Tamilnadu
oi-Vishnupriya R
திருச்செந்தூர்: திருச்செந்தூர் அருகே குடிபோதையில் சொகுசு காரை ஓட்டிய நபரால் விபத்து ஏற்பட்டதில் அந்த காரில் வந்த மற்றொரு நபர் உயிரிழந்தார். பொதுமக்கள் விரட்டிச் சென்ற போது எதிரே வந்த வேன் மீதும் அந்த சொகுசு கார் மோதும் அதிர்ச்சி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம், நாயக்கன்பேட்டையைச் சேர்ந்தவர் வினோத் கண்ணன். அவர் நேற்றைய தினம் குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு வருகை தந்து முடி காணிக்கை செலுத்தினார்.

பின்னர் திருச்செந்தூர் அருகே உள்ள ஆறுமுகநேரியைச் சேர்ந்த உறவினர் வீட்டிற்கு வந்துள்ளார். இரவு 9 மணி அளவில் ஆறுமுகநேரியைச் சேர்ந்த லட்சுமணன், வினோத் கண்ணன் மற்றும் சுதாகர் ஆகிய மூவரும் சொகுசு காரில் குரும்பூர் நோக்கி வந்தனர்.
சொகுசு காரை லட்சுமணன் ஓட்டியுள்ளார். ஆறுமுகநேரியை தாண்டியதும் கார் ஒரு அரசு பேருந்தின் மீது உரசி விட்டு நிற்காமல் சென்றுள்ளது. அடுத்த சில நிமிடங்களில் கார் மின்னல் வேகத்தில் சென்றுள்ளது.
அப்போது டீ கடை அருகே நின்று கொண்டிருந்த இருசக்கர வாகனங்களை இடித்து விட்டு கார் நிற்காமல் சென்றது.
இதையடுத்து அங்கு நின்ற இளைஞர்கள் அந்த காரை விரட்டி பிடிக்க முயன்றனர். அப்போது கார் சாலையின் இருபுறமும் மாறி மாறி சென்றது. சிறிது தூரத்தில் எதிரே வந்த வேன் மீது கார் வேகமாக மோதியது.
இதையடுத்து பின்னால் விரட்டி வந்த இளைஞர்கள் காரில் வந்த நபர்களை பார்த்த போது மூவரும் மதுபோதையில் இருந்தது தெரியவந்தது.
மேலும் காரின் முன்பக்கத்தில் ஓட்டுநருக்கு அருகே அமர்ந்திருந்த வினோத் கண்ணன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்ற 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
இதுகுறித்து உடனடியாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆறுமுகநேரி போலீசார் இறந்தவர் உடலை தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். படுகாயம் அடைந்த இருவரையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில் சாலையில் மதுபோதையில் சென்று இருசக்கர வாகனத்தை இடித்த சொகுசு காரின் சிசிடிவி காட்சிகளும், அந்த காரை துரத்திச் சென்றபோது கார் வேன் மீது மோதிய காட்சிகளும் தற்போது இணையத்தில் வேகமாக பகிரப்பட்டு வருகிறது.