அதைத் தொடர்ந்து தொண்டர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில், அரோகரா, பாரத் மாதா கி ஜே கோஷங்கள் தொடர்ந்து எழுப்பப்பட்டது. இடையிடையே முருக பக்திப் பாடல்களும் இசைக்கப்பட்டது. அதேநேரம், கூட்டத்தை கட்டுக்குள் வைத்துக்கொள்ளும் பணியை சி.ஆர்.பி.எஃப் வீரர்கள் கவனித்துக்கொண்டனர். மாலை 4 மணி அளவில் அந்தப் பகுதியில் இருக்கும் வீடுகளின் மொட்டை மாடியில் கூட்டம் கூடத் தொடங்கியது. அதேநேரம், கூட்டத்தை அமைதிப்படுத்தும் பணியும் மேற்கொள்ளப்பட்டது. இதற்கிடையே தீபமேற்றும் குழு மலையில் தீபக்கொப்பறையை தயார் செய்து கொண்டிருந்தனர்.
மாலை 4:30 மணியளவில் ஓய்வுப்பெற்ற நீதிபதிகள் குழு தீபமேற்றப்படும் இடத்துக்குச் சென்றடைந்தனர். அதைத் தொடர்ந்து காவல்துறை, சி.ஆர்.பி.எஃப் வீரர்களின் கட்டுப்பாட்டில் இருந்த திருப்பரங்குன்றம் மலை மீது சரியாக 5 மணியளவில் தீபம் ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து, மலையடிவாரத்தில் இருந்த பா.ஜ.க உள்ளிட்ட இந்து அமைப்பினர் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர்.