ஆனால், சில ஆண்டுகளில் அந்தப் பகுதியையும் வறட்சி வாட்டியது. பசுக்களுக்குத் தேவையான உணவும் தண்ணீரும் கிடைக்காமல் அவை வாடின. தங்களிடம் இருந்த கால்நடைகளின் நிலையைப் பார்த்து மனம் வருந்திய கோபிநாதன், இறைவனை மனமுருகிப் பிரார்த்தித்தார்.
‘‘மாங்கரை ஆற்றில் நீராதாரம் பெருகி, இந்தப் பகுதியின் வறுமை நீங்கினால், என் உயிரையே இறைவனுக்குக் காணிக்கையாக்குகிறேன்’’ என்று வேண்டிக்கொண்டார்.
அவருடைய பிரார்த்தனைக்கு இறைவன் செவிசாய்த்தாரோ என்னவோ… அன்றிரவே அந்தப் பகுதியில் நல்ல மழை பெய்தது. மாங்கரை ஆற்றில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. வறண்டு கிடந்த பூமி மீண்டும் செழிக்கத் தொடங்கியது. மக்கள் மகிழ்ந்தனர். கால்நடைகளும் பசியின்றி வளம்பெற்றன.
தனது வேண்டுதல் நிறைவேறியதை எண்ணிய கோபிநாதன், தான் அளித்த வாக்கை நிறைவேற்ற முடிவு செய்தார். ஒரு வேப்ப மரத்தில் தனது எருதைக் கட்டிவிட்டு, அதன் கொம்பில் விழுந்து உயிரைத் துறந்தார். மகனின் பிரிவைத் தாங்க முடியாமல் கோப்பம்மாளும் உயிரை விட்டதாகச் சொல்லப்படுகிறது.

காலம் கடந்தது.
சில ஆண்டுகளுக்குப் பிறகு, கன்னிவாடி ஜமீன்தார் இந்தப் பகுதிக்கு மான் வேட்டைக்காக மாட்டு வண்டியில் வந்தார். குறிப்பிட்ட இடத்தை அடைந்ததும், அவரது வண்டியை இழுத்து வந்த மாடுகள் மேற்கொண்டு நகர முடியாமல் திடீரென தரையில் படுத்துவிட்டன.
அப்போது ஜமீன்தாருக்கு அங்கே இருந்த கோபிநாதன் விட்டுச்சென்ற மாடுகள் அனைத்தும் மான்களாகக் காட்சியளித்ததாகக் கூறப்படுகிறது. அவற்றை வேட்டையாட அவர் முயன்றார். ஆனால், ஒரு மான்கூட அவரிடம் சிக்கவில்லை.
சோர்வுடனும் குழப்பத்துடனும் ஊர் திரும்பிய ஜமீன்தார், கோடாங்கியை அழைத்து குறி கேட்டார். அப்போது கோடாங்கி, அந்தப் பகுதியில் பல ஆண்டுகளுக்கு முன்பு நடைபெற்ற கோபிநாதன் மற்றும் கோப்பம்மாளின் தியாகம் உள்ளிட்ட நிகழ்வுகளை விரிவாக எடுத்துரைத்தார்.