Habeebi Review: தமிழ் இஸ்லாமிய வாழ்வியல் பின்னணியில் ஓர் அழகான காதல் கதை; ஆனால், படமாகக் கவர்கிறதா?

Spread the love

தென் தமிழகத்தில் தலைமுறை தலைமுறையாக நெசவுத் தொழிலை யூசுஃப் கானின் (கஸ்தூரி ராஜா) குடும்பம் கவனித்து வருகிறார்கள். கைத்தறித் தொழில் நலிவடைந்து வருவதால், யூசுஃப் கானின் தம்பி வளைகுடா நாட்டிற்குப் பணிக்குச் செல்கிறார். வெளிநாட்டு வேலை பணத்தை ஈட்டிக் கொடுத்தாலும் யூசுஃப் கானுக்கு கைத்தறித் தொழிலைக் கைவிடுவதில் விருப்பமில்லை.

இதற்கு அடுத்த தலைமுறையான யூசுஃப் கானின் மகன் அபு தாஹிரையும் (ஈஷா), சுற்றி இருப்பவர்கள் வெளிநாட்டிற்கு அனுப்பும் பேச்சை எடுக்கிறார்கள்.

Habeebi Review | ஹபீபி விமர்சனம்
Habeebi Review | ஹபீபி விமர்சனம்

ஆனால், வெளிநாட்டிற்குச் சென்றால் நம் சாச்சாவை (சித்தப்பா) போல நாமும் குடும்பத்தைப் பிரிந்திருக்க நேர்ந்துவிடுமோ என்கிற யோசனையில், அதற்கு மறுப்பு தெரிவிக்கிறார்.

இதன் பிறகு யூசுஃப் கான் மற்றும் அபு தாஹிரின் வாழ்க்கையில் என்னவாகிறது, பள்ளிப் பருவத்தில் மலர்ந்த அபு தாஹிரின் காதல் என்னவானது என்பனவே இயக்குநர் மீரா கதிரவன் இயக்கியிருக்கும் இந்த ‘ஹபீபி’-யின் கதை.

குடும்பத் தலைவருக்கான பொறுப்பு, குடும்பத்திற்கு நேரிடும் துன்பங்களால் ஏற்படும் சோகம், பிறகு அவருக்குள் ஓடிக்கொண்டிருக்கும் சந்தேகங்கள் என கஸ்தூரி ராஜாவுக்குப் பல உணர்வுகள் அடங்கிய கதாபாத்திரம்.

இறுக்கமான காட்சிகளில் ‘எட்டுப்பட்டி ராசா’-வாக நடிப்பில் நச் காட்டுபவர், மகனுக்காக உருகி அழும் இடங்களில் நடிப்பில் சிறிது செயற்கைத்தனமும் எட்டிப் பார்க்கிறது. 

Habeebi Review | ஹபீபி விமர்சனம்
Habeebi Review | ஹபீபி விமர்சனம்

அபுதாஹிர் கதாபாத்திரத்தில் வரும் அறிமுக நடிகர் ஈஷா சோகமான காட்சிகளில் ‘குட்’ சொல்ல வைத்து, என்ட்ரி விசா வாங்கிக் கொள்கிறார். ஆனால், சில இடங்களில் ஒரே முகபாவனை மாற்றமின்றி வருவது சற்று துருத்தல். படத்தின் முக்கியக் கருவை ஓரிரு வசனங்களில் உணர்த்தும் கதாபாத்திரத்தில் நடிகை மாளவிகா மனோஜ் கொடுக்கப்பட்ட வேலையை மட்டும் செய்திருக்கிறார்.

இவர்களைத் தாண்டி, தனஸ்ரீ, அனுஸ்ரேயா ராஜன், இஸ்மத் பானு, சாகுல் ஹமீது, அருள் குமார் ஆகியோர் அவரவர் பங்கை இக்கதைக்குத் தந்திருக்கிறார்கள். ஆக்ஷன் கட்-களுக்கிடையே வந்துப் போகும் துணை நடிகர்களிடம் எதார்த்தம் மிஸ்ஸிங்!

நெசவுத் தறிகளுக்கு இடையே நடக்கும் டிராமாவை விஷுவல்களில் பதித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் மகேஷ் முத்துசுவாமி. ஆனால், நாடகத்தனமான சில ஃபிரேம்கள் மேக்கிங்கைப் பின்னுக்கு இழுக்கின்றன.

படத்தொகுப்பாளர் மதி வி.எஸ், தனது ‘கட்’களால் அன்னநடைபோடும் சில காட்சிகளின் வேகத்தைத் துரிதப்படுத்தியிருக்கலாம். 80கள், 90கள், 2000கள், சமகாலம் எனப் பயணிக்கும் கதைக்கு பீரியட் உணர்வைச் சேர்க்கிறது கலை இயக்குநர் அப்புண்ணி சாஜனின் நேர்த்தியான பணி.

Habeebi Review | ஹபீபி விமர்சனம்
Habeebi Review | ஹபீபி விமர்சனம்

நாகூர் ஹனிஃபா குரலில் வரும் ‘வல்லோனே வல்லோனே’ பாடல் மற்றும் மெலடி நம்பரில் வரும் ‘ஏகாந்தி’, ‘நீயும் நானும்’ என இசையமைப்பாளர் சாம் சி.எஸ்ஸின் பாடல்கள் கவர்கின்றன. பின்னணி இசையில் பெரிய குறையில்லை என்றாலும், எமோஷனல் காட்சிகளை ஏணி போட்டு ஏற்றிவிடும் இசை மிஸ்ஸிங்!

தென்தமிழகத்தில் வாழும் ஒரு இஸ்லாமிய குடும்பம், அவர்களின் வாழ்க்கைமுறை, கலாசாரம், தொழில் மற்றும் உறவுகள் என்பதாக நகரும் முகமது அமீன் எழுதிய கதையை, திரைப்படமாகக் கொண்டு வந்திருக்கிறார் இயக்குநர் மீரா கதிரவன்.

80-கள் முதல் தற்போதைய காலம் வரை ஒரு இஸ்லாமிய குடும்பத்தின் கதையைப் பிரதிபலிக்கிறது இப்படம். 90-களுக்குப் பிறகு கைத்தறித் தொழில் நலிவைச் சந்தித்த கதைகள், அது உண்டாக்கிய விளைவுகள், அதனால் உறவுகளிலும் ஏற்படும் பாதிப்புகள் என்பதையும் சேர்த்து ஆவணப்படுத்துகிறது இந்தச் சினிமா. 

Habeebi Review | ஹபீபி விமர்சனம்
Habeebi Review | ஹபீபி விமர்சனம்

யூசுஃப் கானுக்கு மகன் பிறப்பதிலிருந்து கதைக்குள் செல்கிறது இப்படம். பிறகு, மனைவியைப் பிரிந்து வெளிநாட்டிற்குச் செல்லும் யூசுஃப் தம்பியின் கதை என எமோஷனல் கட்டிடங்களுக்கு இடையேதான் பயணிக்கிறது படத்தின் முதல் பாதி.

இதன் பிறகு, அபுதாஹிருக்கு நிலோஃபர் மீது மலரும் காதல், அதற்குத் தடையாகவும் பிரச்னையாகவும் வரும் பொருளாதாரச் சூழல் எனத் திரைக்கதை அடுத்தடுத்த சாப்டர்களைத் திறக்கிறது. 

காதலுக்காக அபுதாஹிர் தன்னைத் தியாகம் செய்து கொள்வதால் ஏற்படும் விளைவுகள் & பிரச்னைகள், அந்த இடத்தில் பொருளாதாரச் சூழலினால் பேச்சற்று நிற்கும் யூசுஃப் கான் என்பன போன்றவை அழுத்தமாக எழுதப்பட்டிருக்கின்றன. 

மேலும், இஸ்லாமிய சமூகத்தில் பெண்களின் உரிமைகள், அவர்களின் முன்னெடுக்கும் முற்போக்குத்தனம், புலம்பெயர் தொழிலாளர்களின் வலி, இஸ்லாமியர்களுக்குள் இருக்கும் பொருளாதார படி நிலைகள், அவர்களுக்கும் மற்ற மதத்தினருக்குமான உறவு எனப் பல லேயர்களை பேசுகிறது திரைக்ததை.

ஆனால், அவற்றை சுவாரஸ்யமாகவோ, நவீன கதைசொல்லல் முறையிலோ சொல்லாமல், பழைய பாணியிலான திரைமொழியில் பேசியிருப்பது அலுப்பையே தருகிறது. ஒருகட்டத்தில், திக்குத் தெரியாமல் ஓடும் திரைக்கதைக்கு நடுவே வரும் அழுத்தமான காட்சிகள் தாக்கத்தைக் கொடுக்காமல் கடந்துப் போயிருக்கின்றன. 

Habeebi Review | ஹபீபி விமர்சனம்
Habeebi Review | ஹபீபி விமர்சனம்

கடையநல்லூர் வட்டார வழக்கு, ‘நாலு சுவருக்குள்ள வாழ்வது மட்டும் வாழ்க்கையில்ல’ உள்ளிட்ட வசனங்கள் படத்தின் பலம். ‘கப்பலுக்குப் போன மச்சான்’ பாடல் உள்ளிட்ட தமிழ் இஸ்லாமியர்களின் இசை படம் நெடுகிலும் பயன்படுத்திய விதம் ரசிக்க வைக்கிறது. 

பன்னெடுங்கால தமிழ் சினிமாவில் இத்தகைய தமிழ்க் கலாசாரப் பின்னணியில் ஒரு படைப்பாக வந்து கவனிக்க வைக்கிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *