உயிரிழந்தோர் குடும்பத்தாருக்கு தக்க நிவாரணம் அளிக்கவும், படுகாயமடைந்தோருக்கு உரிய மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் எனவும் முதல்வர் ஸ்டாலின் மாடல் திமுக அரசை வலியுறுத்துகிறேன். பேருந்து விபத்துகள் தொடரும் நிலையில், சாலைப் பயணங்களுக்கான உரிய பாதுகாப்பு நெறிமுறைகள் பேருந்து ஓட்டுநர்கள் மட்டுமன்றி, அனைவரும் தவறாமல் பின்பற்றி, பாதுகாப்போடு பயணங்களை மேற்கொள்ள வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழக பா.ஜ.க மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், “சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் இரண்டு அரசுப் பேருந்துகள் மோதிக்கொண்ட விபத்தில் 11 பேர் உயிரிழந்ததாகவும், குழந்தைகள் பெண்கள் உட்பட 40-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளதாகவும் வரும் செய்திகள் மிகுந்த மன வேதனையளிக்கின்றன. தென்காசியில் நடந்த உயிரிழப்புகளின் ரணம் ஆறும் முன்பே, மீண்டுமொரு பெரும் விபத்து நடந்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது.
உயிரிழந்தோரின் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த இரங்கல்களையும் அனுதாபங்களையும் கனத்த இதயத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள காயமடைந்தவர்கள் முழு குணமடைந்து விரைவில் வீடு திரும்ப வேண்டுமென இறைவனிடம் வேண்டிக் கொள்கிறேன். இத்தொடர் சாலை விபத்துகளைத் தடுக்கும் வகையில் முறையான விழிப்புணர்வு ஏற்படுத்துவதோடு, இதற்கான காரணிகளை அறிந்து, அவற்றிற்கு உடனடியாகத் தீர்வு காண வேண்டுமெனவும் திமுக அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
பா.ம.க தலைவர் அன்புமணி, “சாலை விபத்துகளை தடுக்க நடவடிக்கை தேவை! சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே இரு அரசு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட கொடிய விபத்தில் 11 பேர் உயிரிழந்திருப்பதாகவும், 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்திருப்பதாகவும் வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சியும், வேதனையும் அளிக்கின்றன. இந்த விபத்தில் உயிரிழந்த அனைவரின் குடும்பங்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்த அனைவருக்கும் தரமான மருத்துவம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.