காங்கிரஸின் பாரம்பரியம், திமுக – அதிமுகவின் அதிகார பலம் எனப் பலமான அடித்தளம் கொண்ட சிவகங்கை மண்ணில், இம்முறை மொத்தமாக “ஆப்பு’ வைத்திருக்கிறது தவெக.
ஜாம்பவான்களைச் சாய்த்து நான்கு தொகுதிகளையும் ஒட்டுமொத்தமாக அள்ளிய தவெக-வின் இந்த வேகம், தென்மாவட்ட அரசியலில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
திராவிட, தேசிய கட்சிகளுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சிவகங்கை மாவட்டத்தின் 4 தொகுதிகளிலும் தனது ‘வெற்றிக் கோட்டையாக’ மாற்றியிருக்கிறார் தளபதி விஜய்.
தி.மு.க. மற்றும் அதிமுகவின் கோட்டையாகக் கருதப்பட்ட மானாமதுரை (தனி) மண்ணில், முன்னாள் ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரும், தற்போதைய சிட்டிங் எம்.எல்.ஏ-வுமான தமிழரசியை வீழ்த்தி ‘ஜாக்பாட்’ அடித்திருக்கிறார் த.வெ.க-வின் இளங்கோவன்.
44 வயதான இளங்கோவன், தொழில் ரீதியாக ஒரு புகைப்படக் கலைஞர்.
திருப்புவனம் மேற்கு ஒன்றியச் செயலாளராகப் பணியாற்றிய அனுபவத்தை வைத்து, ஆளுங்கட்சியின் அதிகார பலத்தை அசால்ட்டாக ஓரம் கட்டியிருக்கிறார்.
இவருக்குப் பின்னால் உறுதுணையாக நின்றது இவரது குடும்பம் தான். மளிகைக்கடை நடத்தி வரும் மனைவி ஜெயலெட்சுமி ஒரு மகன் மற்றும் ஒரு மகள் என சிறிய குடும்பத்தைச் சேர்ந்த இளங்கோவன், ஒரு சராசரி மனிதனாலும் அரசியலில் சாதிக்க முடியும் என நிரூபித்துள்ளார்.