நடந்துமுடிந்த சட்டமன்றத் தேர்தலில் தவெக கட்சி 108 இடங்களில் வென்று மாபெரும் கட்சியாக உருவெடுத்திருக்கிறது. தி.மு.க, அ.தி.மு.க என இரண்டு கட்சிகளும் இரண்டாவது, மூன்றாவது இடங்களுக்கு தள்ளப்பட்டிருக்கிறது. அதைத் தொடர்ந்து இன்று காலை ஸ்டாலின் முதல்வர் பதவியிலிருந்து ராஜினாமா செய்த கடிதத்தை ஆளுநர் மாளிக்கைக்கு அனுப்பியிருக்கிறார்.
இதற்கிடையில் அவர் தன் எக்ஸ் பக்கத்தில், “நடந்து முடிந்த தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக் கட்சியின் வேட்பாளர்களுக்கு வாக்களித்த தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றியை உண்மை உணர்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன். உங்கள் அனைவரின் ஒவ்வொரு வாக்கையும் விலைமதிப்பற்ற நம்பிக்கையாக நான் கருதுகிறேன்.
இப்போது வரை கிடைத்துள்ள புள்ளிவிபரங்களின்படி தி.மு.க. கூட்டணிக்கு 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்குகள் கிடைத்துள்ளன. இம்மக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன். கூடுதல் தொகுதிகளில் வெற்றி பெற்ற கட்சியானது, நம்மை விட 17.43 இலட்சம் வாக்குகளை மட்டுமே கூடுதலாகப் பெற்றுள்ளது. நமக்கும் அவர்களுக்குமான வாக்கு விழுக்காடு வேறுபாடு என்பது 3.52 விழுக்காடு மட்டுமே. என்னைப் பொறுத்தவரையில் தமிழ்நாட்டு மக்கள் நம் மீது வைத்துள்ள நம்பிக்கையை வலிமையானதாகவே கருதுகிறேன். நமக்கு வாக்களித்த மக்களுக்கு நேரடியாகச் சென்று நன்றி தெரிவிக்கும் கடமையை நாம் எப்போதும் செய்து வருகிறோம்.