Tamilnadu
oi-Velmurugan P
திருத்தணி : திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவின் நூறு கால் மண்டபம் இடிந்து விழுந்தது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான திருவாலங்காடு கோவிலின் நூறு கால் மண்டபம் இடிந்தது பக்தர்களிடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
திருத்தணி முருகன் கோவிலின் உபகோவிலான திருவாலங்காடு வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் என்பது தொண்டை நாட்டுப் பாடல் பெற்ற திருத்தலங்களுள் 15-ஆவதாக வைத்துப் போற்றுப்படும் திருத்தலம் ஆகும். சிவபெருமான் திருநடனம் புரியும் சபைகளுள் இங்கு அமைந்துள்ள இரத்தின சபையே முதற் சபை என்று சொல்லப்படுகிறது. இங்கு சிவபெருமான் உயரத் தூக்கிய திருவடியுடன் எண்தோள்கள் வீசி நின்று ஊர்த்துவ தாண்டவம் புரிகிறார். கால்களால் நடக்க அஞ்சிய காரைக்கால் அம்மையார், தலையால் நடந்து ஆடல் வல்லானின் திருவடிக்கீழ் என்றும் இருக்கும் பேறுபெற்ற மூத்த திருப்பதிகம் பாடிய முதன்மைத் திருத்தலம் இதுவாகும்.

அப்பர், சம்பந்தர், சுந்தரர், பட்டினத்தடிகள், அருணகிரிநாதர், கச்சியப்ப சிவாச்சாரியார், இராமலிங்க சுவாமிகள், பாம்பன் சுவாமிகள் ஆகியோரால் பாடப்பெற்ற திருத்தலம் வடாரண்யேஸ்வரர் சுவாமி கோவில் ஆகும். பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த முதலாம் இராஜேந்திரனின் 46 கல்வெட்டுக்களையும், மூன்று குவிண்டால் எடை கொண்ட 31 செப்பேடுகளையும் பெற்று இலக்கியச் சிறப்புடன், வரலாற்றுச் சிறப்பையும் பெற்றுத் திகழும் உன்னத திருத்தலம் என்று இந்து அறநிலையத்துறை கூறுகிறது. இந்த கோவிலில் 25 பசு மாடுகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவைகளுக்காக வைக்கோல் கட்டுகள் பங்குனி உத்திரவிழாவின் போது நடராஜருக்கு அபிஷேகம் நடைபெறும் நுறுகால் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தது.
கடந்த ஜூன் 25-ந்தேதி இரவு அப்பகுதியில் கோவில் ஊழியர்கள் குப்பைகளை எரித்தபோது எதிர்பாராதவிதமாக தீ வைக்கோல் கட்டுகளுக்கு பரவியது. இதில் அனைத்து வைக்கோல் கட்டுகளும் எரிந்து நாசமாகியது. இதிலும் நுறுகால் மண்டபத்தின் உள்பகுதி கருகி நாசமானது. தீ விபத்து ஏற்பட்ட நுறுகால் மண்டபத்தில் தொல்லியல் துறை அதிகாரிகள் கடந்த ஜூலை ஏழாம் தேதி ஆய்வு செய்தனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 12 மணி அளவில் நுறுகால் மண்டபத்தின் மேற்கூரை தொப்பென்று திடீரென இடிந்து விழுந்தது. இரவு நேரம் ஊழியர்கள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்த திருத்தணி கோவில் இணை கமிஷனர் ரமணி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் மண்டபத்துக்குள் வெளியாட்கள் யாரும் செல்லாதபடி பூட்டுப்போடப்பட்டிருக்கிறது. ஆயிரம் ஆண்டுகள் பழமையான வடாரண்யேஸ்வரர் கோவில் நூறு கால் மண்டபம் இடிந்து விழுந்தது பக்தர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

