தாராபுரம், மதுராந்தகம் அதிர்ச்சி! அ.தி.மு.க-வை உள்வாங்கும் த.வெ.க – வேலுமணி & டீம் ஆபரேஷன்! Thara puram, Madurantakam Bypoll Results: How TVK Is Taking Over AIADMK

Spread the love

தாராபுரம் மதுராந்தகம் இடைத்தேர்தல் முடிவுகள் அ.தி.மு.கவுக்குள் மீண்டும் ஒரு பிரளயத்தை உண்டாக்கியிருக்கிறது. தன் ஆளுமையைத் தக்கவைத்துக்கொள்ளக் கிடைத்த இறுதி வாய்ப்பையும் கோட்டை விட்டிருக்கிறார் அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி. அதன் விளைவாக, மே மாதத்தில் கையிலெடுத்த ஆபரேஷனை மீண்டும் புதுப்பிக்கத் தயாராகி வருகிறது வேலுமணி& சி.வி.சண்முகம் டீம்

இதன்மூலம், தி.மு.கவை எதிர்த்து அ.தி.மு.கவை உள்வாங்கும் திட்டத்தில் மீண்டுமொருமுறை வெற்றி பெற்றிருக்கிறார் தமிழ்நாட்டின் முதல்வர் ஜோசப் விஜய்.

கடந்த முப்பதாண்டுகளாக தமிழ்நாட்டின் ஆளும்கட்சி, எதிர்க்கட்சியாக மட்டுமே பவனிவந்த அ.தி.மு.க நடந்து முடிந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் 47 இடங்களுடன் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது. தொடர்ந்து, 107 இடங்களுடன் பெரும்பான்மைக்காக போராடிக்கொண்டிருந்த தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சரவையில் பங்கேற்கலாம் என எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டவர்கள் எடப்பாடி பழனிசாமியிடம் கோரிக்கையை முன்வைத்தனர்.

அதற்கு அவர் உடன்பட மறுக்கவே, முப்பதுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களோடு தனி அணியாக உருவெடுத்தனர். த.வெ.க அரசுக்கு ஆதரவளித்ததோடு, அமைச்சரவையில் பங்கேற்கும் ஆலோசனைகளும் நடத்தப்பட்டன. ஆனால், சட்டரீதியான நெருக்கடிகளால் அந்தத் திட்டம் கைவிடப்பட, எம்.எல்.ஏ பதவியைத் தக்க மீண்டும் எடப்பாடி பழனிசாமி பக்கம் இணைந்தனர்.

ஆனாலும், பறிக்கப்பட்ட பொறுப்புகளைக் கொடுக்காதது, கட்சிக்குள் முக்கியத்துவத்தைக் குறைத்தது உள்ளிட்ட காரணங்களால், அவ்வப்போது எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக கடிதங்கள் எழுதி கலகம் செய்து வந்தனர். அந்த நேரத்தில் தாராபுரம், மதுராந்தகம் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட உற்சாகமானார் எடப்பாடி பழனிசாமி.

இரண்டில் ஒன்று, குறிப்பாக தாராபுரத்தில் மீண்டும் வெற்றி பெற்றுவிட்டாலே போதும் கரையும் கட்சியைக் காப்பாற்றிவிடலாம் எனவும் கணக்குப் போட்டார். ஆனால், இரண்டு தொகுதியிலும் மூன்றாவது இடத்துக்குத் தள்ளப்பட்டது எடப்பாடி பழனிசாமியின் ஆளுமையை மீண்டுமொருமுறை கேள்விக்குள்ளாக்கியிருக்கிறது.

இரண்டு தொகுதி இடைத்தேர்தல் முடிவுகளை வைத்து ஒருவரின் தலைமைப்பண்பை முடிவு செய்ய முடியாதுதான். ஆனால், தாராபுரம், மதுராந்தகம் தொகுதிகள் குறித்துஅடிப்படையைத் தெரிந்துகொண்டால், அப்படி நாம் எளிதில் கடக்கமுடியாது என்பதுதான் அரசியல் விமர்சகர்கள் கருத்தாக இருக்கிறது.

“ அ.தி.மு.க எனும் கட்சித் தொடங்கப்பட்ட பிறகு நடந்த 12 பொதுத் தேர்தல்களில் ஏழு முறை மதுராந்தகத்தில் அ.தி.மு.க வெற்றி பெற்றிருக்கிறது. 1989-ல் ஜா, ஜெ அணியாக அ.தி.மு.க பிளவுபட்டிருந்த போதும் வெற்றிபெற்ற அ.தி.மு.க வாக்காளர்கள் நிறைந்த தொகுதி மதுராந்தகம். 2021 தேர்தலில், சென்னை மண்டலத்தில் இருந்த 37 தொகுதிகளில் 36 தி.மு.க வெற்றிபெற, மதுராந்தகத்தில் மட்டும் அ.தி.மு.க வெற்றி பெற்றது.

2026 தேர்தலில் ஆளும்கட்சியின் அசுர கூட்டணி பலம், விஜய் எனும் பிம்பத்துக்கு நடுவே வெற்றி பெற்றார் மரகதம். ஆனால், இப்போது வெறும் 47 ஆயிரம் வாக்குகளுடன் மூன்றாவது இடத்துக்கு வந்திருக்கிறது.

எடப்பாடி பிரச்சாரம்

எடப்பாடி பிரச்சாரம்

அப்படியே தாராபுரத்தை எடுத்துக்கொண்டாலும், 1977 க்குப் பிறகு நடந்த 12 தேர்தல்களில் அ.திமு.க 7 முறை அ.தி.மு.க வெற்றி பெற்றிருக்கிறது. அதுமட்டுமல்ல, 1977 எம்.ஜி.ஆர் அ.தி.மு.க எனும் கட்சியைத் தொடங்கி சந்தித்த முதல் பொதுத் தேர்தல்.

ஆனால், அதற்கு முன்பாகவே, திண்டுக்கல் நாடாளுமன்றம், கோவை மேற்கு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல்களில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு மாபெரும் வெற்றியைப் பதிவு செய்திருந்தது.

தமிழ்நாடு முழுவதும் எம்.ஜி.ஆரின் சின்னம் இரட்டை இலை என்கிற பிரசாரம் மிகத் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டது. ஆனால், தாராபுரம் தொகுதியில் மட்டுமே எம்.ஜி.ஆர் ஆசி பெற்ற சின்னமாக சிங்கம் இருந்தது. காரணம், எம்.ஜி.ஆர் முதலில் அந்தத் தொகுதிக்கு அய்யசாமி என்பவரை வேட்பாளராக அறிவித்து பின்னர் அலங்கியம் பாலகிருஷ்ணன் என்பவரை மாற்றினார்.

ஆனால், ஃபார்ம் ஏ, ஃபார்ம் பி முதலில் அவருக்கு அனுப்பப்பட்டதால் அதை வைத்து அவர் வேட்புமனுத்தாக்கல் செய்ய அவருக்குச் இரட்டை இலைச் சின்னம் கிடைத்து விட்டது. அலங்கியம் பாலகிருஷ்ணனுக்கு சிங்கம் சின்னம்தான் கிடைத்தது

இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட எம்.ஜி.ஆர் அய்யசாமியை பிரசாரத்துக்குச் செல்லக்கூடாது என உத்தரவிட்டார். அவர் தொகுதியை விட்டே வெளியேறிவிட்டார். எம்.ஜி.ஆர் சிங்கம் சின்னத்துக்குத்தான் வாக்குக் கேட்டார். ஆனால், எம்.ஜி.ஆர் ஆதரித்த பாலகிருஷ்ணன் மூன்றாவது இடத்துக்குத்தான் வந்தார். அந்தளவுக்கு இரட்டை இலைச் சின்னத்தின்மீது அபிமானம் கொண்ட மக்கள் வசிக்கும் தொகுதி அது. ஆனால், 2026 தேர்தலில் பெற்றதைவிட, கிட்டத்தட்ட 35 ஆயிரம் வாக்குகள் இப்போது குறைவாகக் கிடைத்திருக்கிறது. இது சாதாரண சறுக்கல் அல்ல”‘ என்கிறார்கள்.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *