கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் பெத்லகேம் இன்ஜினியரிங் கல்லூரி மற்றும் பெத்லகேம் நர்சிங் கல்லூரி இயங்கி வருகிறது.
இந்த நர்சிங் கல்லூரியில் 3-ம் ஆண்டு பயின்றுவந்த கேரள மாநிலம் நெய்யாற்றின்கரை கூதானி பகுதியைச் சேர்ந்த அன்ஸிஜி (21) கல்லூரியில் செல்போன் பயன்படுத்தியதாகவும், அதை ஆசிரியர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து மாணவி அன்ஸிஜி கல்லூரி கட்டடத்தின் மூன்றாவது மாடியில் இருந்து கீழே குதித்துள்ளார். படுகாயம் அடைந்த அவரை கல்லூரியைச் சேர்ந்தவர்கள் கருங்கலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.மாணவிக்கு கை மற்றும் கால்களில் பலத்த எலும்பு முறிவு இருந்ததால் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக வேறு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லும்படி தனியார் ஆஸ்பத்திரியில் கூறியுள்ளனர்.
இதையடுத்து கல்லூரி நிர்வாகம் மாணவியை மார்த்தாண்டம் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு ஆம்புலன்சில் அனுப்பி வைத்தது. அங்கு மாணவிக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் மரணமடைந்தார்.

இந்நிலையில் நர்சிங் மாணவியின் தாய் சோனியா (41) கருங்கல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் பெத்லகேம் நர்சிங் கல்லூரி முதல்வர் ஷீஜா மற்றும் கல்லூரி மேலாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.