திருச்சி உய்யக்கொண்டான் திருமலை கற்குடிநாதர் : கவலைகள் தீரும்… ஆயுள் விருத்தி நிச்சயம்! | trichy uyyakondan thirumalai karkudinathar temple

Spread the love

திருச்சி, உய்யக்கொண்டான் திருமலை, உய்யநாதர் கோயில் பாடல் பெற்ற தலம். அப்பர், சம்பந்தர், சுந்தரர் ஆகிய மூவராலும் பாடல் பெற்றது. நந்திவர்ம பல்லவனால் புனரமைக்கப்பட்ட பழைமையான கோயில். மார்க்கண்டேயரைக் காப்பாற்றுவதாக வாக்களித்தபடி ஈசன் அருள் செய்த தலம்.

இங்கு வந்து வேண்டிக்கொண்டால், உங்கள் வேண்டுதல்களைக் காப்பதாக ஈசன் உறுதிகொள்வாராம். அதை ஏதாவது சகுனத்தின் வழியே அறிவிக்கவும் செய்வாராம்.

தேவாரங்களில் இத்தலத்தின் திருநாமம் கற்குடி. ஈசன் கல் மலையில் குடியிருப்பதால் கற்குடி என்னும் பெயர் பெற்றது. `கலைசேர் கையினனே திருக்கற்குடி மன்னிநின்ற அலைசேர் செஞ்சடையாய் அடியேனையும் அஞ்சலென்னே!” என்று தொழுகிறார் சுந்தரர்.

நந்திவர்ம பல்லவன் காலத்தில் திருப்பணி நடந்ததால், இவ்வூர் நந்திவர்ம மங்கலம், ராஜாஸ்ரய சதுர்வேதி மங்கலம் என்றானதாகக் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன.

கற்குடிநாதர் கோயில்

கற்குடிநாதர் கோயில்

மிருகண்ட ரிஷி, பிள்ளை வரம் கேட்டு ஈசனை வேண்ட, 16 ஆண்டுகளே ஆயுள் கொண்ட மார்க்கண்டேயர் மகனாக அவதரித்தார். மார்க்கண்டேயருக்கு 14 வயதானது. இன்னும் இரண்டு ஆண்டுகளில் மகன் மரித்துவிடுவானே என்று தவித்த பெற்றோர், மார்க்கண்டேயரிடம் உண்மையைக் கூற, அவரும் ஆயுள் பலம் வேண்டிப் பல திருத்தலங்களுக்குச் சென்று வழிபட்டார்.

அப்போது கற்குடிக்கும் வந்தார். அங்கு அவரின் அதீத பக்தியைக் கண்டு மெச்சி, ஈசன் உமையவளுடன் காட்சி தந்தார்; `உன்னைக் காக்கிறேன்’ என்றும் வாக்கு தந்தார்.

`காப்பேன்’ என வாக்களித்தது கற்குடியில்; காத்தது திருக்கடவூர். பக்தனைக் காக்கிறேன் என வாக்குத் தந்து, மார்க்கண்டேயரின் வாழ்வில் உய்வு தந்ததால், `உய்யக்கொண்டார்’ என்றானார், ஈசன். அங்குள்ள திருமலையோடு சேர்ந்து உய்யக்கொண்டான் திருமலை என்று ஊர்ப் பெயரும் வழங்கலாயிற்று.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *