தள்ளாடும் பாகிஸ்தான்.. வெடிக்க போகுது உணவு பஞ்சம்.. இந்தியா கொடுத்த மரண அடியால் திணறல் | Pakistan Water Shortage 25% less water as Reservoir Levels Fall to 4-Year Low, Food Security at Risk

Spread the love

International

oi-Vigneshkumar

இஸ்லாமாபாத்: பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சிந்து நீர் நீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்தி வைத்துள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு இரட்டை அடி விழுந்துள்ளது. ஒரு பக்கம் அங்கு 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு நீர் குறைந்துள்ள நிலையில், மறுபுறம் 25 சதவீதம் நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இது பாகிஸ்தான் நாட்டின் உணவு பாதுகாப்பையே அச்சுறுத்தும் ஆபத்து உருவாகியுள்ளது.

பாகிஸ்தானில் வரும் அக்டோபர் 1ம் தேதி ரபி பருவம் தொடங்கவுள்ள நிலையில், அங்கு கடுமையான தண்ணீர் நெருக்கடி உருவாகியுள்ளது. நாட்டின் நீர்த்தேக்கங்களில் நீர் இருப்பு 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ள நிலையில், ரபி பருவத்தில் கிடைக்கும் நீரின் அளவு சுமார் 25 சதவீதம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பாகிஸ்தானின் வேளாண்மை மட்டுமின்றி, உணவு பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்திலும் அழுத்தம் அதிகரிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.

Pakistan Water Shortage Pakistan India Indus water treaty

பாகிஸ்தான்

ரபி பருவத்தில் பாகிஸ்தானுக்கு கிடைக்கக்கூடிய நீரின் அளவு வெறும் 21 முதல் 22 மில்லியன் ஏக்கர் அடி என்ற அளவில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வழக்கமான தேவையுடன் ஒப்பிடும்போது இது மிக பெரிய பற்றாக்குறையாகும். இதனால் ரபி பருவத்தின் முக்கிய பயிரான கோதுமை உற்பத்தி பாதிக்கப்படுமா என்ற கவலை எழுந்துள்ளது.

4 ஆண்டுகளில் இல்லாத அளவு குறைவு

பாகிஸ்தானின் நீர்த்தேக்கங்களில் தற்போது உள்ள நீர் இருப்பு 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. ரபி விதைப்பு தொடங்க உள்ள நிலையில், பாசனத்துக்கு பயன்படுத்தக்கூடிய நீர் குறைந்திருப்பது விவசாயிகளுக்கு கூடுதல் சிக்கலை ஏற்படுத்தக்கூடும். ஏற்கனவே நீர் பற்றாக்குறை அதிகரிக்கும் எதிர்பார்க்கப்படும் நிலையில், 1 MAFக்கும் அதிகமான நீர் வெளியேற்றப்பட்டிருப்பதும் ரபி பருவத்துக்கான நீர் பற்றாக்குறையை மேலும் மோசமாக்கும் என அஞ்சப்படுகிறது. இதனால் தற்போதிருக்கும் குறைந்த நீரை எப்படி நிர்வகிப்பது என்பது பாகிஸ்தானுக்கு முக்கிய சவாலாக மாறியுள்ளது.

இந்தியா பாகிஸ்தான் இடையே சிந்து நீர் பகிர்வு தொடர்பாக பிரச்சினை தொடரும் சூழலில் இந்த நீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலை தொடர்ந்து சிந்து நதி நீர் ஒப்பந்தத்தைப் பாகிஸ்தான் நிறுத்தி வைத்துள்ள சூழலில், பாகிஸ்தான் முக்கியமான விவசாய பருவத்திலேயே நீர் இல்லாமல் பாகிஸ்தான் தள்ளாடி வருகிறது.

உணவு பாதுகாப்பு

ரபி பருவத்தின் முக்கியப் பயிரான கோதுமைக்கு போதுமான நீர் கிடைப்பது முக்கியமானதாகும். அப்படியிருக்கும் போது 25 சதவீதம் வரை நீர் பற்றாக்குறை ஏற்பட்டால், கோதுமை சாகுபடி மற்றும் உற்பத்தி கடுமையாக பாதிக்கப்படும். கோதுமை என்பது பாகிஸ்தான் உணவு பாதுகாப்புடன் நேரடியாக தொடர்புடையது என்பதால், விவசாயத்தில் ஏற்படும் பாதிப்பு உணவு பொருட்களையும் பாதிக்கும். அதேபோல் விவசாயம் அந்நாட்டின் பொருளாதார அடித்தளத்தில் முக்கிய பங்கு வகிப்பதால், நீண்டகால நீர் பற்றாக்குறை பொருளாதார அழுத்தத்தையும் அதிகரிக்கக்கூடும்.

மோதல்

நாட்டில் கிடைக்கும் மொத்த நீரின் அளவு குறைந்துள்ளதால், அங்குள்ள மாகாணங்களுக்கு இடையேயான நீர் பங்கீடு தொடர்பான பிரச்சினையும் மீண்டும் தீவிரமடையக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக சிந்து மற்றும் பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணங்களுக்கு இடையே நீர் பங்கீடு தொடர்பான பதற்றம் அதிகரிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

பாகிஸ்தானின் சிந்து நதி சிஸ்டம் அத்தாரிட்டி ரபி பருவத்துக்கான நீர்ப் பங்கீட்டை இறுதி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது. மூன்று அடுக்கு நீர் விநியோக முறையை அடிப்படையாக கொண்டு நீர் பங்கீடு செய்யப்பட உள்ளது. இருப்பினும், நீர் கையிருப்பே குறைவாக உள்ள நிலையில், எந்த மாகாணத்திற்கு எவ்வளவு நீர் என்பது புதிய சர்ச்சையை ஏற்படுத்தும்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *