தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்குத் தங்க மோதிரம் வழங்கும் வகையில், ‘தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தை முதலமைச்சர் விஜய் நேற்று (செப். 28) தொடங்கி வைத்தார். மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற அவர், அங்கு பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரங்களைத் தனது கைகளால் அணிவித்து, தாய்மார்களுக்கு வாழ்த்துத் தெரிவித்தார்.
எளிய குடும்பங்களைச் சேர்ந்த தாய்மார்களுக்கும் குழந்தைகளுக்கும் உதவும் நோக்கில் கொண்டுவரப்பட்டுள்ள இந்தத் திட்டத்திற்காகத் தமிழ்நாடு அரசு ரூ.755.83 கோடி நிதி ஒதுக்கியுள்ளது. முதல்கட்டமாக, ஜூன் 22 முதல் செப்டம்பர் 27 வரை அரசு மருத்துவமனைகளில் பிறந்த குழந்தைகளுக்கும் மோதிரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
முதல் நாளிலேயே 3,297 குழந்தைகளுக்கு மோதிரம்!
மாநிலம் முழுவதும் திட்டம் நடைமுறைக்கு வந்த நிலையில், தொடக்க நாளான செப்டம்பர் 28-ம் தேதி மட்டும் 3,297 குழந்தைகளுக்கு தலா ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்பட்டுள்ளதாகப் பொது சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதன்படி, ஒவ்வொரு மாவட்டத்திலும் சராசரியாக 87 குழந்தைகளுக்கு மோதிரம் வழங்கப்பட்டுள்ளது.
ஆனால், எதிர்பார்த்ததைவிட முதல் நாளில் மோதிரம் பெற்ற குழந்தைகளின் எண்ணிக்கை குறைவாக இருப்பதாகத் தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சில நடைமுறைச் சிக்கல்களே இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது.
மோதிரத்தைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு யாருக்கு?
திட்டத்தின் நோக்கம் குழந்தைகளுக்கும் தாய்மார்களுக்கும் மகிழ்ச்சியை அளிப்பதாக இருந்தாலும், அதை நடைமுறைப்படுத்துவதில் சில கேள்விகள் எழுந்துள்ளன. அரசு மருத்துவமனைகளில் வழங்குவதற்காக வைக்கப்படும் தங்க மோதிரங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு ஸ்டாப் நர்ஸ்களுக்கு வழங்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஏற்கெனவே நோயாளிகளைக் கவனிப்பது, மருத்துவப் பணிகளுக்கு உதவுவது எனப் பல்வேறு வேலைகளுக்கு இடையே செவிலியர்கள் பணியாற்றி வருகின்றனர். பல இடங்களில் பணியாளர் பற்றாக்குறையும் இருப்பதாகக் கூறப்படும் நிலையில், தங்க மோதிரங்களைப் பாதுகாக்கும் கூடுதல் பொறுப்பு வழங்கப்பட்டால் பணிகளை எப்படிச் சமாளிப்பது என்பதுதான் அவர்களின் கவலையாக இருக்கிறதாம்.
அதுமட்டுமல்ல… பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ள மோதிரங்களில் ஏதேனும் காணாமல் போனாலோ, கணக்கில் தவறு ஏற்பட்டாலோ யார் பொறுப்பேற்பது என்ற கேள்வியும் எழுகிறதாம். குழந்தைகளுக்கான திட்டம் என்பதால், அதில் எந்தவிதமான தவறும் நடந்துவிடக் கூடாது என்பதில் மாற்றுக் கருத்தில்லை. அதேநேரத்தில், மருத்துவப் பணிகளுக்கு இடையே நகைகளைப் பாதுகாக்கும் பொறுப்பையும் செவிலியர்களிடம் ஒப்படைப்பது நடைமுறையில் என்னென்ன சிக்கல்களை ஏற்படுத்தும் என்ற விவாதமும் எழுந்துள்ளது.
குழந்தைகளுக்கு மகிழ்ச்சி தரும் திட்டத்தைச் செயல்படுத்துவதுடன், மருத்துவப் பணியாளர்களின் பணிச்சுமையையும் கருத்தில் கொள்ள வேண்டியது அவசியம். மோதிரங்களைப் பாதுகாப்பதற்கான முறையான ஏற்பாடுகள், பொறுப்புகள் குறித்த தெளிவான வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்படுமா? செவிலியர்களின் இந்தக் கவலைகளுக்கு அரசு என்ன தீர்வு காணப்போகிறது என்பதுதான் இப்போதைய கேள்வி.

