சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராகப் பணிபுரிந்து வரும் பிரபல பொருளாதார நிபுணரும், “The Dravidian Model’ நூலின் ஆசிரியர்களில் ஒருவருமான கலையரசன், நேற்று அதிகாலை 5 மணியளவில் போலீசாரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட சம்பவம் பேசுபொருளாகி இருக்கிறது.
தமிழகப் பொருளாதார நிலவரம் குறித்து தொடர்ந்து கருத்துகளை முன்வைத்து வரும் கலையரசன் கைது நடவடிக்கைக்கு திமுக தலைவர் ஸ்டாலின், எம்.பி கனிமொழி, எம்.பி சு. வெங்கடேஷன் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்திருத்திருந்தனர்.
இதனைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பில் இந்த வழக்கை நடத்திய உள்ளூர் காவல்துறையினர் தவறு இழைத்துவிட்டதாக அமைச்சர் நிர்மல் குமார் ஒப்புக்கொண்டார்.
காவல்துறை தலைமை இயக்குநரின் (DGP) தலையீட்டைக் கோரி அளித்த புகாரில் பேராசிரியர் கலையரசன், “என்னுடைய தரப்பு விளக்கத்தை அளிப்பதற்குக்கூட ஒரு நியாயமான வாய்ப்பு வழங்கப்படாமல், நான் நடத்தப்பட்ட விதம் எனக்கு மிகுந்த மன உளைச்சலையும் அவமானத்தையும் ஏற்படுத்தியது” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் விஜய், பேராசிரியர் கலையரசனைச் சந்தித்து பேசியிருக்கிறார்.