நடந்து முடிந்துள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. கட்சி தோல்வியைத் தழுவிய நிலையில், த.வெ.க அதிக இடங்களை வென்ற தனிக்கட்சியாக உள்ளது.
ஆனாலும் தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைப்பதற்கான எண்ணிக்கை த.வெ.கவிற்குக் கிடைக்கவில்லை. மொத்தமுள்ள 234 தொகுதிகளில் 118 தொகுதிகளை தனிக் கட்சியாக வென்றால் மட்டுமே தனிப்பெரும்பான்மை ஆட்சி அமைக்க முடியும்.

ஆனால் தனிக்கட்சியாக 108 இடங்களை மட்டுமே த.வெ.க வென்றுள்ளது. பெரும்பான்மைக்குத் தேவையான இடங்களை கட்சி பெறாததால், ஆதரவு அளிக்க காங்கிரஸை த.வெ.க நாடியிருப்பதாகத் தகவல் வெளியாகியிருந்த நிலையில் த.வெ.க ஆட்சி அமைக்க ஆதரவு அளிப்பதாக காங்கிரஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறது.
இந்நிலையில் இதுதொடர்பாக பேசியிருக்கும் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம், “தமிழ்நாடு மக்கள் வாக்களித்துவிட்டார்கள். மாற்றத்திற்காக வாக்களித்திருக்கிறார்கள். ஆனால் மக்கள் யாருக்கும் தனிப்பெரும்பான்மை கொடுக்கவில்லை.
ஒரு கட்சிக்கு அதிக இடங்களை வழங்கியிருக்கிறார்கள். 108 இடங்களைக் கொடுத்திருக்கிறார்கள். குறிப்பாக அந்தக் கட்சியின் தலைவர் விஜய்க்கு வாக்களித்திருக்கிறார்கள். அவர் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என்று வாக்களித்திருக்கிறார்கள். தற்போது எங்களின் ஆதரவை விஜய் கேட்டிருந்தார்.

எங்கள் கட்சியில் இருக்கும் அனைவரும் சேர்ந்து ஒரு மனதாக மதசார்பற்ற அரசாங்கம் அமைய த.வெ.கவுக்கு ஆதரவு தந்திருக்கிறோம். தேர்தலுக்கு முன்பு கட்சிகள் ஒரு நிலைபாட்டில் இருப்பார்கள்.
தேர்தலுக்குப் பிறகு பெரும்பான்மை கிடைக்காவிட்டால் எதிர் எதிராக நின்றவர்கள் கூட ஒரு கூட்டணி அமைப்பார்கள். விஜய் எங்களை மதித்து அழைத்ததால் நாங்கள் த.வெ.கவிற்கு ஆதரவு தெரிவித்திருக்கிறோம்” என்று கூறியிருக்கிறார்.