திமுக டூ தவெக… கைமாறும் முக்கிய மதுபான ஆலை..? ஆடிப்போன அறிவாலயம்..! – Kumudam

Spread the love

தமிழ்நாட்டில் தவெக ஆட்சிக் கட்டிலில் ஏறியதும் தொடங்கிய மாற்றுக் கட்சி எம்.எல்.ஏக்கள் ராஜினாமாக்களே இன்னும் முடிவுறாத நிலையில், சனிக்கிழமை சம்பிரதாயமான ஆயிரக்கணக்கான மாற்றுக் கட்சியினர் இணையும் விழா தமிழ்நாட்டு அரசியல் களத்தின் மாற்ற முடியாத நிகழ்வாகவே தொடர்கிறது. 

இந்த சனிக்கிழமை சம்பிரதாயத்தில் அதிமுகவைச் சேர்ந்தவர்களே தவெகவில் அதிகளவில் இணைந்துக் கொண்டிருந்த நிலையில், குதிரை பேரம் நடப்பதாகக் கூறி குற்றச்சாட்டுகளை அதிமுக தரப்பு முன்வைத்து வருகிறது. இதுகுறித்து தவெக தரப்பில் கேட்டால், வருபவர்களை வராதீர்கள் என்றா தடுத்து நிறுத்த முடியும்? எங்கள் தலைவரை நம்பி வருகிறார்கள் அவர்களை அரவணைப்பது மட்டுமே எங்களால் முடியும் என்று விளக்கம் கொடுக்கப்படுகிறது. 

மறுபக்கம் தான் உண்டு தன் வேலையுண்டு… எதிரிக்கட்சியல்ல எதிர்க்கட்சி என்று கூறிக் கொண்டிருந்த திமுகமீது குற்ற வழக்குகள் அடுக்கப்பட்டுக் கொண்டும், மூத்த தலைகள் கைதாகிக் கொண்டிருக்கும் சூழல் அரங்கேறிக் கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை திமுகவில் இருந்து பெரியளவில் யாரும் தவெக பக்கம் சென்று சேராமல் இருந்ததே திமுகவிற்கு பெரும் ஆறுதலாக இருந்து வந்தது.

இத்தகையச் சூழலில், அதனையும் சல்லி சல்லியாக நொறுக்கத் திட்டமிட்டுள்ளது தவெக என்கின்றார்கள் உள்விவரம் அறிந்தவர்கள். அதன் தொடக்கமாகத்தான், திமுக எம்.பியின் வாரிசு தவெகவில் இணைந்துள்ளதோடு, திமுகவின் மெயின் சோர்ஸ் ஆஃப் இன்கம் என்று கூறப்படும் மதுபான ஆலையும் தவெக வசம் செல்ல உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

அதாவது, திமுக எம்.பி. ஜெகத்ரட்சகனின் மகனும், மிகப்பெரிய மதுபான ஆலையான “அக்கார்ட் டிஸ்டில்லரீஸ் அண்ட் புரூவரீஸ் பிரைவேட் லிமிடெட்” நிர்வகித்து வருபவருமான ஜே.சந்தீப் ஆனந்த் தவெகவில் ஐக்கியமாகியுள்ளார். திமு கழகத்தின் முக்கிய பினாமியாக கருதப்படும் ஜெகத்ரட்சனின் வாரிசே இப்படி தவெகவிற்கு தாவியுள்ளதால் அறிவாலயமே ஆட்டம் காணத் தொடங்கியுள்ளதாகவும், இதனால் மதுபான ஆலையின் ஃபுல் பவர் திமுகவிடம் இருந்து தவெக வசம் செல்ல வாய்ப்புகள் உள்ளதாகவும் பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தமிழ்நாட்டை போதையில்லா தமிழகமாக உருவாக்குவேன் என்ற முழக்கத்துடன் முதலமைச்சர் விஜய் ஆட்சி பொறுப்பேற்ற நிலையில், டாஸ்மாக் கடைகளை எப்போது முழுமையாக மூடப்போகிறார் என்ற கேள்வியை எதிர்க்கட்சிகள் முன்வைத்து வருகின்றன. இத்தகையச் சூழலில் தமிழ்நாட்டின் மிக முக்கிய மதுபான ஆலையை நிர்வகித்து வருபவர் தவெகவில் ஐக்கியமாகியுள்ளது பல்வேறு சந்தேகங்களை எழுப்புவதாக உள்ளது என்கின்றனர் அரசியல் விமர்சகர்கள். 

மேலும், ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்தை பொறுத்தவரை, தவெக இளைஞர் அணி தலைவர் பதவியை கேட்டுள்ளதாக பனையூர் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. சந்தீப் ஆனந்த் கேட்கும் பதவியை தவெக தலைமை கொடுக்குமா? அல்லது கல்தா கொடுக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *