்பெனி காலியாகும் நிலையில் திமுக தலைமையோ அதனைக் கண்டுக் கொள்ளாமல் அயலகம் பறந்துள்ளதால் செந்தில்பாலாஜி அண்ட் கோ கடும் அப்செட்டில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
செந்தில்பாலாஜிக்கு எதிரான பேர வழக்கு.. எ.வ.வேலு வீட்டில் ரெய்டு… அனிதா ராதாகிருஷ்ணன் கைதாகி ஜாமீனில் வெளிவந்தது.. என திமுக முக்கிய தலைவர்கள் 7 பேர் மீது விஜய்யின் தவெக அரசு டார்கெட் செய்து காய்களை நகர்த்திக் கொண்டிருப்பதாகக் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறது. இதனைப் பற்றி கவலைக் கொள்ளாமல் திமுக தலைமை தன் குடும்பத்துடன் லண்டனில் தன்னுடைய பேரனும், உதயநிதியின் மகனுமான இன்பநிதி பட்டமளிப்பு விழாவிற்கு சென்றுள்ளது சீனியர்ஸின் பொறுமையை சீண்டிப்பார்க்கிறது என்று அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதாவது, கட்சிக்காக உழைத்தவர்கள்.. முன்னாள் அமைச்சர்கள்.. என தங்கள் மீது திமுக தலைமை கரிசனம் காட்டி உதவியாக இருக்கும் என்று நம்பிய நிலையில், அவர்களை அப்படியேவிட்டுவிட்டு அயலகம் சென்றுள்ளாரே தலைவர் என்று மூத்த உடன்பிறப்புகள் ஆதங்கப்படுகின்றனர் என்று உள்விவரம் அறிந்தவர்கள் கூறுகின்றனர்.
மறுபக்கம் செந்தில்பாலாஜி வழக்கின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் விஜய் தொடர்ந்து அதிகாரிகளிடம் நேரடியாக தகவல்களை கேட்டறிந்து வருவதாகவும் கூறப்படுகிறது. மேலும், வழக்கில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற தெளிவான உத்தரவை அவர் பிறப்பித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக அமைச்சர் செந்தில் பாலாஜி, அசோக்குமார் உள்ளிட்டோரின் பெயர்கள் இந்த விவகாரத்தில் அடிக்கடி பேசப்பட்டு வரும் நிலையில், சம்பந்தப்பட்ட அனைவரையும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வர வேண்டும் என்ற நிலைப்பாட்டில் அரசு இருப்பதாக கூறப்படுகிறது.
இத்தகையச் சூழலில், அனிதா ராதாகிருஷ்ணனுக்காகவது தலைமை குரல் கொடுத்தது, ஆனால் கொங்கில் திமுகவிற்கான வாக்கு வங்கியை அதிகரித்ததற்காகவாவது தனக்கும் தனது சகோதரருக்கும் திமுக தலைமை குரல் கொடுத்து இருக்கலாம் என்று செந்தில்பாலாஜி ஆதரவாளர்கள் குமுறுகின்றனர். தலைவரே.. தலைவரே.. தலைவரே.. என்று என்னத்தான் செந்தில்பாலாஜி தலைமையின் காலில் விழுந்து அழுது புரண்டாலும், அவர் செய்யும் ஒவ்வொரு செயல்களும் கட்சிக்கு சிக்கலைத்தான் தருவதால், இனி அவருக்காக நிற்க தலைமை தயாராக இல்லை என்று அறிவாலய வட்டாரங்கள் உறுதிப்படுத்துகின்றனர்.
இதனால், கருர் கம்பெனியை திமுக தலைமை இழுத்து மூடுமா? இனி செந்தில்பாலாஜியின் அரசியல் எதிர்காலம் எப்படி இருக்க போகிறது? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.