Tamilnadu
oi-Vishnupriya R
தாராபுரம்: விஐபிக்களுக்கு ரூ 4000-த்தை தவெக அரசு தரவில்லை, ஆனால் அதற்குள் “விஐபி” தனுஷே அரசியலுக்கு வந்துவிட்டார் என தாராபுரத்தில் திமுக வேட்பாளர் சுகன்யாவை ஆதரித்து பேசிய போது திமுக எம்பி கனிமொழி கலகலப்பாக பேசியிருந்தார்.
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் உள்ள கிளாங்குண்டல் பகுதியில் இன்று திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற திமுக குழுத் தலைவருமான கனிமொழி பிரச்சாரம் மேற்கொண்டார்.

அவர் பேசுகையில், நடந்து முடிந்த தேர்தலில் தவெக முழுவதுமாக வெற்றி பெறவில்லை என்றாலும் திமுகவின் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைந்துள்ளது. இன்று அக்கட்சி ஆட்சி அமைந்துள்ள நேரத்தில் இங்கு இடைத்தேர்தல் வருவதற்கான காரணம் என்ன என்ற கேள்வி எழலாம்.
தீயசக்தி, தூயசக்தி மற்றும் தூர்ந்துபோன சக்தி என்று அதிமுகவை சொன்னார்கள். அந்த தூர்ந்துபோன சக்தியில் வெற்றி பெற்ற ஒரு வேட்பாளரை ராஜினாமா செய்யச் சொல்லி, அந்த ராஜினாமா செய்யச் சொன்னதற்கு பின்னால் எந்த சக்தி இருந்தது என்று தெரியவில்லை.
தீர்ந்து போன சக்தி
இன்று இடைத்தேர்தலில் தீர்ந்துபோன சக்தியிடம் இருந்து சக்தியை எடுத்து ஸ்டாம்ப் குத்தி தங்கை சத்யபாமா என்று தேர்தலில் நிறுத்தியுள்ளார்கள். நீங்கள் நினைக்கலாம், கடந்தமுறை அதிமுகவுக்கு வாக்கு செலுத்தி வெற்றிபெற செய்தோம். அவர்களிடம் இருந்து ஒரு திருட்டு சக்தி அங்கே ஒரு வேட்பாளரை எடுத்து விட்டார்கள் என்று! அதிமுகவுக்கு வாக்கு செலுத்தினால் மீண்டும் அதேதான் நடக்கும்.
ஆகவே நம்முடைய ஸ்டாலின் தேர்ந்தெடுத்து உங்கள் கைகளிலே ஒப்படைத்த வேட்பாளர் சுகன்யா, வழக்கறிஞர் அணியிலே உள்ளார். அவரின் கணவர் இளைஞர் அணியில் உள்ளார் மற்றும் கணவருடைய தாய் திராவிட முன்னேற்றக் கழகத்தில் பொறுப்பில் பணியாற்றிக் கொண்டுள்ளார்.
ரத்தத்தில் திமுக
எனவே வழிவழியாக திராவிட முன்னேற்றக் கழகத்தில் பணியாற்றக் கூடிய இடத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ள, என் ரத்தத்திலே திராவிடம் ஓடுகிறது என்று சொல்லக் கூடிய ஒரு குடும்பத்தில் இருந்து வந்த பெண்ணை தேர்ந்தெடுத்து உங்கள் கையிலே ஸே்ட ஒப்படைத்திருக்கிறார்கள்.
உங்களுக்கு நன்றாக தெரியும், இந்த தவெக ஆட்சிக்கு வந்த பிறகு நம்முடைய கழகத்தில் உள்ள எம்.எல்.ஏ.கள், முன்னாள் அமைச்சர்கள் வீட்டிற்கு வாராவாரம் ரெய்டு அனுப்புகிறார்கள். இன்று நம்முடைய கழகத்தில் எத்தனையோ சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கழக நிர்வாகிகளை கைது செய்து அவர்கள் மீது வழக்குகள் போட்டு வைத்து எத்தனை பாடுபடுத்தினாலும், கொண்ட கொள்கையும் கொண்ட தலைவனும் ஒன்றே என்று திராவிட முன்னேற்றக் கழகம் நிற்கிறது.
அதனால் நம்முடைய வேட்பாளரை உங்களின் மேலான வாக்குகளை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்கவேண்டும். அப்படி சுகன்யா வெற்றி பெற்றால் உங்களுக்காக சட்டமன்றத்தில் பேசுவார். சட்டமன்றத்தை விட்டு ஓடிப்போக மாட்டார்.
50 கோடி ரூபாய்
தூயசக்திக்கு எப்படி 50 கோடி வந்தது என்று தெரியவில்லை. தூயசக்தி என்று சொல்கிறார்கள், ஆனால் சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கிக் கொண்டு இருக்கிறார்கள். அதெல்லாம் விலை போகாமல் மக்களுக்காக பாடுபடக் கூடிய ஒருவராக நீங்கள் தேர்ந்தெடுக்கக்கூடிய வேட்பாளர் எந்த காலகட்டத்திலும் உங்களை ஏமாற்றாத வேட்பாளராக திராவிட முன்னேற்றக் கழக பிரதிநிதியாக சுகன்யா நிலைத்து நிற்பார் என்கிற உறுதியோடு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெற செய்யவேண்டும்.
50 ஆண்டுகள்
ஒரு கட்சியின் தலைவர் பல்வேறு சோதனைகளை தாண்டி 50 ஆண்டுகளுக்கு மேலாக பொதுவாழ்க்கையில் உள்ள தலைவரை மேடையில் நின்று Sweet Uncle என்று அழைக்கக் கூடிய முதலமைச்சரை நான் அன்பு தம்பி விஜய் என்றுதான் அழைக்கப் போகிறேன்.
அன்பு தம்பி விஜய்
அன்பு தம்பி விஜய் 24 மணிநேரமும் நம்முடைய தலைவர் ஸ்டாலின், திராவிட முன்னேற்றக் கழகத்தையும் தான் நினைத்துகொண்டு இருக்கிறார். காலையில் எழுந்தால் திமுக, உடற்பயிற்சி செய்யும்பொழுது திமுக, சாப்பாடு கொண்டுவந்து அவரே திறந்து அவரே சாப்பிடும்பொழுதும் திமுக, மீண்டும் மாலை 5 மணிக்கு கிளம்பிவிடுவார். அதற்கு பிறகு யாரும் அவரை பார்க்க முடியாது. அப்பொழுதும் திமுக. அந்தளவுக்கு திமுகவை அவர் தியானம் செய்துகொண்டுள்ளதால் தான் அவரது பிரச்சாரத்தில் 20 முறைக்கு மேலாக திமுக பற்றி பேசியிருக்கிறார்.
20 நிமிடம் பேச்சில் 40 முறை திமுக, திமுக என்று திமுகவின் புகழை பாடிக்கொண்டு இருக்கிறார். அவரே புரிந்துகொண்டுள்ளார், நமக்கு இந்த ஆட்சி செய்யலாம் வராது என்று மக்களும் நினைத்து விட்டார்கள்.
தலைகீழ் மாற்றம்
ஒரே நாளில் முதலமைச்சராகி எல்லாவற்றையும் தலைகீழாக மாற்றிவிடுவார் என்றும், சினிமாவில் வருவதுபோன்று பெண்களுக்கு பிரச்சினை என்றால் அண்ணன் மேல இருந்து குதித்து காப்பாற்றிவிடுவார் என்றும், குற்றங்கள் நடக்கும் இடத்தில் இருப்பார், காப்பாற்றப்படுவோம் என்று அவரும் நினைத்திருக்கலாம், அவருக்கு வாக்களித்த மக்களும் நினைத்திருக்கலாம். ஆனால் உண்மை என்னவென்றால் ஆட்சிக்கு வந்து 4 மாதம் ஆகின்றது. இந்த 4 மாதங்களில் 500 குற்றசம்பவங்கள், 200க்கு மேல் கொலைகள், 300 மேல் குழந்தைகள் உள்ளிட்ட பெண்கள் மீதான பாலியல் வன்முறைகள், 10 ஆணவ கொலைகள், 8 லாக்கப் மரணங்கள். இதுதான் தம்பி விஜய் கொண்டு வந்திருக்கக்கூடிய மாற்றம், வேறு ஒன்றும் இல்லை.
வேலையில்லா பட்டதாரி
ஆண்டுக்கு 6 சிலிண்டர்கள் தருவதாக சொன்னார்களே கொடுத்தார்களா? மகளிர் உரிமைத் தொகை ரூ2500 கொடுப்பதாக சொன்னார்களே தந்தார்களா? அது போல் வேலையில்லாத பட்டதாரிகளுக்கு ஆண்டுக்கு ரூ 4000 தருவதாக சொன்னாரே செய்தாரா?
வேலையில்லாத பட்டதாரிக்கு ரூ 4000 வரவில்லை, ஆனால் அந்த படத்தில் நடித்த தனுஷ் அரசியலுக்கு வந்துவிட்டார் என கனிமொழி நகைச்சுவையாக தெரிவித்தார்.