திடீரென பாய்ந்த ஏவுகணை…அலறியடித்து ஓடிய பயணிகள்…திக் திக் நிமிடங்களில் சவுதி ஏர்போர்ட் தாக்குதல்! – Kumudam

Spread the love

மத்திய கிழக்கில் தற்போது பதற்றமான சூழல் நிலவி வருகிறது. ஈரான் போர் ஒருபுறம் தொடரும் நிலையில், பிராந்தியத்தில் உள்ள பிற நாடுகள் மீதான தாக்குதல்களும் அதிகரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

குறிப்பாக, ஈரான் ஆதரவு பெற்ற ஏமனைச் சேர்ந்த ஹவுதி அமைப்பு, சவுதி அரேபியாவைக் குறிவைத்துத் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் சவுதியிலும் பாதுகாப்புப் பதற்றம் அதிகரித்துள்ளது.

மீண்டும் தாக்குதல்!

இந்தச் சூழலில், ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் பயணிகள் முனையம் மீது ஹவுதி அமைப்பு மீண்டும் தாக்குதல் நடத்தியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த சில காலமாகவே சவுதி அரேபியாவைக் குறிவைத்து இந்த அமைப்பு தாக்குதல்களை நடத்தி வரும் நிலையில், இதற்கு முந்தைய நாள் நடத்தப்பட்ட தாக்குதலில் இந்தியர் உள்பட 13 பேர் உயிரிழந்ததாகக் கூறப்பட்ட நிலையில், அடுத்த நாளே மீண்டும் தாக்குதல் நடைபெற்றுள்ளது. இந்தப் புதிய தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததாகவும், 11 பேர் காயமடைந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

விமான சேவை தற்காலிகமாக நிறுத்தம்!

கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் நான்காவது முனையப் பகுதியில் அடையாளம் தெரியாத ஏவுகணை விழுந்ததில் தீ விபத்து ஏற்பட்டதாகச் சவுதி விமானப் போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே, விமான நிலையத்தை நோக்கி வந்த குரூஸ் ஏவுகணை ஒன்றையும் சவுதி வான் பாதுகாப்புப் படையினர் இடைமறித்துத் தடுத்ததாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்தடுத்து நடத்தப்பட்ட தாக்குதல்களைத் தொடர்ந்து, ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் செயல்பாடுகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளன. 

இதனால் விமானச் சேவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. கடந்த ஐந்து நாட்களில் மட்டும் ரியாத் விமான நிலையம் நான்கு முறை தாக்குதலுக்கு உள்ளானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

சனிக்கிழமை நடத்தப்பட்ட தாக்குதலில் 300-க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாகவும், அவர்களில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இணையத்தில் வெளியான அதிர்ச்சி வீடியோ!

இந்தத் தாக்குதலின்போது விமான நிலையத்தில் இருந்த பயணிகள் உயிரைக் காப்பாற்றிக்கொள்ள அலறியடித்து ஓடும் காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளன.

விமானங்களில் ஏறுவதற்காகக் காத்திருந்த உம்ரா புனிதப் பயணிகள் உள்படப் பலர், திடீர் தாக்குதலால் அதிர்ச்சியடைந்த வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

விமான நிலையத்தில் பயணிகள் காத்திருந்த பகுதிக்கு அருகே ஆரஞ்சு நிறத்தில் பிரகாசமான ஒளியுடன் வெடிப்பு நிகழ்வது வீடியோவில் பதிவாகியுள்ளது. இதையடுத்து, பயணிகள் அங்கிருந்து அலறியடித்துக்கொண்டு ஓடுகின்றனர்.

மேலும், விமான நிலையத்தின் கூரையின் சில பகுதிகள் இடிந்து விழுவது போன்ற காட்சிகளும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. இந்தக் காட்சிகள் மத்திய கிழக்கில் நிலவி வரும் பதற்றமான சூழலை மீண்டும் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளன.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *