திருச்செந்தூர் ட்ரெண்ட்: `கையில் வேலுடன் தரிசனம் செய்த தி.மு.க அமைச்சர்கள்!'

Spread the love

முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை  புரிந்து வருகின்றனர்.  தற்போது பள்ளி கோடை விடுமுறையை முன்னிட்டு, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து எண்ணற்ற பக்தர்கள் கோவிலுக்கு திரண்டு வருகின்றனர். சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்துள்ள நிலையில் அரசியல் கட்சித் தலைவர்கள், தேர்தலில் போட்டியிட்ட பல கட்சியைச் சேர்ந்த வேட்பாளர்கள், பிரமுகர்கள் என பலரும் திருச்செந்தூரை நோக்கி படையெடுத்த வண்ணம் உள்ளனர்.

அமைச்சர்கள் சேகர்பாபு, அனிதா ராதாகிருஷ்ணன்

இந்த நிலையில், கடந்த 28-ம் தேதி திடீரென தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் வருகை தந்தார். அவருக்கு வேல் வழங்கப்பட்டது. கையில் வேல் ஏந்தி சுவாமி தரிசனம் செய்தார்.  அதோடு மட்டுமல்லாமல் திருச்செந்தூர் முருகன் கோயிலில் மிகவும் சிறப்பு வாய்ந்த சத்ரு சம்கார மூர்த்தியை தரிசனம் செய்தார்.  சூரசம்ஹார மூர்த்தியை தரிசனம் செய்தால் எதிரிகள் வீழ்த்தப்படுவார்கள் என்பது நம்பிக்கை. இந்த நிலையில், அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் முருகனை தரிசனம் செய்ய வருகை தந்தனர்.

கோவில் திரிசுதந்திரர்கள் கோயிலுக்கு வந்த அமைச்சர்களுக்கு கும்ப மரியாதை அளித்தனர்.  அதைத் தொடர்ந்து இருவருக்கும் சுமார் 5 அடி உயரம் கொண்ட வேலை திரிசுதந்திரர்கள் வழங்கினார்.  தொடர்ந்து, மூலவரான முருகனை வழிபட்ட அவர்கள், கோவில் உட்பிரகாரத்தில் உள்ள சண்முகர், தட்சிணாமூர்த்தி, சூரசம்கார மூர்த்தி உள்ளிட்ட சந்நிதிகளிலும் வழிபாடு செய்தனர். தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய்க்கு திரிசுதந்திரர்கள் சார்பில் 2 அடி உயர வேல் வழங்கப்பட்டது.  இந்த நிலையில் அதை விட உயரமாக 5 உயர வேலை முருகனை தரிசனம் செய்ய அமைச்சர்கள் சேகர்பாபு மற்றும் அனிதா ராதாகிருஷ்ணணுக்கு வழங்கப்பட்டுள்ளது.

கையில் வேலுடன் அமைச்சர்கள்

விஜய்க்கு போட்டியாக அமைச்சர்களுக்கு வேல் வழங்கப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது. திருச்செந்தூர் முருகன் கோயிலில் கந்தசஷ்டியன்று கையில் வைத்திருக்கும் வேலை வைத்துதான் சூரனை சம்ஹாரம் செய்வார் முருகப்பெருமான். அதே போல் கடந்த இரண்டு நாட்களில் திருச்செந்தூருக்கு வருகை தந்த முக்கிய அரசியல் பிரமுகர்கள் கையில் இந்த வேல் விளையாடி வருகிறது. யார் யாரை வீழ்த்துவார் என்பது மே 4-ம் தேதி தெரியவரும் என்பது தான் நிதர்சனமான உண்மை.!

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *