தாராவியைக் நினைவூட்டும் நெரிசலும் ‘ஆவோ, ஆவோ’ என்ற எளிய குடும்பத்தின் இன்முகமும் | A Heartwarming Mumbai Travelogue

Spread the love

‘ஆவோ, ஆவோ’ என்று ஷாப்பிங் செல்வது போல் அழைத்தான். பின்னாடியே சென்றேன். அடுத்தத் தெரு முனையில் அடிபம்பில் இரண்டு வாளிகளிலும் தண்ணீர் நிரப்பி ஒன்றை என் கையில் கொடுத்தான்.

‘கொஞ்ச நேரம் கழித்து குளித்துக் கொள்கிறேன்.’ என்றேன்.

‘குளிப்பதற்கு இல்லை. பாத்ரூம் போவதற்கு’ என்று அங்கிருந்த வரிசையை காண்பித்தான். அப்போது தான் பார்க்கிறேன். மூன்று வரிசையில் மக்கள் நின்று கொண்டிருந்தார்கள். பொது கழிப்பிடம். எல்லோர் கையிலும் ஒரு பக்கெட். முதலில் நின்று கொண்டிருந்தவன் கதவைத்தட்டி குய்யோ முய்யோ என்று ஏதோ கத்திக் கொண்டிருந்தான்.

‘இங்கேயா?’

‘ஆமாம்’ என்று கூறிவிட்டு ஒரு வரிசையில் போய் நின்று கொண்டான்.

என் கால்கள் அங்கேயே உறைந்துவிட்டன. என் வாழ்வில் நான் எப்போதாவது கண்டுகேட்ட அதிர்ச்சிகளையெல்லாம் தாண்டிய பயம் அப்போது என்னைச் சூழ்ந்து கொண்டது. இந்தப் பொது கழிப்பிடம் எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. நான் உள்ளே இருக்கும்போது வெளியே பத்து பேர் காத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை நினைத்தாலே எனக்கு எதுவும் வரவில்லை. போதாக்குறைக்கு ஒரே ஒரு வாளித் தண்ணீர். இலவசமாக இதற்கு முன் சென்றவனின் நாற்றம்.

எனக்கு முன்னால் இருந்தவர்கள் ஒவ்வொருவராக உள்ளே போய் வந்தார்கள். ஆண் பெண் என இருபாலரும் ஒரே இடத்தில் தான். எனது வரிசையும் வந்தது. முடிந்த அளவு மூச்சை அடக்கிப் பார்த்தேன். முடியவில்லை. தலை சுற்றியது. வேறு வழியின்றி அணிந்திருந்த டீஷர்ட்டால் என் மூக்கையும் முகத்தையும் இறுக்கமாக மூடிக்கொண்டேன். உள்ளே நுழைந்த அந்த சில நொடிகளுக்குள், கதவைத் தட்ட ஆரம்பித்துவிட்டனர்.

ஒரு வழியாக வெளியே வந்த பிறகு தான் அடுத்த அதிர்ச்சி காத்திருந்தது.

விவேக் பாட்டு பாடிக்கொண்டே வீட்டை நோக்கி நடந்தான். குளித்துவிட்டு சாப்பிடலாம் என்றான். உனக்காக எங்கள் வீட்டில் ஸ்பெஷல் சாப்பாடு ரெடியாகிக் கொண்டிருக்கிறது என்று கூறினான்.

துண்டை எடுத்துக் கொண்டு புறக்கடைக்கு சென்றேன். அங்கு எதுவுமே இல்லை. வீட்டில் தனி கழிப்பறையே இல்லாதபோது, குளியலறையும் இருக்காது என்பதை அப்போதுதான் உணர்ந்தேன்.

‘எங்கே குளிப்பது?’ என்றேன்.

‘இங்கே தான்’ என்று சமையலறை ஓரமாக ஒரு இடத்தைக் காண்பித்தான். முழங்கால் அளவுக்கு ஒரு மறைப்பு இருந்தது. அங்கே போய் உட்கார்ந்து குளி என்றான்.

போய் உட்கார்ந்தேன். அவரது அக்காவும் அம்மாவும் சமையலறையில் வேலை செய்துக் கொண்டே இருந்தனர். எனது தயக்கத்தைப் பார்த்து இருவரையும் ஹாலுக்கு போகச் சொன்னான். வாழ்க்கையில் முதலும் கடைசியுமாக அங்கு உட்கார்ந்து குளித்தேன்.

வெளியே வந்து உடை மாற்றிய பின்பு என்னைச் சாப்பிட அழைத்தார்கள். அதே தாளி உணவு. இந்த முறை சப்பாத்திக்கு பதில் பூரி. கூடவே ஒரு இனிப்பு. அவரது அம்மாவும் அக்காவும் அருகிலேயே உட்கார்ந்துகொண்டு சாப்பாடு எப்படி இருக்கிறது? பிடித்திருக்கிறதா? என்று பேசிக் கொண்டே இருந்தார்கள். அவர்கள் ஹிந்தியில் பேச, விவேக் எங்கள் இருவருக்கும் இடையில் மொழி பெயர்த்துக் கொண்டிருந்தான். நெகிழ்வாக இருந்தது.

அன்று மதியம் விவேக்கின் வீட்டை விட்டுக் கிளம்பினேன். அவனது அம்மா, ‘மும்பைக்கு நீ வந்தால் கண்டிப்பாக வீட்டிற்கு வரவேண்டும்’ என்று சிரித்துக்கொண்டே வழியனுப்பி வைத்தார்.

குஜராத் செல்லும் ரயிலில் அமர்ந்திருந்தேன். ஜன்னலுக்கு வெளியே காட்சிகள் வேகமாக மாறிக் கொண்டிருந்தன. மும்பையில் இறங்கிய நொடியிலிருந்து அடுத்தடுத்து நான் சந்தித்த சங்கடங்களையெல்லாம் விட, அந்தச் சிறிய வீட்டில் “ஆவோ, ஆவோ” என்று இன்முகத்தோடு என்னை வரவேற்ற அந்தக் குடும்பத்தின் பேரன்புதான் என் நினைவில் நிலைத்திருந்தது.

#எத்தனைஎத்தனைமனிதர்கள்

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *