தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம்….ஜாய் ஆலுக்காஸ் எதிரான வழக்கு தள்ளுபடி! – Kumudam

Spread the love

தமிழ்நாடு அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் (22 கேரட்) தங்க மோதிரம் வழங்கும் திட்டத்திற்கான டெண்டர், ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தின் கீழ், 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்களை கொள்முதல் செய்வதற்காக தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் டெண்டர் கோரியிருந்தது.

இந்த நிலையில், ஒரு பைசா விலையில் தங்க மோதிரங்களை சப்ளை செய்வதாக முன்வந்த ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டெண்டரை ரத்து செய்யக் கோரி, சென்னையைச் சேர்ந்த பொற்கொல்லர் ராஜ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி ஜி. அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில், டெண்டர் விதிகளின்படி தங்க மோதிரங்களை தயாரித்து, மாநிலம் முழுவதும் உள்ள 107 மையங்களுக்கு ஹால்மார்க் முத்திரையுடன் அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.

மேலும், ஒரு நகைக்கு ஹால்மார்க் முத்திரை பெற ரூ.45 கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில், 4 லட்சத்து 41 ஆயிரத்து 667 தங்க மோதிரங்களை வெறும் ரூ.4,465-க்கு சப்ளை செய்வதாக ஜாய் ஆலுக்காஸ் நிறுவனம் தெரிவித்திருப்பது வணிக ரீதியாக சாத்தியமற்றது என மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது.

இதுபோன்ற குறைந்த விலையில் வழங்கப்படும் நகைகள் தரமானதாக இருக்காது என்றும், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகம் மருந்துப் பொருட்கள் கொள்முதல் செய்வதில் நிபுணத்துவம் பெற்றிருந்தாலும், தங்கம் தொடர்பான கொள்முதலில் அந்த கழகத்திற்கு என்ன நிபுணத்துவம் உள்ளது என்றும் மனுதாரர் தரப்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு நீதிபதிகள் குறுக்கிட்டு, திட்டத்தையோ அல்லது டெண்டர் நடைமுறையையோ எதிர்த்து வேண்டுமானால் வழக்கு தொடர முடியும்; ஆனால், டெண்டர் வழங்கப்பட்டதை மட்டும் எதிர்த்து வழக்கு தொடர முடியாது என தெரிவித்தனர்.

மேலும், குறைந்த தொகையில் டெண்டர் வழங்கப்பட்டிருப்பதன் மூலம் அரசுக்குத்தான் நிதி ரீதியாக பயன் ஏற்படும் என்றும், சம்பந்தப்பட்ட நிறுவனத்திடம் ஏற்கனவே போதுமான அளவு தங்கம் இருப்பதால் அந்த தொகைக்கு சப்ளை செய்ய முன்வந்திருக்கலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். தங்க மோதிரங்களின் தரம் குறைவாக இருந்தால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் டெண்டரை ரத்து செய்வார்கள் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

இதையடுத்து, இந்த வழக்கு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறிய நீதிபதிகள், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். மேலும், வழக்கு தொடர்பான விரிவான உத்தரவு பின்னர் பிறப்பிக்கப்படும் என தெரிவித்தனர்.

மேலும் தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக லண்டன் பயணம் மேற்கொள்வதால் திட்டமிட்டப்படி செப்டம்பர் 15 ஆம் தேதி இத்திட்டம் தொடங்க இயலாத என்றும் அதற்கு பதிலாக எப்போது வழங்கப்படும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *