தவெக: “அடுத்த எம்.ஜி.ஆர்; அதிமுக ஆதரவளித்து…" – ஆளுநருக்கு வேண்டுகோள் விடுக்கும் தம்பி ராமையா

Spread the love

தமிழகத்தில் நடந்து முடிந்த தேர்தல் முடிவுகளைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள அரசியல் சூழலில், தமிழகப் பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர், தவெக தலைவர் விஜயை ஆட்சி அமைக்க அழைக்கவில்லை எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனங்களைப் பதிவு செய்திருக்கின்றனர். இந்த நிலையில், நடிகரும், இயக்குநருமான தம்பி ராமையா கதை, வசனத்தில் அவரது மகன் உமாபதி திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் படம் தங்க நட்சத்திரம் 2026 (TN 2026). நட்டி நட்ராஜ் ஹீரோவாக நடிக்க அவருடன் எம்.எஸ்.பாஸ்கர், தம்பி ராமையா, இளவரசு உள்ளிட்டவர்கள் நடித்திருந்தனர்.

Natty - TN 2026
Natty – TN 2026

இந்தப் படத்தில் குறிப்பிட்ட நடிகரின் ரெபரென்ஸ் இருந்தது சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையில், நடிகர் தம்பி ராமையா ஒரு வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறார். அதில், “நடந்து முடிந்த தேர்தலில் தம்பி விஜய் அவர்கள் 40 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார். சுமார் 2 கோடி மக்கள் அவருக்கு வாக்களித்துள்ளனர். இது வெறும் வாக்காளர்களின் எண்ணிக்கை மட்டுமல்ல, ஓட்டுரிமை அற்ற லட்சக்கணக்கான மாணவ – மாணவிகள் மற்றும் குழந்தைகளின் நம்பிக்கையும் இதில் அடங்கியுள்ளது.

கடந்த சில நாட்களாக நிலவும் இழுபறி நிலையால் தமிழகத்தில் உள்ள குழந்தைகள் மற்றும் மாணவர்கள் பெரும் மனச் சஞ்சலத்திற்கு ஆளாகியுள்ளனர். “எப்போது வருவார்?”, “எப்போது பதவி ஏற்பார்?” என்ற ஏக்கத்துடன் ஒவ்வொரு வீட்டிலும் குழந்தைகள் காத்திருக்கின்றனர்.

எனவே, ஆளுநர் தம்பி விஜயை அழைத்து ஆட்சி அமைக்க அனுமதிக்க வேண்டும். அவர் கோரியுள்ள இரண்டு வார கால அவகாசத்தை வழங்க வேண்டும். சட்டமன்றத்தில் அவர் தனது பெரும்பான்மையை நிரூபித்தால் ஆட்சி தொடரட்டும்.

தவெக தலைவர் விஜய்
தவெக தலைவர் விஜய்

ஒருவேளை நிரூபிக்கத் தவறினால், சட்டப்படி ஆட்சியை கலைத்துவிட்டு அடுத்த தேர்தலைச் சந்திக்கலாம். ஆனால், தற்போது நிலவும் இனம் புரியாத குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க அவரை அழைக்க வேண்டும். விஜயை அடுத்த ‘எம்.ஜி.ஆர்’ ஆகப் பார்க்கும் மக்கள் விருப்பத்தை ஏற்று, அதிமுக அவருக்கு ஆதரவு அளித்து ஆட்சிப் பீடத்தில் அமர வைக்க வேண்டும். குழந்தைகளையும் சிறார்களையும் இந்த மன அழுத்தத்திலிருந்து காப்பாற்ற, ஆளுநர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *