தாத்தா தமிழகத்தின் ‘ஸ்பீக்கர்’, பேத்தி சர்வதேச `பெஸ்ட்’ ஸ்பீக்கர்! – கலக்கும் காந்தள்

Spread the love

தி ஹேக், நெதர்லாந்து நாட்டின் மூன்றாவது பெரிய நகரம். “ரோம் சட்டம்’ என்னும் ஒப்பந்தத்தின்படி நிறுவப்பட்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் இந்நகரின் முக்கிய‌ அடையாளம். உலக அளவில் இனப்படுகொலை, ஆக்கிரமிப்பு, போர்க்குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் ஆகிய நான்கு வகை குற்றங்களை நிகழ்த்தும் அல்லது அவற்றுக்குக் காரணமாக இருக்கும் யாராக இருந்தாலும், இந்த நீதிமன்றத்தின் விசாரணை வளையத்துக்குள் வருவர்.

தற்போது இஸ்ரேல் அதிபர் நெதன்யாகுவை போர்க்குற்றங்களுக்காக விசாரிப்பதற்கான சட்டபூர்வ முயற்சிகளில் இறங்கியிருக்கிறதாம், இந்த நீதிமன்றம்.

இத்தகைய பெருமைக்குரிய இந்த நீதிமன்றத்திடமிருந்து ‘பெஸ்ட் டெஃபென்ஸ் கவுன்செல் ஸ்பீக்கர்’ என்கிற பெருமைமிகு விருதைப் பெற்றிருக்கிறார் சென்னையைச் சேர்ந்த காந்தள்.

தென்னிந்தியாவிலேயே முதன் முதலாக இந்த விருதைப் பெற்றிருக்கும் காந்தள், திரைப்படத் தயாரிப்பாளர் ஏ.எல்.சீனிவாசனின் கொள்ளுப் பேத்தி மற்றும் முன்னாள் தமிழகச் சட்டப்பேரவைத் தலைவர் காளிமுத்துவின் பேத்தி ஆவார்.

kandhal's best speaker award

kandhal’s best speaker award

காந்தளிடம் வாழ்த்துகளைச் சொல்லிப் பேசினோம்.

“சென்னை சர்ச் பார்க் பள்ளியில் பள்ளிப்படிப்பை முடிச்சேன். பிளஸ் டு-வில் ஆங்கிலத்தில் மாநில அளவுல முதலிடம் பிடிச்சேன். அந்தப் பள்ளியிலிருந்து வெளியில் வரும்போது பெஸ்ட் அவுட் கோயிங் ஸ்டூடண்ட் விருதும் வாங்கினேன். மறைந்த முதல்வர் ஜெயலலிதா மேடமும் இந்தப் பள்ளியில் இந்த விருதை வாங்கியவங்கதான்.

தொடர்ந்து சட்டம் படிக்க விருப்பப்பட்டு துபாய் போனேன். அங்க எல்.எல்.பி கோர்ஸ்ல சேர்ந்து போன மாசத்தோட அந்தப் படிப்பும் முடிஞ்சிடுச்சு.

ஐக்கிய அரபு அமீரகத்துல நான் படிச்ச யுனிவர்சிட்டியில இருந்துதான் இந்தப் போட்டியில கலந்துக்கிட்டேன். வருடா வருடம் சர்வதேச அளவுல நடக்கிற போட்டி இது. ஆக்ஸ்போர்டு, கேம்ப்ரிட்ஜ், ஹார்வர்டு முதலான உலகின் புகழ்மிக்க பல்கலைக்கழகங்கள்ல இருந்தெல்லாம் மாணவர்கள் கலந்துக்கிட்டாங்க.

முதல்ல கட்டுரை வடிவத்துல எழுதற மாதிரி இருக்கும். முப்பதாயிரம் வார்த்தைகள்ல எழுதியிருந்தேன் நான்.

இந்த எழுத்து வடிவ கட்டுரைக்கு ஒரு வெயிட்டேஜ் கொடுப்பாங்க.

ஆனாலும் ஃபைனலில் ஓரல்லா பேச வச்சுதான் வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கிறாங்க.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *