திருச்சியில் ஸ்ரீரங்கம், திருவானைக்காவல், மலைக்கோட்டை தாயுமானவர் சுவாமி கோயில் என்று பல்வேறு ஆலயங்கள் அமைந்திருக்கின்றன. இவை தவிர்த்தும் அபல நூறு பழைமையான சிறப்புடைய ஆலயங்கள் பல உண்டு.
அவற்றில் ஒன்று திருச்சி பீமநகர் வேணுகோபால கிருஷ்ணன் கோயில். திருச்சி சென்ட்ரல் பஸ் நிலையத்தில் இருந்து 1 கி.மீ தொலைவில் பீம நகரில் உள்ளது ஆலயம். இது குழந்தை வரமளிக்கும் தலமாகவும், குறை தீர்க்கும் திருக்கோயிலாகவும் விளங்குகிறது.
மேலும் அண்ணனான கண்ணனுகுத் துணையாக அவன் தங்கை காளிகா பரமேஸ்வரியும் அருகே எழுந்தருளி இருப்பதும் விசேஷம்.

இந்தப் பகுதி மக்கள் வேணுகோபால சுவாமியைத் தங்களின் குடும்பத்தில் ஒருவராகவே கருதி பக்தி செய்கிறார்கள். `குழந்தையும் தெய்வமும் கொண்டாடுற இடத்துல” என்பது பழமொழி.
`எங்கெல்லாம் தன்னைக் கொண்டாடுகிறார்களோ அங்கே வந்து அமர்ந்துகொள்வான் கண்ணன். அப்படித்தான் இங்கே அமர்ந்து அருள்பாலிக்கிறார் வேணுகோபால சுவாமி.
ஆரம்பத்தில் பசுக்கள் உலாவிய இடமாகவும், பிறகு பிரிட்டிஷ் காலத்தில் ராணுவ வீரர்கள் தங்கி இருந்த இடமாகவும் இப்பகுதி இருந்துள்ளது. அப்போது இப்பகுதி மக்களின் காவல் தெய்வமாக வழிபடப்பட்டு வந்தாள் ஒரு சுயம்பு காளி. பிறகு இங்கிருந்த யாதவ மக்களின் வேண்டுதலுக்காக தங்கை மகாகாளிகா பரமேஸ்வரியுடன் அண்ணனான வேணுகோபாலனும் இங்கே குடி அமர்ந்தார் எனத் தலவரலாறு கூறுகிறது.