தவெக ஆட்சியைக் கவிழ்க்க Sketch? MLA-க்களைக் குறிவைக்கும் இலைக்கட்சி வாரிசு…ரகசிய ஆபரேஷன் என்ன? – Kumudam

Spread the love

கடந்த சட்டமன்றத் தேர்தலில் விசில் கட்சி போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில், மே 10 ஆம் தேதி விசில் கட்சியின் தலைவர் முதலமைச்சராகப் பொறுப்பேற்று ஆட்சியை அமைத்தார்.

அரசியல் களம் என்பது இந்த விசில் கட்சிக்கு புதிது என்பதால் ஆட்சியின் தொடக்கத்தில், ஆறு மாதம் எங்களுக்கு நேரம் கொடுங்கள் என்று கெஞ்சினார்கள். இதற்கு ஓகே சொல்லி எதிர்க்கட்சியினர் ஒத்துழைப்பை நல்கிய நிலையில், தற்போது (நவ., 08 ஆம்) தேதியுடன் ஆறுமாதம் முடிவுற்றது. இனிமேல் விசில் கட்சியின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்கு நல்ல நேரம் வந்துவிட்டதாக எதிர்க்கட்சியினர் வட்டாரங்களில் திட்டம் தீட்டி வருகின்றனர்.

ஒரு பக்கம் எதிர்க்கட்சியினரின் சதித் திட்டம் இருந்தாலும், மற்றொரு பக்கம் விசில் கட்சியின் ஆரம்ப கால ஆட்டத்திலிருந்து தற்போது அமைதி காத்து வருவதாகக் அரசியல் வட்டாரங்களில் சில தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

ஏனென்றால், இந்த அரசு ஆட்சி அமைத்து சிங்கப்பெண் அதிரடிப் படை மற்றும் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம், வெற்றி பயணம் திட்டம், இதுபோல பல திட்டங்களை மக்களுக்குக் கொடுத்திருந்தாலும், சட்டம் ஒழுங்கு என்பது விசில் கட்சியின் மத்தியில் தாறுமாறாகத் தறிகெட்டு போயிருக்கிறது. இது எதிர்க்கட்சிகள் மற்றும் பொதுமக்களின் குற்றச்சாட்டுகளாக இருந்து வருகிறது.

சமீபத்தில் தீபாவளி பண்டிகையின்போதே 10-க்கும் மேற்பட்ட கொலைச் சம்பவங்களும், குற்றங்களும் அதிகமாக நடைபெற்றன. சிறுமிகள் மாயமாவது, பெண்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாவது உள்ளிட்ட பல பிரச்னைகள் விசில் கட்சியில் தலைவிரித்தாடி வருகின்றன.

அதைத் தொடர்ந்து, தற்போது தவெக எம்எல்ஏக்களின் செயல்பாடுகளும் விசில் கட்சித் தலைவருக்கு மிகப்பெரிய தலைவலியாக மாறியுள்ளது. குறிப்பாக, தொகுதியின் குறைகளைச் சொல்ல வந்தவரைத் தாறுமாறாகத் தாக்கிய எம்எல்ஏ மூலமும், மாவட்ட ஆட்சியருக்கே ஆபாச மெசேஜ் அனுப்பிய எம்எல்ஏ மூலமும், பெரும் நெருக்கடியில் இந்த அரசு இருந்து வருகிறது. இதை கருத்தில் கொண்டு தவெக அரசு இனிமேலும் நீடிக்குமா? என்ற பதற்றம் விசில் கட்சித் தலைவருக்கே பயத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்த ஆட்சியின் ஆறு மாதம் முடிவடைந்த நிலையில், இதனைப் பொறுத்துக்கொள்ளாத எதிர்க்கட்சிகள் இந்த அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைக் கொண்டு வரலாம் என்று விசில் கட்சித் தலைவருக்குச் சந்தேகம் எழுந்துள்ளது. எதிர்க்கட்சிகள் தரப்பில் 35 எம்.எல்.ஏ.க்கள் ஒன்றாகக் கையெழுத்திட்டு கடிதம் கொடுத்தாலே, நம்பிக்கையில்லாத் தீர்மானத்தைச் சபாநாயகர் 14 நாட்களுக்குள் சட்டமன்றத்தில் விவாதத்திற்கு முன்வைக்க வேண்டும். ஏற்கெனவே திமுகவும், அதிமுகவும் அவரவர் பங்கிற்கு சில தவெக எம்.எல்.ஏக்களை மூளைச்சலவை செய்திருக்கின்றன.

குறிப்பாக, இலைக்கட்சியின் வாரிசு தீபாவளிக்கு சில நாட்களுக்கு முன்பு தவெக எம்எல்ஏக்கள் சிலரைத் தொடர்புகொண்டு தீபாவளி வாழ்த்துகளைச் சொல்லியிருக்கிறார். வாழ்த்து மட்டும் சொல்லாமல் கூடவே, ‘உங்களுக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் கேளுங்கள்’ என்று கூறியதாக உளவுத்துறை மோப்பம் பிடித்து விசில் தலைமையிடம் கூறியிருப்பதாகக் கூறப்படுகிறது.

இதையெல்லாம் மனதில் வைத்து கொண்டு ஒழுங்காக நடந்துக் கொள்ளுங்கள் என்று எம்எல்ஏக்களிடம் விசில் தலைமை எச்சரித்துள்ளார். என்ன நடக்கபோகுது? விசிலின் ஆட்டம் தொடருமா? இல்லை பின்வாங்குமா? என்பதை பொறுத்திருந்து பார்போம்.

 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *