தமிழ்நாடு சட்டசபை துணை சபாநாயகராகவும், த.வெ.க-வின் மாவட்டச் செயலாளராகவும் இருப்பவர் எம்.எல்.ஏ ரவிசங்கர். நேற்று முன்தினம் துறையூரைச் சேர்ந்த கார்த்திக்குமார் (48) என்பவர் குடிநீர் பிரச்னைக்காக தொகுதி எம்.எல்.ஏ-வான ரவிசங்கரைச் சந்திக்கச் சென்றதாகவும், அப்போது, கார்த்திக்குமாரை ரவி சங்கர், அவரது ஆதரவாளர்கள் சேர்ந்து தாக்கியதாகவும் கூறப்படுகிறது.
இதன் தொடர்ச்சியாக, தாக்கப்பட்ட கார்த்திக்குமார் பேசிய மற்றொரு வீடியோ, நேற்று காலை வெளியானது. அந்த வீடியோவில் துணை சபாநாயகரும் உடனிருந்தார்.

அதில் பேசிய கார்த்திக்குமார், “துணை சபாநாயகர் என்னைத் தாக்கவில்லை. வீடியோ திரித்து வெளியிடப்பட்டுள்ளது”‘ என்று கூறியிருந்தார். நேற்று மதியம் கார்த்திக்குமாரின் மற்றொரு வீடியோ வெளியானது. அதில் பேசிய அவர், “துணை சபாநாயகர் ரவிசங்கர் என்னைத் தாக்கியது உண்மை. அப்படிச் சொல்லாவிட்டால், என்னையும், குடும்பத்தினரையும் கொன்றுவிடுவதாக மிரட்டினர். அதனால், வீடியோவில் அப்படி பேசினேன்” என்று கூறியுள்ளார். அத்துடன் நேற்று மாலை அவர், திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்ந்துள்ளார்.