புரட்டாசி என்றாலே பெருமாள் வழிபாடுதான். அதுவும் திருப்பதி பெருமாளை வழிபடுவது இந்த மாதத்தில் மிகவும் விசேஷம். திருப்பதியில் இந்த மாதம் முழுவதுமே கூட்டம் அதிகம் இருக்கும். எனவே திருப்பதி செல்லப் பலர் தயங்குவதுண்டு. அப்படிப்பட்டவர்களுக்கு ஓர் வரப்பிரசாதமாக அமைந்திருக்கிறது திருமலைவையாவூர்.
செங்கல்பட்டில் இருந்து சுமார் 18 கி.மீ. தொலைவில் உள்ளது திருமலை வையாவூர். திருப்பதியில் பாதி திருமலை வையாவூர் என்பார்கள் பெரியோர்கள்.
ராஜாதோடர்மால் என்ற மன்னன் திருப்பதி வேங்கடவனின் பக்தன். திருமலை திருப்பதி ஆலயத்துக்குப் பல திருப்பணிகளைச் செய்துள்ளான். ஒருநாள் அவன் கனவில் தோன்றிய திருமால், ‘`இங்கே மலை உச்சியில் எனக்கொரு கோயில் இருப்பதுபோல், இந்த மலையின் இன்னொரு பாகம் அமைந்துள்ள பகுதியிலும் எனக்குக் கோயில் கட்டு. அங்கேயும் குடியமர்ந்து, பூவுலகை ரட்சிப்பேன்!’’ என்றார். அத்துடன் பர்வதத்தின் மற்றொரு பாகம் விழுந்த இடத்தையும் காட்டி அருளினாராம்.
அவர் காட்டிய தலம் திருமலைவையாவூர் என்கிறது தலபுராணம். ஆதிவராக க்ஷேத்திரம் என திருப்பதி சிறப்பிக்கப்படுவது போன்றே, இந்தத் தலத்தையும் போற்றுகிறார்கள் பக்தர்கள். ஊரின் நடுவே ஓங்கி உயர்ந்துள்ள மலையில், சுமார் 450 படிகளைக் கடந்து செல்ல… திருமாலின் ஆலயத்தைத் தரிசிக்கலாம். வாகனப் பாதையும் உண்டு.
இங்கே அருள்மிகு பிரசன்ன வேங்கடேச பெருமாள் என்ற திருப்பெயருடன் அருள்கிறார் இறைவன் . திருப்பதியில் உள்ளது போன்றே, இங்கேயும் முதலில், ஆதிவராகரைத் தரிசித்த பிறகே வேங்கடேச பெருமாளைத் தரிசிக்க வேண்டுமாம்.