“திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏறிவிட்டது.. CM விஜய் சார்.. இனிமேலாவது வாய் திறந்து பேசுங்கள்” | lamp has been lit at Tirupparankundram: CM Vijay, sir—at least now, please open your mouth and speak

Spread the love

Tamilnadu

oi-Velmurugan P

மதுரை: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டு, அவரது தலைமையிலான அரசின் அதிகாரிகள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை எதிர்கொண்டுள்ளனர். மறுபுறம் தீபமும் இன்று ஏற்றப்பட்டு விட்டது. ஆனால் நீதிமன்ற தீர்ப்பு வந்து 8 நாட்களாகியும் இன்று வரை முதல்வர் விஜய், தவெக அரசின் நிலைப்பாடு என்ன என்று வாய் திறக்கவே இல்லை. இதனால் முஸ்லிம்கள் மற்றும் இந்து அமைப்பினர் என இரு தரப்பினருமே, முதல்வர் ஏன் அமைதியாக இருக்கிறார். அவர் பேசினால் தானே என்ன நிலைப்பாட்டில் இருக்கிறார் என்பது தெரியவரும் என்று சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகிறார்கள்.

திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் முதல் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டு எட்டு நாட்கள் ஆகிவிட்டது. தலைமைச் செயலாளர் மற்றும் டிஜிபி வரை உச்ச நீதிமன்றத்தால் அவமதிப்பு வழக்கில் கண்டிக்கப்பட்டுள்ளார். நேரில் ஆஜராக உள்ளார்கள். திருப்பரங்குன்றம் மலையை மத்திய ரிசர்வ் காவல் படை கட்டுப்பாட்டில் எடுத்து கொண்டுள்ளது. கோயில் நிர்வாக அறங்காவலர்களை உச்ச நீதிமன்றம் மொத்தமாக கலைத்துவிட்டத. நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட பொறுப்பாளர்கள் முன்னிலையில் குறிப்பிட்ட தூணில் தீபமும் ஏற்றப்பட்டுவிட்டது – ஆனால், முதலமைச்சர் விஜய் தரப்பிலிருந்து இதுவரை எந்த கருத்தும் வராதது விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

lamp has been lit at Tirupparankundram CM Vijay sir at least now please open your mouth and speak

ஏனெனில் திருப்பரங்குன்றம் விவகாரம் இப்போது தீபம் ஏற்றுவது தொடர்பான பிரச்சினை என்று சுருக்கிவிட முடியாது. மத உரிமை, மத நல்லிணக்கம், மாநில அரசின் நிர்வாகப் பொறுப்பு, நீதிமன்ற உத்தரவைச் செயல்படுத்தும் விதம் ஆகிய நான்கு விஷயங்கள் அடங்கி உள்ளது. திருப்பரங்குன்றம் விஷயத்தில் உச்ச நீதிமன்றம் மிக கடுமையான நிலைப்பாட்டை எடுத்துள்ள போதும், முதலமைச்சர் ஏன் நேரடியாக மக்களிடம் பேசவில்லை என்பது முஸ்லிம் மற்றும் இந்து அமைப்பினரிடையே விமர்சனத்தை அதிகமாக்கி உள்ளது.

முஸ்லிம் அமைப்பினர் கருத்துக்கள்

முஸ்லிம் சமூகத்தினர் அனைவரும் ஒரே மாதிரியான கருத்தைக் கொண்டிருக்க வாய்ப்பு கிடையாது. எனினும் ஆரம்பம் முதலே தீபம் ஏற்ற எதிர்க்கும் முஸ்லீம் அமைப்புகளை பொறுத்தவரை, தர்காவுக்கு அருகிலேயே தீபம் ஏற்றப்படுவதால், தர்காவின் வழிபாட்டு உரிமை மற்றும் அமைதியான செயல்பாடுகள் பாதிக்கப்படுமா என்ற அச்சத்தை வெளிப்படுத்துகிறார்கள். இன்று தீபம் ஏற்றி உள்ளது போன்ற நிகழ்வு எதிர்காலத்தில் நடந்தால், மத அடிப்படையிலான புதிய உரிமைக் கோரிக்கைகளுக்கு முன்னுதாரணமாக மாறுமா? என்று அஞ்சுகிறார்கள். அதேபோல் தர்காவின் பாதுகாப்பு உண்மையில் உறுதி செய்யப்படுமா? மத நல்லிணக்கத்தைப் பாதுகாப்பதில் விஜய் தலைமையிலான அரசு போதுமான கவனம் செலுத்துகிறதா என்ற கேள்விகளை முஸ்லிம் அமைப்புகள் முன்வைக்கின்றன.

மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் ஜவாஹிருல்லாவும் இந்தத் தீர்ப்பு குறித்து முன்னதாக கூறும் போது, மாநில நிர்வாக அதிகாரம், வழிபாட்டு மரபுகள், சமூக அமைதி ஆகியவற்றில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கவலையை வெளிப்படுத்தினார்.

இந்து அமைப்பினர் வாதம் என்ன

மறுபுறம் இந்து அமைப்புகள் பாஜகவினர் பார்வை அப்படியே வேறுவிதமாக இருந்தது. விஜய் மீதான விமர்சனங்களும் கூட கடுமையாக இருந்தது. நீண்டகாலமாகக் கோரப்பட்ட இடத்தில் தீபம் ஏற்றுவதற்கான நீதிமன்ற உத்தரவு நிறைவேறி உள்ளதாக வரவேற்றுள்ளனர்.இந்து பக்தர்களின் வழிபாட்டு உரிமை நிலைநாட்டப்பட்டதாக நம்புகிறார்கள். – முந்தைய உத்தரவைச் செயல்படுத்தத் தவறிய அதிகாரிகளுக்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்திருப்பதை வரவேற்றுள்ளனர்.

நயினார் நாகேந்திரன்

முன்னதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கூறுகையில், திருப்பரங்குன்ற திருக்கோவிலுக்கு சொந்தமான தீபத்தூணில், இந்த வருடம் மட்டும் கார்த்திகை தீபம் ஏற்றுங்கள் என உச்சநீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால உத்தரவை, தவெக அரசு தெரிந்தே உதாசீனப்படுத்தியது யாருக்கும் தவறாக தெரியவில்லையா?

இந்திய அரசியலமைப்பின் சட்டப்பிரிவு 144-இன் படி, அனைத்து மாநில அரசுகளும் நிர்வாக அமைப்புகளும் உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு உட்பட்டு நடக்க வேண்டும் என்பதை மீறி, சிறுபான்மையினரின் வாக்குகளுக்காக தவெக அரசு வேண்டுமென்றே தமிழகத்தில் நிர்வாகச் சீர்குலைவை உண்டாக்கியது யாருக்கும் தவறாக தெரியவில்லையா? உச்சநீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்தக் கூடாது என்பதற்காக அவசர அவசரமாக அறங்காவலர் குழு கூட்டப்பட்டதும், திருக்கோவிலின் ஸ்தானீக பட்டர்களை மிரட்டியும், கலந்தாலோசிக்காமலும் ஒரு பொய்யான அறிக்கை வெளியிடப்பட்டதும், தவெக அரசின் காவல்துறையும் மாவட்ட ஆட்சியரும் சட்டத்திற்கு எதிராக ஆணவத்துடன் செயல்பட்டதும் யாருக்கும் தவறாக தெரியவில்லையா?” என்று கடுமையான கேள்வி எழுப்பி இருந்தார்.

வாய் திறக்காத முதல்வர் விஜய்

ஆனால் முதல்வர் விஜய், திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவது தொடர்பான உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. அதேபோல் உச்ச நீதிமன்றத்தின் கடுமையான விமர்சனங்கள் குறித்து எந்த விளக்கமும் அளிக்கவில்லை.. இன்னும் சொல்லப்போனால், தவெகவின் நிலைப்பாடு என்ன, உச்ச நீதிமன்ற உத்தரவு ஏன் நிறைவேற்றப்படவில்லை , ஒருவேளை தீபம் ஏற்ற விரும்பி இருந்தும், நிறைவேற்ற முடியாத சூழல் தான் திடீரென அறங்காவலர்களால் உருவானது என்ற மதுரை ஆட்சியரின் கருத்துதான் முதல்வரின் நிலைப்பாடு என்றால், அதனை வெளிப்படையாக முதல்வர் விஜய் அறிவித்து இருக்கலாம். அதனையும் அவர் கூறவில்லை.. ஒருவேளை தீபம் ஏற்றுவதையே விரும்பவில்லை. உச்ச நீதிமன்ற தீர்ப்பை கடுமையாக எதிர்க்கிறோம் என்றால், அதனையும் வெளிப்படையாக அறிவித்து இருக்க வேண்டும். ஆனால் இந்த இரண்டுமே இல்லாமல் முதல்வர் விஜய் வாயை திறக்காமல் இருப்பது தான் பெரிய விமர்சனத்தை ஏற்படுத்தி உள்ளது.

நம்பிக்கை போய்விடும்

உச்சநீதிமன்ற உத்தரவை அரசு மதித்து நடைமுறைப்படுத்துவோம் என்றும், திருப்பரங்குன்றம் முருகன் கோயிலின் வழிபாட்டு உரிமை பாதுகாக்கப்படும் என்றும், சிக்கந்தர் தர்காவின் வழிபாட்டு உரிமையும் பாதுகாப்பும் உறுதி செய்யப்படும் என்றும், ந்த மதத்தினருக்கும் அச்சம் ஏற்படாத வகையில் அரசு செயல்படும் என்றும் முதல்வர் விஜய் கூறியிருக்க வேண்டும். பேசினால் ஒரு மதத்தினருக்கு ஆதரவாகப் பேசுகிறார் என்று மற்றொரு தரப்பு விமர்சிக்கும் என்று நினைத்து பேசாமல் விஜய் விட்டுவிட்டதாகவே கூறப்படுகிறது. இப்படி பேசாமல் விடுவது தான் இரு தரப்பினரிடமும் நம்பிக்கையை இழந்துவிடுவார் என்பது தான் அரசியல் விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.

நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *