"தவெக அரசு இதை செய்துவிட்டால் நான் பொறுப்பில் இருந்து விலகிவிடுகிறேன்.!”- தங்கம் தென்னரசு சவால்

Spread the love

தமிழகத்தின் அனைத்து துறைகளின் நிதிநிலை, கடன் சுமை முந்தைய நிர்வாக செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு, வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என்று பதவியேற்பு விழாவில் முதல்வர் விஜய் அறிவித்திருந்தார்.

அந்த வகையில் தமிழகத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதியமைச்சர் மரிய வில்சன் நேற்று(ஜூன். 16) வெளியிட்டிருந்தார்.

தமிழ்நாட்டின் மொத்தக்கடன் ரூ.13.18 கோடியாக இருப்பதாகவும், திமுக ஆட்சியில் கடன் இருமடங்கு உயர்ந்திருப்பதாகவும் வெள்ளை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வெள்ளை அறிக்கை வெளியீடு
வெள்ளை அறிக்கை வெளியீடு

இந்நிலையில் முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு வெள்ளை அறிக்கை குறித்து இன்று செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.

“இந்த வெள்ளை அறிக்கை ஒரு வெற்று அறிக்கை. தற்போது பொறுப்பேற்றிருக்கக்கூடிய தவெக அரசு தேர்தல் சமயத்தில் மக்களிடம் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு வகை தெரியாமல் கையை விரித்து அதில் இருந்து தப்பிப்பதற்கே திமுக மீது பழிசுமத்தியிருக்கிறது. நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கை என்பது தமிழ்நாட்டுக்கு புதிது கிடையாது.

2001 மற்றும் 2021ம் ஆண்டுகளில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளன. ஆனால், 2001-ல் வெள்ளை அறிக்கை அதற்கு முந்தைய 10 ஆண்டுகளின் நிதி நிலை விபரங்களைக் கொண்டது. 2021ம் ஆண்டு வெள்ளை அறிக்கை அதற்கு முந்தைய 15 ஆண்டுகளின் நிதி நிலை விபரங்களை கொண்டது.

ஆனால், தற்போது தவெக அரசு முந்தைய 5 ஆண்டுகளின் நிதி நிலையை மட்டுமே வெளியிட்டிருக்கிறது. இதற்கான காரணம் என்ன? யாரைக் காப்பாற்றும் முயற்சியாக அதற்கு முந்தைய அதிமுக அரசின் விபரங்கள் சொல்லப்படவில்லை?

இயலாமையை மூடி மறைக்க, வாக்குறுதிகளில் இருந்து தப்பிக்க தவெக அரசு, மக்களை ஏமாற்ற இந்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டுள்ளது. தவெக அரசின் வெள்ளை அறிக்கையை எஸ்கேப்பிசம் என்று சொல்லலாம். வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், தங்கள் இயலாமையை மூடிமறைக்க தவெக அரசு முயற்சி செய்கிறது.

அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசு

காலை உணவுத் திட்டம் போன்று தமிழ்நாட்டில் உள்ள பல மக்கள் நலத் திட்டங்கள் குஜராத்தில் கிடையாது. தவெக அரசு தேர்தல் வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றும் என்பதை, பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரத்திலேயே எல்லோரும் பார்த்தோம்.

இடைக்கால பட்ஜெட்டிலேயே அரசின் நிதி நிலைமையை தெளிவாக குறிப்பிட்டோம். அதற்குப் பிறகுதான் தவெக தேர்தல் அறிக்கை வெளியிட்டது. இப்போது வாக்குறுதிகளை நிறைவேற்ற வழியில்லாமல் காரணங்களைக் கூறி தப்பிக்கப் பார்க்கிறார்கள்.

நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற ரூ.6 லட்சம் கோடி தேவைப்படும். உங்கள் ஆட்சி முடிவில் அரசின் கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும். இதையும் மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள்.

அப்போது என்ன சொல்லப்போகிறீர்கள் என்பதையும் பார்க்கத்தான் போகிறோம். அரசு கடன் வாங்குவது தவறு அல்ல, அந்தக் கடனை எப்படி மக்கள் நலத்திட்டங்களுக்கு பயன்படுத்துகிறோம் என்பதே முக்கியம்.

அமைச்சர் தங்கம் தென்னரசு
அமைச்சர் தங்கம் தென்னரசு

தவெக ஆட்சி ஒருவேளை 5 ஆண்டுகளை நிறைவு செய்தால், 5 ஆண்டு இறுதியில் தமிழ்நாடு அரசின் கடன் ரூ.20 லட்சம் கோடியாக உயரும். இதை ஒரு சவாலாகவே சொல்கிறேன்.

கடந்த 5 ஆண்டுகளில் திமுக அரசு ஒவ்வொரு ஆண்டும் வாங்கிய சராசரி கடனை விட, தவெக அரசு குறைத்து வாங்கினால், நான் பொறுப்பில் இருந்தே விலகிவிடுகிறேன்” என்று சவால் விடுத்திருக்கிறார்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *