13.உத்தமப் பகைவன்
சலீம் அந்தப் புத்தகத்தைக் கவிழ்த்து வைத்தான்.
கிட்டத்தட்ட எல்லாவற்றினுடைய சுருக்கமான வரலாறு’. அடேங்கப்பா!!
“புத்தகத்தோட இன்ட்ரொடக்ஷன்ல அல்மோஸ்ட் நாம பண்ணிக்கொண்டிருக்கிற புராஜெக்ட்டையே சொல்லிட்டார் பில் பிரைசன்” என்றான். எதிரில் சீட்டா உட்கார்ந்திருந்தான்.
“உன்னை எந்த ஜென்மத்துல போய்த் தேடி அழைத்துவருவது என்று குழம்பிப்போய் இருந்தேன். நல்லவேளை, சீட்டாவோட மூளை டேட்டாவை மெமரி எக்ஸ்ட்ரேக்டரில் போட்டு எடுத்து வைத்து இருந்தேன். மூன்று ஜெனரேஷன் முன்னாடி ஆஃப்கானிஸ்தான்ல பழைய காந்தாரா பக்கத்துல என்னோட ஜீனோம் மேட்ச் ஆச்சு! அப்படியே தூக்கிட்டேன். அதுக்கப்புறம்தான் உன்னோட டேட்டா இன்ஸ்டால் பண்ணேன்!” விளக்கினான் சலீம்.
காஷ்மீரில் நடந்த சலீமின் அக்கா திருமணத்தில், ‘ஜெபருன்னிஸா’ என்கிற வி.வி.ஐ.பி பெண்ணைக் கடத்த ‘சீட்டா’ என்பவன் முயன்றான். அந்த சீட்டாவை ஏற்பாடு செய்து அனுப்பியதே சலீம்தான்.
சலீம் இன்னொரு சீட்டாவை உருவாக்க, காலத்தில் பின்னோக்கிச் சென்று தேவையான, பொருத்தமான உடல்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களின் மனதை மாற்றி கொண்டுவந்து தான் சொல்கிற பணியைச் செய்ய வைக்கிறான். இப்போதைக்கு இவ்வளவு சொன்னால், மேலேயுள்ள சென்ற பத்தியில், அவன் சீட்டாவோடு ஹாவர்டு யுனிவர்சிட்டி நூலகத்துக்குள் பேசிக்கொண்டு இருந்தவிஷயம் தெளிவாகும்.
சலீமின் படிப்பு இங்கிலாந்தில் ஜாகுவார் யுனிவர்ஸிட்டியில் பயோமெக்கானிக்கல் எஞ்சினீயரிங்.
“ஜெபருன்னிஸாவைக் கடத்தி ஒரு பெரிய செட்டில்மென்ட் பார்ப்போம் என்று ஐடியா பண்ணினோம். ஆனால், என்ன செய்வது… சில்வியா எல்லாத்திலும் மண்ணைப் போட்டுட்டா. அதனாலேயே அவளை முடிக்க வேண்டியதா போயிடுச்சு!” அதற்குக் கூடுதல் காரணங்கள் உண்டு அதை சீட்டாவிற்கு சொல்ல மாட்டான் சலீம்.
“சில்வியாவுடைய ரத்தக் குழாய்களுக்குள் இருக்கிற கொலாஜன் திசுவை வீக்கமடையச் செய்கிற கதிர் வீச்சை வெளியிலிருந்து அவளோட செல்ஃபோன் மூலமாகவே ஆக்டிவேட் பண்ணி, அவ லேப் முன்னாடியே சுருண்டு விழப் பண்ணிட்டேன்!” இதைச் சொல்லும்போது சலீமின் முகம் இறுகியது.
தொடர்ந்து கேட்கும்போது, சீட்டாவிற்கு இதெல்லாம் தெரிந்திருந்தது போலவே இருந்தது. ஆனால், தெரியாது. எல்லாமே சிம் கார்டு மாற்றிப் போட்டதனால் ஏறிய விவரங்கள்தான்.
அப்படிச் செய்யும்போது கழுத்துக்குக் கீழே உதடுகளை பிரின்ட் போட்டுவிடுவான் சலீம். அவன் சில்வியாவிற்கு உத்தமப் பகைவன்.

