‘தலைவன் இருந்திருந்தா ட்ரம்புக்கு இந்த நிலைமை வந்திருக்காது ‘ – ஞானேஷ் குமாரை வம்பிழுக்கும் அபிஜித் ! – Kumudam

Spread the love

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் டொனால்ட் ட்ரம்பின் குடியரசுக் கட்சிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ள நிலையில், இந்திய தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரை மறைமுகமாக விமர்சித்து காக்ரோச் ஜனதா கட்சியின் (CJP) நிறுவனர் அபிஜித் தீப்கே வெளியிட்டுள்ள பதிவு அரசியல் வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.

ட்ரம்பிற்கு இப்படியொரு நிலையை ஞானேஷ் குமார் விட்டிருக்க மாட்டார்!

அமெரிக்க இடைக்காலத் தேர்தலில் ஜனநாயகக் கட்சியினர் பெரும் வெற்றியைப் பெற்று, காங்கிரஸின் இரு அவைகளிலும் தங்களது ஆதிக்கத்தை நிலைநாட்டியதாக வெளியாகியுள்ள தகவல்கள் டொனால்ட் ட்ரம்பிற்கு அரசியல் பின்னடைவாகப் பார்க்கப்படுகின்றன.

இந்தச் சூழலில், அபிஜித் தீப்கே தனது எக்ஸ் தளத்தில், “ட்ரம்பிற்கு நிச்சயம் இதுபோன்ற ஒரு நிலையை ஞானேஷ் குமார் ஏற்பட விட்டிருக்க மாட்டார்” (Gyanesh Kumar would’ve never let this happen to Trump) என்று கிண்டலாகப் பதிவிட்டுள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தைச் சீண்டும் பதிவு!

அபிஜித் தீப்கேவின் இந்தப் பதிவு இந்தியாவில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியான SIR (Special Intensive Revision) தொடர்பான அரசியல் சர்ச்சைகளை மறைமுகமாகச் சுட்டிக்காட்டுவதாகப் பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் SIR நடவடிக்கைக்கு எதிராக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன. தகுதியுள்ள வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படும் அபாயம் இருப்பதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகின்றன.

மேலும், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் முறைகேடுகள் இருப்பதாகவும், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

ஆனால், தேர்தல் ஆணையம் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து, வாக்காளர் பட்டியலில் உள்ள போலி, இரட்டைப் பதிவுகள் மற்றும் தகுதியற்ற பதிவுகளை நீக்குவதற்காகவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக விளக்கம் அளித்து வருகிறது.

வெறுப்பு அரசியலுக்கு எதிராக மக்கள் வாக்களிக்கிறார்கள்!

அமெரிக்க தேர்தல் முடிவுகள் குறித்து CJP தலைவர் அசுதோஷ் ரங்கா வெளியிட்ட பதிவுக்கு பதிலளித்த அபிஜித் தீப்கே, மக்கள் வெறுப்பு அரசியலுக்கு எதிராக வாக்களித்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளார்.

“மக்கள் வெறுப்பு அரசியலுக்கு எதிராகவும், பொறுப்புணர்வு, வேலைவாய்ப்புகள் மற்றும் மலிவான வாழ்க்கைச் செலவுகளுக்காகவும் வாக்களிக்கிறார்கள்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

ட்ரம்பின் இரண்டாவது ஆட்சிக்காலத்தில் பொருளாதாரம், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவுகள், குடியேற்றக் கொள்கைகள் மற்றும் ஈரானுடனான போர் உள்ளிட்ட விவகாரங்கள் அமெரிக்க வாக்காளர்களின் முக்கிய கவலைகளாக இருந்ததாகக் கூறப்படுகிறது.

வலுவான தலைமை அரசியலுக்கு பின்னடைவா?

2010-க்குப் பிறகு உலகம் முழுவதும் வலுவான தலைமைத்துவத்தை முன்னிறுத்தும் அரசியல் போக்கு அதிகரித்ததாக அபிஜித் தீப்கே தனது மற்றொரு பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

தீர்க்கமான தலைமை, தேசிய பெருமை மற்றும் உலகளாவிய ஆதிக்கம் ஆகியவற்றை முன்னிறுத்தி பல தலைவர்கள் அரசியல் ஆதரவைப் பெற்றனர். ஜனநாயக அமைப்புகளால் செய்ய முடியாதவற்றை ஒரு வலிமையான தலைவர் செய்து முடிப்பார் என்ற நம்பிக்கையும் இதன் மூலம் உருவாக்கப்பட்டது.

ஆனால், தற்போது உலக அரசியலில் உருவாகி வரும் மாற்றங்கள், தனிநபர் அதிகாரத்தை மையப்படுத்தும் அரசியலின் மீதான மக்களின் நம்பிக்கை குறையத் தொடங்கியுள்ளதைக் காட்டுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ட்ரம்பின் தோல்வி.. உலக அரசியலில் புதிய திருப்பம்?

அமெரிக்க இடைக்காலத் தேர்தல் முடிவுகள் ட்ரம்பின் அரசியல் செல்வாக்கிற்கு ஏற்பட்ட பின்னடைவாக மட்டுமல்லாமல், உலகம் முழுவதும் நிலவி வரும் அரசியல் போக்குகளுக்கான முக்கிய அறிகுறியாகவும் பார்க்கப்படுகிறது.

இதனிடையே, அமெரிக்க மக்களின் தேர்தல் முடிவுகளை மதித்து ஜனநாயகக் கட்சியினருடன் இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க தேர்தல் முடிவுகளை முன்வைத்து இந்திய தேர்தல் ஆணையத்தை மறைமுகமாக விமர்சித்துள்ள அபிஜித் தீப்கேவின் பதிவு, தற்போது அரசியல் விவாதங்களில் பேசுபொருளாகியுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *