ஒரே நேரத்தில் நடந்த 3 விஷயங்கள்.. தங்கம் விலை நிற்காமல் சரிய இதுதான் காரணம்! அடுத்து என்ன நடக்கும்? | Gold Prices Crash Below Rs 1 Lakh nearly after 11 months: What are 3 Major Reasons Behind the Fall

Spread the love

Business

oi-Vigneshkumar

சென்னை: தங்கம் விலை கடந்த சில மாதங்களாகவே தொடர்ந்து சரிந்து வருகிறது. குறிப்பாக இன்றைய தினம் தங்கம் விலை 11 மாதங்களுக்கு பிறகு முதல்முறையாக ஒரு லட்ச ரூபாய்க்கு கீழ் வந்துள்ளது. தங்கம் விலை இந்தளவுக்கு வேகமாக சரிவது ஏன்.. இதற்கு பின்னால் உள்ள 3 காரணங்கள் குறித்தும் நாம் விரிவாக பார்க்கலாம்!

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கடுமையாக சரிந்து வருவது இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.560 குறைந்துள்ளது. இதனால் ஒரு சவரன் தங்கம் ரூ.99,760க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.70 குறைந்து ரூ.12,470-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளி விலையில் எந்த மாற்றமும் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.190-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Gold Prices Crash gold gold rate

தங்கம் விலை

இதன் மூலம் 11 மாதங்களுக்குப் பிறகு ஒரு சவரன் தங்கம் விலை மீண்டும் ரூ.1 லட்சத்துக்குக் கீழ் வந்துள்ளது. கடந்தாண்டு டிசம்பர் 23ம் தேதி தங்கம் விலை முதல்முறையாக ஒரு லட்சத்தை கடந்து ரூ.1.02,160க்கு விற்பனையானது. தொடர்ந்து உயர்ந்த அது கடந்த ஜனவரி மாதம் ரூ.1.34 லட்சத்தை தொட்டு இருந்தது. இப்போது அது சரிந்து மீண்டும் ஒரு லட்ச ரூபாய்க்கு கீழ் வந்துள்ளது.

சர்வதேச சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 3,850 டாலராக உள்ளது. கடந்த ஜனவரி மாதம் 5,594.82 டாலர் என்ற வரலாற்று உச்சத்தை தொட்ட தங்கம், தற்போது அதிலிருந்து சுமார் 31.5 சதவீதம் சரிந்துள்ளது. கடந்த 2015ம் ஆண்டுக்கு பிறகு தங்கம் விலை ஒரே ஆண்டில் சந்திக்கும் மிக மோசமான சரிவு இதுவாகும். தங்கம் விலை இந்தளவுக்கு மோசமாக சரிய 3 காரணங்கள் கூறப்படுகின்றன.

1. அமெரிக்காவில் வட்டி விகிதம்

அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ், வரும் டிசம்பர் மாத கூட்டத்தில் வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் பணவீக்கம் அதிகமாக உள்ள நிலையில், அதை கட்டுப்படுத்த வட்டி விகிதங்களை உயர்த்தி ஆக வேண்டும். அமெரிக்க மத்திய வங்கி அதிகாரிகளும் வட்டி விகிதத்தை உயர்த்துவது போலவே கருத்துகளை கூறி வருகிறார்கள்.

அப்படி வட்டி விகிதம் உயரும்போது வங்கிகளில் வைப்புத்தொகை மற்றும் பத்திரங்கள் மூலம் அதிக வருவாய் கிடைக்க வாய்ப்புள்ளது. ஆனால், தங்கத்தை வைத்திருப்பதால் வட்டி வருவாய் கிடைக்காது. இதனால் முதலீட்டாளர்கள் தங்கத்தை விற்றுவிட்டு, வட்டி வருவாய் தரும் முதலீடுகளுக்கு மாறுகின்றனர். இதுவே தங்கம் விலை சரிய பிரதான காரணம்

2. அமெரிக்க டாலர்

அமெரிக்க டாலர் வலுவடைந்து வருவதும் தங்கத்தின் விலை வீழ்ச்சிக்கு இன்னொரு காரணமாக உள்ளது. சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை டாலரில் நிர்ணயிக்கப்படுகிறது. டாலரின் மதிப்பு உயரும்போது, பிற நாடுகளின் கரன்சிகளை பயன்படுத்தும் முதலீட்டாளர்களுக்கு தங்கம் வாங்குவது அதிக செலவாகிறது. இதனால் சர்வதேச அளவில் தங்கத்துக்கான தேவை குறையும்.

அதேபோல அமெரிக்க அரசு வெளியிடும் டிரஷரி பத்திரங்கள் வருவாயும் அதிகரித்துள்ளது. பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படும் இந்த பத்திரங்களில் அதிக வருவாய் கிடைக்கும்போது, முதலீட்டாளர்கள் தங்கத்தைவிட இதற்கு அதிக முன்னுரிமை அளிக்கின்றனர்.

3. கச்சா எண்ணெய் விலை

மூன்றாவது முக்கிய காரணம் கச்சா எண்ணெய் விலை. அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளது. இப்போது சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை 90 டாலரை தொட்டுவிட்டது. மீண்டும் அது 100 டாலரை உடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதனால் உலக நாடுகளில் பணவீக்கம் அதிகரிக்கும் அச்சம் ஏற்பட்டுள்ளது. பொதுவாக பணவீக்கத்துக்கு எதிரான பாதுகாப்பான முதலீடாகத் தங்கம் கருதப்படுகிறது. ஆனால், எண்ணெய் விலை உயர்வால் பணவீக்கம் அதிகரித்தால் மத்திய வங்கிகள் வட்டி விகிதங்களை உயர்த்தும். இது மறைமுகமாக தங்கத்தின் மீதான முதலீட்டு ஆர்வத்தை குறைக்கிறது.

அடுத்து என்ன

இந்த மூன்று காரணங்களும் ஒரே நேரத்தில் அமைந்ததாலேயே தங்கம் விலை இந்தளவுக்கு வேகமாக சரிந்து வருகிறது. இருப்பினும், இப்போது சர்வதேச மார்கெட்டில் ஒரு அவுன்ஸ் தங்கத்திற்கு 3,800 டாலர் என்பது பேஸ் லைனாக உள்ளது. அமெரிக்க அடுத்த மாதம் வட்டி விகிதத்தை மேலும் குறைக்கும் போது, இந்த பேஸ் லைன் உடைந்தால் தங்கம் விலை மேலும் சரிய வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *