‘நான் முதல்வன்’ திட்டம் பெயர் மாற்றம், ஸ்டாலின் வீடியோக்கள் அகற்றம்: தவெக அரசு செயலுக்கு வலுக்கும் கண்டனம்  – Kumudam

Spread the love

கடந்த தி.மு.க ஆட்சியில் முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் கனவுத் திட்டமாக 2022-ஆம் ஆண்டு ‘நான் முதல்வன்’ திட்டம் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தின் பெயர் தற்போது ‘TN Skill Corporation’ என மாற்றப்பட்டுள்ளது. பெயர் மாற்றத்தோடு மட்டுமின்றி, கணக்கின் முகப்புப் படம் (Profile Picture) மற்றும் முகப்புப் பேனர் ஆகியவையும் புதிய பாணியில் மாற்றியமைக்கப்பட்டுள்ளன. 

மேலும், கடந்த ஆட்சியில் இத்திட்டம் குறித்துப் பதிவிடப்பட்ட வீடியோக்கள், சாதனைகள், மாணவர்களின் நேர்காணல்கள் மற்றும் மு.க.ஸ்டாலின் பங்கேற்ற நிகழ்வுகள் உள்ளிட்ட அனைத்துப் பழைய தரவுகளும் கணக்கிலிருந்து முற்றிலும் நீக்கப்பட்டு, மே 15-ஆம் தேதியிலிருந்து மட்டுமே புதிய பதிவுகள் இடம்பெற்றுள்ளன.

வழக்கமாக ஆட்சி மாற்றம் ஏற்படும் போது முந்தைய அரசின் திட்டப் பெயர்கள் மாற்றப்படுவது இயல்பு என்றாலும், மாணவர்களின் சாதனைகள் அடங்கிய ஆவணப் பதிவுகள் நீக்கப்பட்டிருப்பது கல்வியாளர்கள் மற்றும் மாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. “நாங்கள் தான் மாற்று சக்தி என்று கூறும் த.வெ.க அரசு, மக்கள் நலன் சார்ந்த திட்டங்களிலோ, சட்ட ஒழுங்கிலோ மாற்றத்தைக் கொண்டு வராமல், கல்வி சார்ந்த ஒரு திட்டத்தின் பெயரை மாற்றுவது தான் மாற்றமா?” என்று சமூக வலைதளங்களில் கல்வியாளர்கள் மற்றும் எதிர்க்கட்சியினர் கடுமையான கண்டனங்களையும் விமர்சனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.

தமிழக இளைஞர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் தொழில்சார்ந்த திறன்களை மேம்படுத்தி, வேலைவாய்ப்புகளை அதிகரிக்கும் நோக்கில் இத்திட்டம் உருவாக்கப்பட்டது. ஆண்டுதோறும் 10 லட்சம் மாணவர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிப்பதை இலக்காகக் கொண்ட இத்திட்டத்தின் கீழ், இலவச மற்றும் குறைந்த கட்டணத்திலான தொழில்நுட்பப் பயிற்சிகள், போட்டித் தேர்வு பயிற்சிகள், ஆளுமைத்திறன் மற்றும் வெளிநாட்டு மொழிப் பயிற்சிகள் (ஆங்கிலம், ஜப்பானிய, ஜெர்மன்) ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் வாயிலாக வழங்கப்பட்டு வந்தன. மாவட்ட அளவில் கலெக்டர் தலைமையிலான குழுவால் கண்காணிக்கப்பட்ட இத்திட்டம், மாறிவரும் உலகளாவிய வேலைவாய்ப்புச் சந்தைக்கு ஏற்ப மாணவர்களைத் தயார்படுத்தும் தளமாகச் செயல்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *