திருப்பதி ஏழுமலையான் தரிசனம்: இலவச தரிசன டோக்கன்கள் விநியோகம் தொடங்கியது! – Kumudam

Spread the love

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நவம்பர் 18ஆம் தேதி தரிசனம் செய்வதற்கான இலவச சர்வதரிசன டோக்கன்கள் மற்றும் திவ்ய தரிசன டோக்கன்கள் விநியோகம் இன்று தொடங்கியுள்ளது.11,754 டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது!

திருப்பதியில் உள்ள பக்தர்கள் இலவசமாக தரிசனம் செய்வதற்காக மொத்தம் 9,794 சர்வதரிசன டோக்கன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த டோக்கன்களைப் பெறுவதற்கு எவ்விதக் கட்டணமும் கிடையாது. இதற்கான டோக்கன்கள் திருப்பதியில் உள்ள மூன்று மையங்களில் வழங்கப்படுகின்றன. ஸ்ரீநிவாசம் – பேருந்து நிலையம் அருகிலும்,  விஷ்ணு நிவாசம் – ரயில் நிலையம் எதிரிலும்,  பூதேவி காம்ப்ளக்ஸ் – அலிபிரி அருகிலும் டோக்கன்கள் வழங்கப்படுகின்றன.

மலைப்பாதை வழியாக நடந்து சென்று ஏழுமலையானை தரிசிக்க விரும்பும் பக்தர்களுக்காக ஸ்ரீவாரி மெட்டு திவ்ய தரிசனப் பிரிவில் 1,960 டோக்கன்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த டோக்கன்கள் பூதேவி காம்ப்ளக்ஸில் மட்டுமே வழங்கப்படுகின்றன. டோக்கன் பெற்ற பக்தர்கள் ஸ்ரீவாரி மெட்டு நடைபாதைக்குச் சென்று மலையேற வேண்டும். நடைபாதையில் உள்ள 1,200-வது படியில் தங்களது டோக்கனை ஸ்கேன் செய்வது கட்டாயமாகும். 
அவ்வாறு ஸ்கேன் செய்த பின்னரே திவ்ய தரிசனத்திற்கான நடைமுறையைப் பூர்த்தி செய்ய முடியும்.

டோக்கன்களை பெறும் பக்தர்கள் கடைப்பிடிக்க வேண்டிய சில விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. 

டோக்கன் பெறும்போது அசல் ஆதார் அட்டையைக் கட்டாயம் எடுத்துச் செல்ல வேண்டும். ஒவ்வொரு பக்தரும் நேரில் சென்று தனித்தனியாகப் பதிவு செய்ய வேண்டும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் டோக்கன்கள் வழங்கப்படும். டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள தரிசன தேதி மற்றும் நேரத்தை தவறாமல் பின்பற்ற வேண்டும். 

இலவச டோக்கன்களைப் பெற்றுத் தருவதாகக் கூறும் இடைத்தரகர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். டோக்கன்கள் இருப்பு தொடர்ந்து மாறக்கூடும் என்பதால், பக்தர்கள் விரைந்து சென்று டோக்கன்களைப் பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

மேலும் விவரங்களுக்கு திருப்பதி தேவஸ்தானத்தின் உதவி எண்ணான  155257-ஐத் தொடர்புகொள்ளலாவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *