“எனக்கு privilege இருக்கிறது… அதை பயன்படுத்தியிருக்க வேண்டும்!” – ஸ்ரீதேவி மகள் ஆவேசம் – Kumudam

Spread the love

நடிகர் ராம் சரண் நடிப்பில், இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில் உருவான படம் Peddi. இதில் ஜான்வி கபூர் அச்சியம்மா என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இப்படத்தில் ஜான்வியின் கதாபாத்திரம் தேவையற்ற வகையில் பாலியல் ரீதியாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைதளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கதாபாத்திரத்தை sexualise செய்வதாகவும், பெண்ணை வெறும் காட்சிப்பொருளாகப் பயன்படுத்துவதாகவும் ஒரு தரப்பினர் குற்றம்சாட்டினர்.

இந்த விவகாரம், “அப்படியொரு சித்தரிப்பு இருந்தபோது படக்குழுவிடம் நடிகை ஏன் கேள்வி எழுப்பவில்லை?” என்ற மற்றொரு விவாதத்தையும் கிளப்பியது.

“நான் ஏன் பேசாமல் இருந்தேன் தெரியுமா?”

Koffee With Karan Season 9 நிகழ்ச்சியில் வருண் தவானுடன் பங்கேற்ற ஜான்வியிடம், இந்த சர்ச்சை குறித்து கரண் ஜோஹர் கேள்வி எழுப்பினார்.

அப்போது பேசிய ஜான்வி, அந்தப் படத்திற்காகப் பலரும் கடுமையாக உழைத்திருந்ததால், இந்த விவகாரம் குறித்து வெளிப்படையாகப் பேசுவதற்கு தயங்கியதாகக் கூறினார். ஆனால், அதே நேரத்தில், அந்தக் காட்சிகளால் ஏற்பட்ட தாக்கத்தை அவர் உணர்ந்ததாகவும், தனது பங்குக்கான பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்.

“நான் இன்னும் அதிகமாகச் செய்திருக்க வேண்டும்!”

ஜான்வியின் பேச்சில் கவனம் பெற்ற விஷயம், அவர் தன் மீதும் பொறுப்பைச் சுமத்தியதுதான். தனது கதாபாத்திரத்தின் சித்தரிப்பு பிரச்னைக்குரியதாக இருந்ததா, அது extreme objectification-ஆக இருந்ததா, சில காட்சிகள் பாலியல் வன்முறையை இயல்பாக்கும் விதத்தில் அமைந்திருந்ததா என்ற கேள்விகளுக்கு அவர் நேர்மையாகப் பதிலளித்துள்ளார்.

“நான் இன்னும் அதிகமாகச் செய்திருக்க முடியுமா? இன்னும் விழிப்புடன் இருந்திருக்க முடியுமா? இன்னும் பெரிய அளவில் எதிர்ப்பு தெரிவித்திருக்க முடியுமா? நூறு சதவீதம் முடியும். ஆனால் இனி இதுபோன்ற ஒன்று நடக்காமல் பார்த்துக்கொள்வதுதான் என்னால் செய்யக்கூடியது” என்ற கருத்தை ஜான்வி தெரிவித்துள்ளார்.

இந்தப் பேச்சு, சர்ச்சை தொடங்கியபோது ஜான்வி மீது முன்வைக்கப்பட்ட விமர்சனங்களுக்கும் தற்போது அவர் அளித்துள்ள பதிலாகப் பார்க்கப்படுகிறது.

“இயக்குநர் சொல்வதை கேட்க வேண்டிய நிலை…”

அதேநேரம், தனது பேச்சு இயக்குநர் மீது பழி போடுவது போலத் தோன்றக்கூடாது என்றும் ஜான்வி கவனமாகக் குறிப்பிட்டுள்ளார்.

ஒரு நடிகராகப் படப்பிடிப்பு தளத்தில் இயக்குநரின் வழிகாட்டுதலைப் பின்பற்றி தொழில்முறையாக நடக்க வேண்டிய சூழல் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், படப்பிடிப்புக்கு முன்பே ஒரு காட்சி திரையில் எப்படித் தோன்றும் என்பது முழுமையாகத் தெரிந்துவிடாது என்றும் அவர் விளக்கியுள்ளார்.

குறிப்பாக, திரைக்கதையில் கேமரா எந்த கோணத்தில் காட்சியைப் படமாக்கும் என்பது பெரும்பாலும் இடம்பெறாது என்றும், தகவல்கள் தன்னிடம் கிடைக்கும்போதெல்லாம் காட்சிகளை குறைவான பிரச்னைக்குரிய வகையில் மாற்ற முயன்றதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“எனக்கு privilege இருக்கிறது… அதை பயன்படுத்தியிருக்க வேண்டும்!”

ஜான்வியின் மற்றொரு கருத்தும் கவனம் பெற்றுள்ளது. தான் privilege கொண்ட ஒரு பின்னணியில் இருந்து வருவதால், படப்பிடிப்பு தளத்தில் தனது நிலையைப் பயன்படுத்தி இன்னும் வலுவாகக் குரல் கொடுத்திருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

அதாவது, தனக்கு இருந்த செல்வாக்கை பயன்படுத்தி சர்ச்சைக்குரிய காட்சிகளுக்கு எதிராக முன்கூட்டியே பேசியிருக்க வேண்டும் என்பதையே அவர் ஒப்புக்கொண்டுள்ளார்.

என்ன சர்ச்சை?

Peddi படத்தில் ஜான்வியின் கதாபாத்திரம் பாலியல் ரீதியாக சித்தரிக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. பெண் கதாபாத்திரத்தை இவ்வாறு காட்சிப்படுத்துவது தேவையா என்ற கேள்வியுடன், சில காட்சிகள் பாலியல் வன்முறையை இயல்பாக்கும் விதத்தில் உள்ளதாகவும் விமர்சனங்கள் எழுந்தன.

இதையடுத்து, இயக்குநர் புச்சி பாபு சனா தரப்பில் விளக்கம் மற்றும் மன்னிப்பு தெரிவிக்கப்பட்டது. பெண் கதாபாத்திரங்களை அவமதிப்பது அல்லது objectify செய்வது படக்குழுவின் நோக்கம் அல்ல என்று அவர் கூறினார். சர்ச்சைக்குரியதாகக் கருதப்பட்ட சில காட்சிகளும் பின்னர் நீக்கப்பட்டது.

இந்நிலையில், சர்ச்சை தொடங்கிய பல மாதங்களுக்குப் பிறகு ஜான்வி கபூர் தன்னுடைய நிலைப்பாட்டை இவ்வளவு வெளிப்படையாகப் பதிவு செய்திருப்பது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.

“தவறு நடந்ததா?” என்பதைக் கடந்து, “அதைத் தடுக்க என்னால் என்ன செய்திருக்க முடியும்?” என்று தன்னையே கேள்வி கேட்டிருப்பதுதான் இந்தப் பேச்சில் ஜான்வி எடுத்திருக்கும் முக்கியமான நிலைப்பாடாக பார்க்கப்படுகிறது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *