தமிழ்நாட்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் அதிகபடியான இடங்களை கைப்பற்றும் நிலையில் உள்ளது. ஒருவேளை அருதிப் பெரும்பான்மை கிடைக்காவிட்டால், கூட்டணி அமைத்து அல்லது பிற கட்சிகளின் ஒத்துழைப்புடன் த.வெ.க ஆட்சி அமைக்கும் வாய்ப்பு உள்ளது.
வரலாறு திரும்புகிறதா?
இந்தியக் குடியரசின் முதல் பொதுத்தேர்தல் 1952-ல் நடைபெற்றது. அப்போது, சென்னை மாகாணத்தில் (Madras State) எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மை கிடைக்கவில்லை. அதனால், தொங்கு சட்டமன்ற (Hung Assembly) சூழல் உருவானது. மொத்தம் உள்ள 375 இடங்களில், பெரும்பான்மைக்கு 188 இடங்கள் தேவை. ஆனால், இந்திய தேசிய காங்கிரஸ்152 இடங்களை மட்டுமே பெற்றது. அது, பெரும்பான்மைக்கு 36 இடங்கள் குறைவு.
அந்த சமயத்தில், கம்யூனிஸ்ட் கட்சி (CPI) 62 இடங்களைப் பெற்று வலுவான எதிர்க்கட்சியாக உருவெடுத்தது. எதிர்க்கட்சிக் கூட்டணியினர் தங்களை ஆட்சி அமைக்க அழைக்கக் கோரினார்கள். ஆனால், அப்போதைய ஆளுநர் ஸ்ரீ பிரகாசா, தனிப்பெரும் கட்சியான காங்கிரஸையே முதலில் ஆட்சி அமைக்க அழைக்க முடிவு செய்தார்.

காங்கிரஸை வலுப்படுத்த, தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த சி. ராஜகோபாலாச்சாரி மீண்டும் அழைக்கப்பட்டார். அவர் சட்டமேலவை உறுப்பினராக (MLC) நியமிக்கப்பட்டு, முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அவர் தனது அரசியல் சாணக்கியத்தனத்தால், காமன்வீல் கட்சி மற்றும் உழைப்பாளர் கட்சி போன்ற சிறிய கட்சிகள் மற்றும் சுயேச்சைகளின் ஆதரவைத் திரட்டி, சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.
மீண்டும் தொங்கு சட்டமன்றம்?
தமிழகத்தின் முதல் தேர்தலே ஒரு தொங்கு சட்டமன்றமாக அமைந்து, பெரும் அரசியல் பரபரப்புக்கு இடையே காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்தது. 1952-ல் நடந்தது போன்ற நிலைமை மீண்டும் தமிழகத்தில் ஏற்பட வாய்ப்பு இருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். தற்போதைய நிலவரப்படி, அதிக இடங்களை கொண்ட கட்சியாக த.வெ.க உருவாகியுள்ளது. அந்த வகையில், ஆளுநர் த.வெ.க-வை தான் ஆட்சியமைக்க அழைப்பார். அப்போது,118 என்ற மெஜாரிட்டியை எட்டாத பட்சத்தில் என்ன நடக்கும் என பார்க்கலாம்.