தமிழ்நாடு மாண்புமிகு முதலமைச்சர் திரு. C. ஜோசப் விஜய் அவர்களால் அறிவிக்கப்பட்ட தமிழ்நாடு அரசின் ‘தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தின்’ கீழ், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட முதற்கட்ட 89,955 ஒரு கிராம் (22 கேரட்) தங்க மோதிரங்களை ஜோய் ஆலுக்காஸ் குரூப் வெற்றிகரமாக தயாரித்து முடித்துள்ளது.
இத்திட்டத்தின் கீழ், மாநிலம் முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் தகுதியுடைய ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு கிராம் தங்க மோதிரம் பரிசாக வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் தமிழ்நாடு முழுவதும் சுமார் 4.41 லட்சம் புதிதாகப் பிறந்த பெற்ற குழந்தைகள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இத்திட்டத்திற்கான குறைந்த விலைப்புள்ளி கோருநர் தங்கம் விலையைத் தவிர்த்து, மோதிரங்கள் செய்கூலி, BIS ஹால்மார்க் முத்திரை, காப்பீடு, போக்குவரத்து மற்றும் பேக்கிங் ஆகிய அனைத்திற்கும் சேர்த்து வெறும் ‘ஒரு பைசாவை’ மட்டுமே கட்டணமாகக் குறிப்பிட்டு ஜோய்ஆலுக்காஸ் நிறுவனம் மிகக் குறைந்த விலையைக் கோரிய L1 நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டது.

தற்போது தயாரிக்கப்பட்டுள்ள முதற்கட்ட 89,955 தங்க மோதிரங்கள், முதன்மையாக அதிகப் பிரசவங்கள் நடைபெறும் 107 குறிப்பிட்ட அரசு தாய்சேய் நல மையங்களுக்கு வழங்கப்பட உள்ளன. இந்த மோதிரங்கள் அனைத்தும் அரசு பரிந்துரைத்த ஒரு கிராம் எடை மற்றும் 22 கேரட் தூய்மைத் தரத்தின்படி துல்லியமாகத் தயாரிக்கப்பட்டுள்ளன.
மேலும், நம்பகத்தன்மை மற்றும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யும் வகையில், ஒவ்வொரு மோதிரத்திலும் BIS ஹால்மார்க் முத்திரையும், 6 இலக்க HUID எண்ணும் முத்திரைகள் செய்யப்பட்டுள்ளன.
இத்திட்டத்திற்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட பாதுகாப்பான பேக்கிங்கில் இந்த மோதிரங்கள் அடைக்கப்பட்டு, அந்தந்த அரசு மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்படுகின்றன. முதற்கட்ட மோதிரங்களை பேக்கிங் செய்து அனுப்பும் பணிகள் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் உள்ள ஜோயாலுக்காஸின் பிரத்யேக மையங்களில் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.