தமிழ்நாட்டில் கடந்த மாதம் தொடங்கப்பட்ட “தாய்மாமன் தங்க மோதிரம்’ திட்டத்தால் தாய்மார்கள் பலரும் தற்போது பிரசவத்துக்கு அரசு மருத்துவமனைக்கு வரத் தொடங்கியிருக்கிறார்கள்.
இதனால் அரசு மருத்துவமனைகளின் பிரசவ வார்டுகள் நிரம்பி வழிவதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் செவிலியர்கள் சிலரிடம் பேசினோம்.
”தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிம் வழங்கும் திட்டத்தைக் கடந்த மாதம் தொடங்கி வச்சார் முதலமைச்சர் விஜய்.
மோதிரங்கள் அரசு பரிந்துரைத்த ஒரு கிராம் எடை ப்ளஸ் 22 கேரட் தரத்துல தரப்பட்டு வருது. நம்பகத்தன்மையை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு மோதிரத்திலும் BIS ஹால்மார்க் முத்திரையும், 6 இலக்க HUID எண்ணும் பொறிக்கப்பட்டிருக்கு.
பிரத்யேகமா வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பான பேக்கிங்கில் இந்த மோதிரங்கள் அடைக்கப்பட்டு, அந்தந்த அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது தெரிஞ்சதுமே தமிழ்நாடு முழுக்கவே பரவலா அரசு மருத்துவமனைகளைத் தேடி வரத் தொடங்கிட்டாங்க கர்ப்பிணிகள்.
வழக்கமா அரசு மருத்துவமனையைத் தேடி வருகிறவர்களைத் தாண்டி நிறையப் பேர் வர்றதால இப்ப பிரசவ வார்டுகள்ல அவர்களுக்கு பெட் கிடைக்கறதுல சிக்கலா இருக்கு. அதனால சுகாதாரத்துறை உயரதிகாரிகள் இந்த விஷயத்துல கவனம் செலுத்தி கூடுதல் பெட்கள் ஒதுக்க நடவடிக்கை எடுக்கணும்” என்கிறார்கள் இவர்கள்.
தூத்துக்குடி அரசு தலைமை மருத்துவமனையில் இந்த மாதம் மட்டும் அதாவது அக்டோபரில் இதுவரை 498 டெலிவரிகள் நடந்துள்ளதாம்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அரசு மருத்துவமனையில் எண்ணிக்கை கூடியதால் சில கர்ப்பிணிகளை பெட் இல்லாமல் மருத்துவமனை வராண்டாவில் தங்க வைக்கப்பட, அதை சிலர் படம்பிடித்து சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ததும் நடந்திருக்கிறது.
பரமக்குடி மருத்துவமனையில் இன்றைய தேதிக்கு பிரசவ வார்டில் இருக்கும் 60 பெட்டுகளிலும் கர்ப்பிணிகள் அட்மிட் ஆகியிருக்கிறார்களாம். கடந்த காலங்களில் 30, 40 அட்மிஷன்கள் நடந்து கொண்டிருந்ததாகச் சொல்கிறார்கள்.