தமிழ்நாடு காங்கிரஸ் மாநில பொதுச் செயலாளர் கணபதி சிவக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் ஊழலுக்கு எதிராகவும், பி.ஜே.பி அரசின் மதவாதத்திற்கு எதிராகவும் வாக்களித்தார்கள். ஊழலற்ற நேர்மையான ஆட்சியை தருவீர்கள் என்ற நம்பிக்கையுடன், மாற்றத்தை வேண்டி வாக்களித்த மக்கள் மகத்தான வெற்றியை த.வெ.க-விற்கு தந்துள்ளார்கள். விஜய் முதல்வராக பதவி ஏற்றவுடன் தமிழக அரசியலில் நாகரிகமான அரசியலை முன்னெடுக்கும் விதமாக, முன்னாள் முதல்வர் உள்ளிட்ட அனைத்து கட்சி தலைவர்களையும் நேரில் சந்தித்து ஒரு ஆரோக்கியமான அரசியலுக்கு வழி வகுத்துள்ளீர்கள்.
அதே சமயம், ஒரு சில நிகழ்வுகள் எந்த நோக்கத்திற்காக, ஊழலுக்கு எதிராக, மக்கள் வாக்களித்தார்களோ, அந்த நோக்கத்தையும், எதிர்பார்ப்பையும் சிதைப்பதாக உள்ளது. அ.தி.மு.க கடந்த பத்தாண்டுகளாக பி.ஜே.பி கட்சியுடன் கூட்டணி சேர்ந்து, தமிழக மக்களுக்கு எதிராக செயல்பட்டு வந்துள்ளது. அ.தி.மு.க ஆட்சி காலத்தில் பல்வேறு அமைச்சர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகினார்கள். ஊழலுக்கு ஊற்றுக்கண்ணாக விளங்கி பல்வேறு வழக்குகளை சந்தித்துள்ள ஒரு சிலர் பி.ஜே.பி தலைமையுடன் வெகு நெருக்கம் காட்டி, தேசிய ஜனநாயக கூட்டணி அமைய முனைப்பு காட்டி கூட்டணியை உருவாக்கினார்கள்.