மதச்சார்பின்மையை உயிர்மூச்சாக கொண்டுள்ள காங்கிரசின் கடமை இது!
த.வெ.க. ஆட்சி அமைப்பதை தடுக்க, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் திரு. எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமைக்க பா.ஜ.க. சதித் திட்டம் தீட்டியது. அதற்கு தி.மு.க. தலைமையும் உடன்பட்டது. ஆனால், தி.மு.க. கூட்டணியில் இருந்த மதச்சார்பற்ற சக்திகள் உறுதியுடன் நின்று எதிர்த்ததால் பா.ஜ.க.வின் சதித் திட்டம் முளையிலேயே கிள்ளி எறியப்பட்டது. தமிழ்நாட்டை மறைமுகமாக ஆள பா.ஜ.க. முயற்சிப்பதை தடுக்க, மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக உள்ள காங்கிரஸ் த.வெ.க. ஆட்சி அமைக்க காங்கிரஸ் ஆதரவு அளித்தது. இது மதச்சார்பின்மையை உயிர்மூச்சாக கொண்டுள்ள காங்கிரசின் கடமையும்கூட.
இதற்காக காங்கிரஸ் கட்சியையும், இந்தியாவின் ஒரே நம்பிக்கையான, மதவெறி கொண்ட பாசிச பாஜகவை உறுதியுடன் எதிர்க்கும் வலிமை கொண்ட ஒரே தேசிய தலைவரான திரு ராகுல் காந்தி அவர்களையும் தி.மு.க. வரம்பு மீறி விமர்சித்து வருகிறது. துரோகம் செய்துவிட்டார், கூட இருந்தே குழி பறித்து விட்டார் என்றெல்லாம் தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ நாளிதழான “முரசொலி” தினந்தோறும் வார்த்தைகளை அள்ளி வீசுகிறது.

கொச்சையான வார்த்தைகளை தி.மு.க.வினர் பயன்படுத்துகின்றனர்…
இன்னும் பல மோசமான, கொச்சையான வார்த்தைகளை எல்லாம் தி.மு.க.வினர் பயன்படுத்தி வருகின்றனர். தி.மு.க.வினரை விடவும் கடுமையான, மோசமான வார்த்தைகளால் எங்களாலும் பேச முடியும். எழுத முடியும். முரசொலியில் கிறுக்குபவர்களை விடவும் எங்களால் திமுகவை நோக்கி வசை சொற்களை வீச முடியும். ஆனால், நாங்கள் வளர்ந்த கட்சி, எங்களை வளர்த்த தலைவர்கள் அரசியல் எதிரிகளை நாகரிமாக எதிர்கொள்ள கற்றுத் தந்திருக்கிறார்கள். அந்த நாகரிக எல்லையைத் தாண்ட நாங்கள் விரும்பவில்லை. இனியும் காரணங்களை கண்டறிந்து, சரி செய்து அடுத்த தேர்தலில் வெற்றி பெறுவதற்கான முயற்சிகளில் இறங்க வேண்டும். இதுதான் மக்கள் நலனுக்காக இயங்கும் அரசியல் கட்சியின் நோக்கமாக இருக்கும்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில், கட்சி தொடங்கிய 27 மாதங்களில் 108 இடங்களில் வென்று “தமிழக வெற்றிக் கழகம்” ஒட்டுமொத்த இந்தியாவையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. த.வெ.க. தலைவர் திரு. ஜோசப் விஜய் முதலமைச்சராக வேண்டும் என்பதுதான் தமிழ்நாட்டு மக்களின் தீர்ப்பு. ஆட்சி அமைக்க 10 இடங்கள் குறைவாக இருந்த நிலையில், 43 இடங்களில் வென்ற அ.தி.மு.க. ஆதரவுடன் த.வெ.க. எளிதாக ஆட்சி அமைத்திருக்க முடியும். ஆனால், தி.மு.க. தலைமையிலான, “மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி”யில் போட்டியிட்ட காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகியவற்றின் ஆதரவோடு த.வெ.க. ஆட்சி அமைத்துள்ளது. இது, ஜனநாயகம், சமூக நீதி, மதச்சார்பின்மை, மாநில உரிமைகள் ஆகிய கொள்கைகளில், மாண்புமிகு முதலமைச்சர் திரு. ஜோசப் விஜய் அவர்களுக்கு, இருக்கும் உறுதியான நிலைப்பாட்டை காட்டுகிறது. காங்கிரசும், கம்யூனிஸ்ட்களும் இருக்கும் இடத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பாஜக இருக்காது. மதவாதத்திற்கு இடமிருக்காது.