தலைமைச் செயலக கட்டடப் பணி: “எந்த விதிமீறலும் இல்லை" – தமிழ்நாடு அரசு விளக்கம்

Spread the love

சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் மேற்கோள்ளப்படும் கட்டடப் பணிகள் மற்றும் ஒப்பந்தப் புள்ளிகள் தொடர்பாக ஊழல் நடந்திருப்பதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதற்கு விளக்கமளிக்கும் வகையில், தமிழ்நாடு அரசு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அதில், “ஊடகங்களில் வெளியாகும் செய்திகள் தவறானவை. நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் மேற்கோள்ளப்படும் கட்டடப் பணியில் எவ்வித விதிமீறலும் இன்றி அனைத்துப் பணிகளும் முறைப்படி நடைபெற்று வருகின்றன.

முதல்வர் விஜய்
முதல்வர் விஜய்

நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10-வது தளத்தில் அமைந்துள்ள கூட்ட அரங்கை, கலைவாணர் அரங்கம் வளாகத்திற்கு மாற்றும் பொருட்டு, அங்கிருந்த மேஜை, நாற்காலிகள் மற்றும் ஒலிவாங்கிகள் போன்ற தளவாடங்களை அகற்றும் பணிகள் மட்டுமே சட்டப்பூர்வமாக நடைபெற்றன.

தற்போது கோரப்பட்டுள்ள நிர்வாக அலுவலகம் அமைக்கும் ஒப்பந்தப் புள்ளிப் பணிகளுக்கும், இந்தத் தளவாடங்கள் அகற்றும் பணிக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.

தமிழ்நாடு ஒளிவு மறைவற்ற ஒப்பந்தப்புள்ளி விதிகளின் படி, ரூ.10 கோடிக்குக் குறைவான மதிப்புள்ள பணிகளுக்கு ஒப்பந்தப் புள்ளி வெளியிடப்பட்ட நாளிலிருந்து பெறப்படுவதற்கான கடைசி நாள் வரை குறைந்தபட்சம் 15 நாட்கள் கால அவகாசம் அளிக்கப்பட வேண்டும்.

அந்த வகையில், பத்திரிகைகள் மற்றும் மாநில ஒப்பந்தப் புள்ளி செய்தி மலரில் 13.08.2026 அன்று அறிவிக்கை வெளியானது. செய்தித் தாளில் வெளியான நாளிலிருந்து கடைசி நாள் வரை 18 நாட்கள் அவகாசமும், இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்ட நாளிலிருந்து 15 நாட்கள் அவகாசமும் சரியாக வழங்கப்பட்டுள்ளன.

இணையதளத்தில் ஒப்பந்தப் புள்ளி அறிவிக்கை 15.08.2026 அன்று பதிவேற்றம் செய்யப்பட்டது. ஆகஸ்ட் 15 மற்றும் 16 ஆகிய இரண்டு நாள்களும் அரசு விடுமுறை நாட்கள் என்பதால், ஒப்பந்தப் புள்ளி சம்பந்தமான விவரங்கள் மற்றும் படிவங்கள் 17.08.2026 முதல் tntenders.gov.in என்ற இணையதளம் வாயிலாகப் பதிவிறக்கம் செய்யக் கிடைக்குமாறு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பணிகளின் உத்தேச மதிப்பீடும் இணையதளத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாமக்கல் கவிஞர் மாளிகை
நாமக்கல் கவிஞர் மாளிகை

நாமக்கல் கவிஞர் மாளிகை 10-வது தளத்தில் பிளாக்-1, பிளாக்-2 மற்றும் பிளாக்-3 என நிர்வாக அலுவலக வசதிகள் செய்வதற்காகக் கோரப்பட்டுள்ள ஒப்பந்தப் புள்ளிகள் செப்டம்பர் 1, 2026 (01.09.2026) அன்று மாலை 3.00 மணி வரை பெறப்படும்.

பெறப்பட்ட ஒப்பந்தப் புள்ளிகள் கூர்ந்தாய்வு செய்யப்பட்டு, குறைந்த தொகையைக் கோரிய தகுதியான ஒப்பந்ததாரருக்கு பணி ஆணை வழங்கப்பட்ட பின்னரே பணிகள் தொடங்கும்.

எனவே, தலைமைச் செயலகப் பணிகளுக்கான ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டதில் எவ்வித விதிமீறலும் இல்லை. அனைத்து நடைமுறைகளும் முறைப்படியே நடைபெறுகின்றன” எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *