
தமிழகத்தின் புகழ்பெற்ற ஆன்மிகத் தலங்களில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் இன்று மீண்டும் அரசியல் கவனத்தை ஈர்த்துள்ளது. தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அதிகாலை நேரத்தில் கோயிலுக்கு வருகை தந்து சத்ரு சம்ஹார பூஜை நடத்தியது கவனம் பெற்றுள்ளது.
இன்று அதிகாலை விஜய் கோவிலுக்கு வருகை தந்தார். இந்த தகவல் அறிந்த பக்தர்கள், ரசிகர்கள், தொண்டர்கள் அவரைக்கான குவிந்தனர். கோவிலுக்குள் நுழைந்த அவர், மிகவும் சிறப்பு பெற்ற சத்ரு சம்ஹார மூர்த்தியை தரிசனம் செய்தார். பின்னர், அதனைத் தொடர்ந்து சத்ரு சம்ஹார பூஜையில் கலந்து கொண்டு வேண்டுதல் செய்தார்.
சத்ரு சம்ஹார பூஜை என்பது எதிரிகளை வெல்லவும், தீய சக்திகளை அகற்றவும் செய்யப்படும் ஒரு சக்திவாய்ந்த வழிபாடாக கருதப்படுகிறது. குறிப்பாக அரசியல் மற்றும் தொழில் துறைகளில் உள்ளவர்கள் இந்த பூஜையை அதிகமாக செய்து வருகின்றனர். இந்த யாகத்தை நடத்தினால் எதிரிகள் வீழ்வர் என்ற நம்பிக்கை பலரிடமும் நிலவுகிறது.
தற்போது விஜய் முதன்முறையாக இந்த சத்ரு சம்ஹார பூஜையை நடத்தி இருப்பது அரசியல் வட்டாரத்தில் முக்கியமான விவாதமாக மாறியுள்ளது. பூஜை முடிந்த பின், அவர் மூலவர் சன்னதிக்கு முன்பு தரையில் அமர்ந்து மனமுருக பிரார்த்தனையில் ஈடுபட்டார். அதனைத் தொடர்ந்து, சண்முகர், வள்ளி, தெய்வானை உள்ளிட்ட பல்வேறு சன்னதிகளிலும் அவர் தரிசனம் செய்தார். மேலும் தட்சிணாமூர்த்தி, பெருமாள், சூரசம்கார மூர்த்தி ஆகிய தெய்வங்களையும் வழிபட்டார்.
திருச்செந்தூர் முருகன் கோயிலில் சாமி தரிசனத்தை முடித்து விட்டு விஜய் புறப்பட்டுள்ளார். தூத்துக்குடி விமான நிலையத்திற்கு சென்று தனது தனி விமான மூலம் விஜய் மீண்டும் சென்னை திரும்புகிறார்.