Tamilnadu
oi-Vigneshkumar
சென்னை: 2029 லோக்சபா தேர்தலில் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்பதை ஏற்காவிட்டால் தவெக அரசியில் இருந்தும் கூட்டணியில் இருந்தும் விலகிவிடுவோம் என சுற்றுலா துறை அமைச்சர் ராஜேஷ் குமார் கூறியிருக்கிறார். எந்தவொரு தனி நபரையும் விட காங்கிரஸ் கட்சியே தங்களுக்கு முக்கியம் என்றும் காங்கிரஸ் தலைமையின் முடிவுக்கு கட்டுப்படுவோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக பதவியேற்ற மாணிக்கம் தாகூர், மாநில அளவில் காங்கிரஸ் நிர்வாகிகளை நியமித்து வருகிறார். அதன்படி காங்கிரஸ் கட்சி வலிமையாக இருக்கும் பகுதிகளில் ஒன்றான கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மாணிக்கம் தாகூர் புதிய நிர்வாகிகளை நியமித்தார். குமரி மேற்கு மாவட்ட தலைவராக ஜார்ஜின் பதவியேற்பு விழா மார்த்தாண்டம் அருகே நடைபெற்றது.

அமைச்சர் ராஜேஷ்குமார்
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் சட்டசபை மற்றும் லோக்சபா உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இதில் தமிழ்நாடு சுற்றுலா துறை அமைச்சரான காங்கிரஸின் ராஜேஷ்குமாரும் கலந்து கொண்டார். அங்கு பேசிய ராஜேஷ்குமார், 2029 தேர்தலில் ராகுல் காந்தி தான் பிரதமர் வேட்பாளர் என்றும் அதை ஏற்கவில்லை என்றால் தவெக அரசில் இருந்து விலகுவோம் என அறிவித்துள்ளது.
இது தொடர்பாக அவர் மேலும் பேசுகையில், “தவெக அமைச்சர்கள் எல்லாம் பேசும்போது எங்களுடைய முதல்வர் தான் அடுத்த பிரதமர் என்று எல்லாம் சொல்கிறார்கள். ஒவ்வொரு முறையும் நான் செய்தியாளர்களை சந்திக்கும்போதும் இது தொடர்பாக அமைச்சர் என்ற முறையில் என்னிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இந்த கேள்வி வரும்போது எப்போதும் நான் தெளிவாக பதில் சொல்லிவிடுவேன்.
ராகுல் காந்தி
வரும் 2029 தேர்தலில் எங்கள் தலைவர் தான் பிரதமர் வேட்பாளர். அந்த லோக்சபா தேர்தலில் எங்களுடைய தலைவர் ராகுல் காந்தி தான் வென்று அடுத்த பிரதமராக வருவார். ஒருவேளை தமிழக வெற்றி கழகம் அதற்கு உடன்படாவிட்டால் காங்கிரஸ் கட்சியின் இரு அமைச்சர்களும் அமைச்சரவையில் இருந்து ராஜினாமா செய்வார்கள். இந்த பதவியில் நீடிக்க மாட்டார்கள். எங்கு எப்போது கேட்டாலும் இதுவே எங்கள் பதில். ஏனென்றால் இந்த கட்சிதான் எங்களுக்கு பெரியது.. இந்த கட்சி இல்லாவிட்டால்.. இந்த ராஜேஷ் குமார் ஒன்றுமே கிடையாது.
அமைச்சர் பதவி முக்கியமில்லை
இந்த கட்சி தான்.. இந்த இயக்கம் தான் பெரியது. நாளைக்கே இந்த பதவியை விட்டு செல்ல வேண்டும் என்று சொன்னால் அடுத்த நிமிடமே பதவியை விட்டு விலகிவிடுவேன். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கருத்துக்கள் இருக்கலாம்.. ஒவ்வொரு கொள்கை இருக்கலாம். நமது காங்கிரஸ் கட்சியில் இருக்கக்கூடிய கடைநிலை தொண்டரின் முகம் ராகுல் காந்தி” என்று அவர் பேசினார்.
விஜய்
கடந்த சட்டசபை தேர்தலில் 108 இடங்களில் தவெக வென்ற நிலையில், காங்கிரஸ்- விசிக- ஐயுஎம்எல்- இடதுசாரிகள் கட்சிகளின் ஆதரவோடு தவெக ஆட்சியை அமைத்தது. அக்கட்சியின் தலைவர் விஜய் முதல்வராக பதவியேற்றார். அதேநேரம் அடுத்த பிரதமர் விஜய் என்றும் அக்கட்சியின் அமைச்சர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். சமூக வலைத்தளங்களிலும் இன்புளுயன்சர்கள் மூலம் விஜய் தான் அடுத்த பிரதமர் என்பது போல தகவல்கள் பரப்பப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் தான் ராகுல் காந்தி தான் பிரதமர் என்பதை ஏற்கவில்லை என்றால் ஆட்சியில் இருந்து விலகுவோம் என காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ்குமார் அறிவித்துள்ளார்.